ஒவ்வொருவருக்கும் வாழ்க்கையில் ஒவ்வொரு குறிக்கோள் இருக்கும். ஒவ்வொரு பருவத்தில் ஒவ்வொரு குறிக்கோளோடு நாம் செயல்படுகிறோம். இளம் பருவத்தில் கல்வி கற்பதும் (எனக்கு விளையாடுவதுதான் என்கிறீர்களா, எனக்கும் அப்படித்தான்), பின்னர் வேலை கிடைக்க முயல்வதும், பின்னர் பணம் ஈட்டுவதும், ஈட்டிய பணத்தை சேமிப்பது/பெருக்குவதும், மண வாழ்க்கையில் இல்லறம் நடத்துவதும், முதுமைப்பருவத்தில் தம் சந்ததியருக்கு வழிநடத்துதலும் பொதுவான குறிக்கோள்களாக நம் சமூகத்தில் இருந்்து வருகின்றன.

மேலே சொன்னது, எழுதுவதற்கும், படிப்பதற்கும் எளிதாக இருந்தாலும், இந்த வாழ்க்கைச் சக்கரத்தில் தான் எத்தனை அல்லல்கள், எத்தனை தடுமாற்றங்கள்? நாம் நினைத்த காரியம் நடக்காவிட்டால், எதற்காக வாழ்கிறோம் என்ற கேள்வி நம்முள் பெரிதாக எழுகிறது. நம் மொத்த வாழ்க்கையும் எதோ ஒரு சிறு நிகழ்வினால் நிர்ணயக்கப்பட்டுள்ளதுபோல். நம் தோல்விகளும், ஏமாற்றங்களும் நம்மை வாழ்க்கையின் குறிக்கோள்தான் என்ன என்ற கேள்வியை எழுப்புகின்றன.

வேடிக்கை என்னவென்றால், தேல்விகளும் ஏமாற்றங்களும் ஏற்்படும்போதுதான் இவற்றைப்பற்றி சிந்திக்கிறோம். இயற்கையாகவே நாம் ஏமாற்றங்களை தவிர்த்து வாழ முடியாதா? அல்லது தோல்விகள் ஏற்பட்டாலும் நம் மனதை பாதிக்காத வகையில் நம் மனதை பக்குவப்படுத்திக்கொள்ள முடியாதா?

இந்த கேள்விக்கும் இன்ன பிறவற்றிற்கும் என் சிற்றறிவிற்கு எட்டியவரை விடைபெயர முயல்கிறேன்.

முடியும். நம் மொத்த வாழ்விற்கும் குறிக்கோள் இதுவென்று ஒன்றினைக் கொண்டோமாயானால், அது முடியும். எந்த சூழ்நிலையிலும், எந்த தடுமாற்றம் ஏற்பட்டாலும் , என் வாழ்க்கைக் குறிக்கோள் நிறைவேற என்ன செய்ய வேண்டும் என்று கேள்வி எழுப்பினால் போதும், தெளிவு பிறந்துவிடும்.

என்னது, நம் மொத்த வாழ்வுக்கும் ஒரு பெரிய குறிக்கோள் உண்டா?

ஆம். தமிழில் இதனை அழகாக ‘ அறம் பொருள் இன்பம் வீடு’ என்பார்கள். பகவத் கீதையும்் இதையே, ‘தர்மம் அர்தம் காமம் மோக்க்ஷம்’ என்கிறது.

ஏதோ பெரிதாக சொல்வீர்கள் என்று எதிர்பார்த்தால், இப்படி சுலபமாக இருக்கிறதே?

உலகத்தின் மிக உன்னதமான கருத்துக்கள் எல்லாமே சுலபமானதே. நாம் தான் அவற்றின் மதிப்புத் தெரியாமல் உதாசீனப்படுத்தி வந்துள்ளோம்.
பொருள் மற்றும் இன்பம் பெறுவது நம் மானிடப்பிறப்பின் இயல்பான குணமே. புத்த மதம் சொல்வதைப்போல் அவற்றை வெறுத்து ஒதுக்க வேண்டிய அவசியமில்லை. இந்து மதத்தின் உயரிய வழிமுறை அறம் வழியே பொருள் மற்றும் இன்பம் ஈட்டுவதே. அதுவே வாழ்க்கையின் முக்கிய நெறிமுறை.

அறம் என்றால் என்ன?

முதுபெரும் இந்தியாவில் அறம் என்னவென்று எடுத்துரைக்கும் நூல்களை பட்டியலிடத்தொடங்கினால் எண்ணி மாளாது. நாம் அனைவரும் கொஞ்சமாவது படித்திருப்போம். ஆனால் அவை ஏட்டுச் சுரைக்காயாகவே விட்டு விட்டோம். அவற்றைக் கூட்டுச் சுரைக்காயாக பயன்படுத்திக்கொள்ளும் கலை நம்மிடமே உள்ளது. அறம் என்றால் என்னவென்று திருவள்ளுவர் 380 குறள்களில் சொல்லியிருக்கிறார். கசடற கற்போம், கற்ற வழி நிற்போம்.

வாழ்க்கையின் இறுதியான குறிக்கோள் வீடுபேறு அடைதல். எல்லாவற்றையும் துறந்த துறவியால் மட்டும் தான் வீடுபேறு (மோக்க்ஷம்்) அடைய முடியும் என்பதல்ல. அறம் வழி நின்றவர் அனவரும் அடையலாம். மேலும் மோக்க்ஷம் என்பது உண்மையில் ஒரு இடமல்ல, அது ஒரு நிலை. குழந்தைப்பருவம் போல ஒரு நிலை. என்ன, ஒரே ஒரு வேறுபாடு. மோக்க்ஷம் என்னும் நிலையை அடைந்தவர் குழந்தை அல்லது மற்ற நிலைகளை மீண்டும் மீண்டும் அடைய வேண்டியதில்லை. இந்த கடைசி நிலையைப் பற்றி அறிந்து கொள்ளவோ, யொசித்துக்கொண்டு இருக்கவோ வேண்டியதில்லை. நம் செயலிகளில் தினம் தினம் அறம் வழி நடந்து நம்மை நாமே பக்குவப்படுத்திக் கொள்வதால், தானாகவே அந்நிலை நமக்குத் தெளிவு பெறும். தன்னை அறிதல் வேண்டும் என்ற உந்துதல் தானாகவே ஏற்படும்.

If Winter comes, Can Spring be far behind?