சென்ற  பகுதியை தொடர்ந்து, இந்த பகுதியில் மேலும் சில சுலோகங்களைத் தருகிறேன். படித்தவற்றில் என் சிற்றறிவிற்கு எட்டிய அளவில் இயம்புகிறேன்.   பிழைகள் இருப்பின் பொருத்தருளவும்.

22.

ஓடும் தெளிந்த நீரில் தெரியும் வானமும், நிலவும் பார்ப்பதற்கு நகர்ந்து நீரில் ஓடுவதாக
அறியாதார் கொள்வார். அதுபோல மனதின் போக்கு, விருப்பம் மற்றும் குறைபாடுகளுக்கு ஆன்மாவே காரணம் என்று தவறாக கொள்வார் அறியாதவர்.  மனமானது – நீரில் தெரியும் நிலா, நிஜமான நிலாவான ஆன்மா அல்ல,  அதன் பிம்பமே.

23.

விருப்பம், ஆசை, துன்பம், இன்பம், வலி, ஓய்வு ஆகியவை மனம் செயல்படும் வரைதான்.
ஆழ்ந்த கனவுகளற்ற தூக்கத்தில் அவையெல்லாம் உணர இயலாதவை, ஏனென்றால் அப்போது மனம் செயல்படுவதில்லை.
ஆகவே, இவையெல்லாம் மனதின் உணர்வுகள் தானே தவிர, ஆன்மாவுடையது அல்ல.

24.
அப்படியானால் ஆன்மா எப்படிப்பட்டது?

என்றென்றும் நிலையானது.
தூய்மையானது.
நிதர்சனமானது.
சித் ஆனது.
ஆனந்தம் ஆனது.

இவையெல்லாம் ஆன்மாவின் குணங்கள் என்று சொல்ல முடியாது.
இவை சூரியனின் ப்ராகசத்தையும், சதாரண தண்ணிரின் குளுமையும், நெருப்பின் வெம்மையும் போல –
இயற்கையாக இயைந்து இருப்பன ஆன்மாவிற்கு.
இவையெல்லாம் எப்போதும் சற்றும் குறைவில்லாமல் இருந்து வருவன.
மாயையினால் ஆன்மாவின் உண்மை நிலையை நம்மால்தான் உணர்ந்து கொள்ள இயலவில்லை.

25.
மனம் மாறும் தன்மை உடையது.
ஆன்மாவோ மாறாத் தன்மை கொண்டது.
மனதால் ‘நான் எல்லாம் அறிந்து கொண்டேன்’ என்று நினைப்பதால், மனம் ஆன்மாவின் நிலையை அடைய இயலாது.

26.
என்றும் விகாரமில்லாதா ஆன்மா புத்தியும்
என்றும் அறிவின்றி அதேயென்றாலும் ஒன்றிய
ஜீவனே எல்லாமெனத் தெரிவான்செய்வான் காண்பான்
பாவத் தான்மாயோகி பார்.

என்றும் மாறுதல்களை அடையா ஆன்மாவும், தன் புத்தியும் சரிநிகர் என தவறாக அறிவான்.
ஒருவருடைய அறிவும், மனதின் எண்ணங்களும் இடம், நேரம் போன்றவைகளால்
வரையுருக்கப்பட்டது. ஆனால் ஆன்மாவே எல்லையில்லாத் தன்மையுடையது.

ஜீவன் தன் மனதில் சித்தின் பிம்பத்தினால், ஆன்மாவின் குணங்கள் எல்லாம்
மனதில் பிம்பத்திலும் தெரிவதால், இரண்டும் ஒன்றென – தவறாக நினைக்கிறான்.

27.
தன்னைத்தான் ஜீவனைத் தாம்பிலே பாம்புபோல்
எண்ணியே அச்சமுறுகின்றான் – தன்னைத்தான்
ஜீவனால் அன்யபரமன் ஆன்மாவென்று
தெரிந்ததனால் அவன் ஞானியாவான்.

சுருண்டு இருக்கும் தாம்புக்கயிற்றைப் பார்த்து பாம்மென்று திகில் கொள்வான் அறிவிலியான்.
ஆன்மாவை ஜீவன் என்று நினைப்பாரும் அவ்வாறே அஞ்சுவார். ஆன்மா ஜீவனல்லா, பிரம்மம் என்று நினைப்பாருக்கு அந்த பயம் இல்லை.

இரண்டு என்று கொள்வாருக்குத்தான் பயமெல்லாம். இரண்டு என்பதே இல்லை. இருப்பதெல்லாம் ஒன்றே ஒன்று.