வாழ்க்கைப் பயணம் என்ற தலைப்பில் எழுதிய பதிவில் துறவு பற்றி மேலும்எழுதாலாமே என்று தோன்றியதால், இந்த பதிவு!.

துறவு என்றவுடன் நினைவுக்கு வருவது, முனிவர் அல்லது சன்யாசி.
எல்லாவற்றையும் துறந்துவர் என்பதால், அல்லது, அவ்வாறு சொல்லப்பதுவதால்.

ஒருவர் எல்லாவற்றையும் துறந்தால் அவர் எப்படி இருக்க முடியும்?
ஏதோ ஒன்றை பற்றிக்கொண்டு இருந்தால் தானே அவர் இருக்க முடியும்? அப்படி இருந்தால் அவர் எப்படி துறவி ஆவார்?இல்லற வாழ்க்கையை வெறுத்து, இல்லற வாழ்க்கையிலிருந்து ஒதுங்குபவர் துறவியாகிறார் என்று கொண்டால்,ஒன்றை வெறுத்து இன்னொன்றை கொள்பவர் எப்படி துறவியாக முடியும்?

துறவு என்பது ஒருவர் தேர்ந்தெடுத்துக் கொள்ளும் நிலை அல்ல. துறவுதான் அது ஆட்கொள்ளும் மனிதரைதேர்ந்தெடுக்க வேண்டும்.

ஸ்வாமி தயானந்த சரஸ்வதி சொல்கிறார்:
“துறவு என்பது நாம் தேர்ந்தெடுப்பதல்ல. துறவு மனப்பான்மையை நம்மிடம் நாம் உணர வேண்டும். அது நாமே நிறைவு பெற்றவர் என்றும் திருப்திக்கும், மன நிறைவுக்கும் நாம் எதையும் சார்ந்து இல்லை என்ற உண்மையை அறிவதால் வருவதாகும். துறவு மனப்பான்மையை கட்டாயத்தினால் பெற முடியாது. இந்த உலகத்தில் இருந்து கொண்டே நம் கடமைகளைச் சரியான மனோபாவத்துடன் செய்து துறவு மனப்பான்மையைக் கனியவைக்க வேண்டும். கர்ம யோகத்தினால், மனம் பக்குவம் அடையும்போது விருப்பு வெறுப்புகளின்ஆதிக்கத்திலிருந்து விலகும்போது, துறவு மனப்பான்மை தானக கனிந்து வரும்.”

மனிதர் வாழ்வில் அடைய வேண்டிய இலக்குகள் நான்காக இந்து மதம் சொல்கிறது. அவையாவன: தர்மம் அல்லது அறம், அர்த்தம் அல்லது செல்வம், காமம் அல்லது இன்பம் மற்றும் இறுதியில் மோட்சம் ஆகும். இதில் மூன்று இலக்குகளை அடைந்திடும் பருவத்திற்கு சம்சாரம் என்று பெயர். சம்சார வாழ்வின் சாரம் என்னவென்றால் : அற வழியில் நடந்து ஒருவர் பொருளை ஈட்ட வேண்டும். மனைவி மக்களோடு தூய இல்லற வாழ்வில் எல்லா வளங்களும் பெற்று இன்பத்தினை துய்க்க வேண்டும்.

இல்லற வாழ்க்கையில் நன்கு பக்குவப்பட்ட பின், ஒருவர் அடுத்த நிலையான துறவு நிலைக்கு தயாராகிறார். துறவு நிலையில் அடுத்த இறுதி இலக்கான மோட்ச நிலைக்கு தன்னை தயார் செய்து கொள்கிறார். இல்லற வாழ்க்கையில் ஒருவர், வாழ்க்கையை முழுதுமாக வாழ்வதில் தன் மனதை செலுத்துகிறார். துறவுக்காக அவர் சம்சார வாழ்க்கையில் வாழ்வதில்லை. தானாக மனம் பக்குவப்பட்டு, துறவுக்கு தயார் செய்யுமே தவிர சம்சார வாழ்க்கையில் துறவைப் பற்றி நினைப்பதில்லை. இந்த வகையில் இரண்டும் ஒன்றுக்கொன்று நேரெதிரானது எனச் சொல்லலாம்.

இறுதி இலக்கான மோட்சத்திற்கான துறவு வழியில் நடந்திட அதற்கு முந்தைய பாதையான சம்சாரம் அவசியமானது. துறவு வாழ்க்கையில் பக்குவப்பட்டு, இறுதி இலக்கான மோட்சம் என்னும் மறுபிறவி இல்லாத நிலையினை அடைய தயாராகிறார். இதுவே இந்து மறைகளில் பொதுவாக உரைக்கப்பட்ட பாதை. ஆயினும் சம்சார வாழ்க்கையில் இருந்து கொண்டே, மோட்ச நிலையினை அடைய இயலும் என்றும் அவ்வாறு மோட்சம் அடைந்த மகான்களும் உண்டென சொல்லலாம்.