‘நிஷ்காம கர்மா’ என்ற சொல்லை பயன்படுத்தக் கேள்வி பட்டிருப்பீர்கள்.  அப்படி என்றால் என்று பார்ப்போம். கர்மம் என்றால் செயல், ‘நிஷ்காம கர்மம்’ என்றால், ‘ஆசைகளிலும் விளைவுகளிலும் எதிர்பார்ப்புகளிலும்’ மனதை விட்டுவிடாத செயல் என்று சொல்லலாம். பகவத் கீதையின் முக்கிய சாரமான ‘கர்ம யோகம்’ தான் ‘நிஷ்காம்ய கர்மம்’.

இப்படிச் செய்தால் இன்ன கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பிலும் ஆசையிலும் மட்டுமே மனதை செலுத்தினால், செய்யும் செயலில் கவனம் இருக்காது. செய்யும் செயலில் கவனம் இல்லா விட்டால், செயலில் நிறைவு கிட்டாது.

செயலின் விளைவு எப்படி இருந்தாலும் அதனை ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவம் இருக்க வேண்டும். அதற்காக, என்ன ஏற்பட்டாலும் பொறுத்துக் கொள்ள வேண்டும் என்பது பொருளில்லை. நான், எனது, என்னால் தான் இந்த வெற்றி என்ற அகந்தை, என்னால் தான் இந்த தோல்வி என்கிற தாழ்வு மனப்பான்மையோ ஏற்படாமல் இருக்க வேண்டும்.

இன்பத்துள் இன்பம் விழையாதான் துன்பத்துள்
துன்பம் உறுதல் இலன்
.

என்ற குறளை இங்கே குறிப்பிடுவது இங்கே சரியாக இருக்கும்.
இன்பமோ துன்பமோ, எது வரினும் எல்லாம் எம்பெருமானின் பிரசாதம் என ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் வர வேண்டும்.

ஒரு சம்பவத்தின் மூலமாக, ரமண மகரிஷி இதனை அழகாக விளக்குகிறார்:

முன்பொரு சமயம், ரங்காச்சாரி என்ற பெயர் கொண்ட தெலுங்கு பண்டிதர் ஒருவர் ரமண மகரிஷியிடம் ‘நிஷ்காம்ய கர்மம்’ பற்றி கேட்டார். ரமணரிடம் இருந்து பதிலே இல்லை. சிறிது நேரத்திற்கு பின்னால், ஒரு குன்றின் மேல் ஏறி நடக்கலானார். கேள்வி கேட்ட பண்டிதரும் இன்னும் சிலரும், ரமணரை தொடர்ந்து நடக்கலானர்.

கீழே தரையில் இருந்த ஒரு முட்கள் நிறைந்த குச்சியை கையில் எடுத்தார் ரமணர். பின்னர் ஓரிடத்தில் அமர்ந்து கொண்டு மெதுவாக, அந்த குச்சியில் இருந்த முட்களை நீக்கலானார்!. அந்த குச்சியின் முடிச்சுகளை நேராக்கினார். பின்னர் ஒரு தடினமான இலையைக் கொண்டு, அந்த குச்சியை வழவழப்பானதாக மாற்றினார். சுற்றி இருந்தவர்கள் இவர் என்ன செய்கிறார் என்று வியந்து கொண்டு இருந்தார்கள்!

சற்று நேரத்தில் பக்கத்தில் ஆடுகளை மேய்த்துக்கொண்டு ஒரு சிறுவன் அந்தப் பக்கம் வர எல்லோரும் ஒதுங்கி ஆடுகளுக்கு வழி விட்டனர். அந்த சிறுவன் கையில் குச்சி இல்லாமல், ஆடுகளை வழிப்படுத்த சிரமப்பட்டுக் கொண்டு இருந்தான்! இதைப் பார்த்த உடனே ரமணர், தன் கையில் இருந்த புதுக் குச்சியை, அந்த சிறுவனுக்கு கொடுத்து விட்டு அங்கிருந்து நகர்ந்தார் ரமணர்!.

கேள்வி வினவிய பண்டிதரோ, ஆகா, என் கேள்விக்கு விடை கிடைத்துவிட்டது என்றார்!