கபீரின் கானங்களில் ஒன்று:

எங்கே தேடுவாய் என்னை?

நீ செல்லும்
புனித யாத்திரையிலா? இல்லை.

நீ வணங்கும்
உருவங்களிலா? இல்லை.

நீ செல்லும்
கோயில் அல்லது மசூதியிலா? இல்லை.

கபாவிலா அல்லது கைலாசத்திலா? இல்லை.

நான் உன்னுடன் தான் இருக்கிறேன், மனிதா,
உன்னுடன் தான்.

எங்கே தேடுவாய் என்னை?
நீ முணுமுணுக்கும்
பிராத்தனைகளிலா? இல்லை.

நீ கண்முடி அமர்ந்திருக்கும்
த்யானத்திலா? இல்லை.

நீ அனுதினம் அனுசரிக்கும்
நோன்புகளிலா? இல்லை.

கால்மடித்து, கைமடித்து செய்யும்
யோகாசனங்களிலா? இல்லை.

எதுவும் வேண்டாம் என்று
சொல்லும் துறவிலா? இல்லை.

உடலிலா அல்லது அதில்
உறையும் உயிர் சக்தியிலா? இல்லை.

எங்கும் வியாபித்திருக்கும்
அண்ட வெளியிலா? இல்லை.

விதையிலிருந்து விருட்சம் வரச்
செய்யும் இயற்கையிலா? இல்லை.

எங்கே தேடுவாய் என்னை?

தேடு – தேடி என்னைக் கண்டெடு.
தேடும் அந்த தருணத்தில் –
கபீர் சொல்கிறான் தம்பி,
கவனமாகக் கேள்,
உன் நம்பிக்கை எங்கிருக்கிறதோ
அங்குதான் நான் இருக்கிறேன்!

எவ்வளவு எளிமையாக இருக்கிறது பார்த்தீகளா கபீரின் கானம். இதன் ஹிந்தி மூலம், என் மொழிபெயர்ப்பை விட மிக எளிதாக இருக்கும்!

இந்த கானத்திற்கு விளக்கம் ஏதும் தேவையில்லை, இருப்பினும் இரண்டொரு வரிகளை சேர்த்தால் தப்பில்லை.

இந்த நாட்டில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு இடத்தில் ஒவ்வொரு வழியில் இறைவனைத் தேடுகின்றனர். அவரவர்க்கு தம் வழிதான் சரியான வழி, மற்றதெல்லாம் உதவாக்கரை என்ற இருமாப்பு வேறு.

ஆனால் அனைத்து மதங்களின் பாதைகளும் வழிகளும் ஒரே இறைவனைத்தான் அடையாளம் காட்டுகின்றன என்பதை அவர்கள் உணர்வதில்லை.  அன்பே இறைவன் என்ற உண்மையை அறியாத அவர்கள் வாய்ச்சண்டையிலும், வாக்குவாதத்திலும்  தங்கள் சக்தியையும் நேரத்தையும் செலவு செய்வர்.

அவரவர் நம்பிக்கையைக்கொண்டு, எங்கெங்கும் வியாபித்திருக்கும் இறைவனை கண்டுகொள்வது மிக மிக எளிதானதே என்கிறார் கபீர் மகான்.