உலகம் யாதும் இந்தியாவைத் தேடி காலம் காலமாய் நாடுவது ஆன்மீகத் தேடலில் என்றால் அதில் மிகை ஏதும் இல்லை. உவப்போடு சொல்லிடலாம், உலகத்தில் இறைவழியில் நடந்திடும் இந்தியர்களை பார்த்து உலகமே வியப்படைகிறது என்று.

இப்படி பெருமைகள் பலவும் என்றாலும், பலப்பல சிறுமைகளும் இருக்கத்தான் இருக்கிறது. பல ஆயிரக் கணக்கான ஆண்டுகளில் தானாக தோன்றிய வழிகளிலும், நம்பிக்கைகளிலும் உண்மைகள் பல இருந்தாலும், வேண்டாத, ஒவ்வாத நம்பிக்கைகளும் இருக்கத்தான் செய்கின்றன. எதை எடுப்பது, எதை விடுப்பது என்ற தேர்வு அவரவர் சுயமாக எடுக்க வேண்டிய முடிவுதான் என்றாலும், இந்திய இறைவழிகள் என்னென்ன, அவை என்ன சொல்கின்றன என்ற அரிச்சுவடி அனைவரும் அரிய வேண்டிய ஒன்று.

இந்து மதத்தின் நான்கு இறைவழிப் பாதைகள் பற்றி என் கற்றலிலும், கேட்டலிலும் அறிந்தவற்றை உங்களோடு இங்கே பகிர்ந்து கொள்கிறேன். இதைப் பற்றியெல்லாம் எழுதி பட்டவர்கள் பலர் இருப்பினும்!

இறைவழியில் முக்கிய நான்கு – சைவம், சக்தி வழிபாடு, வைணவம், ஸ்மார்தம்

சைவம்: சிவன் முழு முதல் கடவுள். அறநெறியும், ஞானமும் பெற சத்குரு துணை நாடுவர். ஆலயம் சென்று தொழுவர். யோக நெறியில் ஆழ்ந்து, தனக்குள்ளே இருக்கும் ஈசனை கண்டுணர்ந்து, அவனோடு ஒன்றர கலப்பதே அவரதம் நோக்கம்.

சக்தி வழிபாடு (சாக்தம்): சக்தியே முழு முதல் கடவுள். சிலருக்கு அவள் சாந்த ஸ்வரூபி. பலருக்கு அவள் பத்ரகாளி. ஓதுதல், மந்திர தந்திர தாந்ரீகங்கள், சக்கரங்கள் மற்றும் ஏனைய முறைகள் மூலம் குண்டலினி சக்தியை எழுப்பி வழிபடுவர்.

வைணவம்: திருமாலே முழு முதல் கடவுள். திருமாலின் அவதார புருஷர்களில் முக்கியமாக கண்ண பெருமானையும், இராம பெருமானையும் வணங்குவர். இவர்களிடம் ஆழ்ந்த இறை பக்தியைப் பார்க்கலாம். இறை அடியார்கள், ஆலயங்கள் மற்றும் மறைகள் வைணவத்தின் தூண்கள்.

ஸ்மார்த்தம்: முழு முதல் கடவுளை ஆறு வடிவங்களில் வழிபடுவார் – அவை: கணேசர், சிவன், சக்தி, திருமால், சூரியன் மற்றும் முருகன். பக்தியோடு சேர்ந்த ஞான வழிதனில், யோகம் மற்றும் த்யானம துணை கொண்டு, இறைவனை புரிந்து கொண்டு அவனை அடைதலை வழியாய் மேற்கொள்வர்.

இப்போ, ஒரு சில பொதுவான விஷயங்களில் இவர்களின் நிலைப்பாடு என்ன என்று பார்ப்போமா?

இறைவன் அவதாரமாக மண்ணில் பிறப்பது பற்றி:

சைவம்: இறைவன் மண்ணில் மானிட அவதாரமாக பிறந்ததில்லை.
சாக்தம்: சக்தி மண்ணில் அவதரித்திருக்கிறார்.
வைணவம்: திருமாலின் பத்து (அல்லது அதற்கு மேற்பட்ட) அவதாரங்களைச் சொல்லலாம்.
ஸ்மார்த்தம்: எல்லா இறைகளும் மண்ணில் அவதாரம் எடுக்கலாம்.

ஜீவனும், பரமனும் பற்றி:

சைவம்: முக்தி அடைந்தபின் ஜீவனும் பரமனும் இரண்டல்ல. இந்த உண்மையை சிவனின் அருளினால் உணரலாம். சைவத்தின் உட்பிரிவுகளில் இக்கருத்தில் ஒரு சில வேறுபாடுகள் உண்டு.
சாக்தம்: சக்தியை வழிபடுவதால் அத்வைத முக்தி அடையலாம்.
வைணவம்: ஜீவனும் பரமனும் என்றென்றும் ஒன்றாகாது. திருமாலின் அருளால் ஜீவன் அடைய வேண்டியது இறை பக்தியும், இறை இன்பமும் தான்.
ஸ்மார்த்தம்: ஜீவன் மாயையினால் தன் சச்சிதானந்த நிலையினை உணராமல் இருக்கலாம். ஞானம் இந்த மாயை எனும் திரை தனை விலக்க வல்லது.

பயிற்சிகள்:

சைவம்: பக்தி எனும் அடித்தளத்தில் நின்றவாறு, த்யானம், தவம் போன்ற சாதகங்களை செய்வது.
சாக்தம்: பக்தியோடு சேர்ந்து மந்திர தந்திர பயிற்சிகள்.
வைணவம்: அதீத பக்தியில், தன்னை முழுதுமாய் இறைவனிடம் அர்பணித்தல்.
ஸ்மார்தம்: ஞான யோகமே முதன்மையான வழி. பக்தி யோகம், கர்ம யோகம், ராஜ யோகம் – இவையும் உயர் ஞானத்தினுக்கான வழிகள்.

மறைகள்:

சைவம்: வேதங்கள், சிவ ஆகமங்கள், சிவ புராணம்.
சாக்தம்: வேதங்கள், சக்தி ஆகமங்கள் (தந்திரங்கள்), புராணங்கள்.
வைணவம்: வேதங்கள், வைணவ ஆகமங்கள், இதிகாசங்கள்.
ஸ்மார்தம்: வேதங்கள், ஸ்மிர்த்தி, புராணங்கள், இதிகாசங்கள்.

பரவியுள்ள பகுதிகள்:

சைவம்: பல பகுதிகளிலும்; பெருமளவு தென் இந்தியா, வட இந்தியா, நேபாளம் மற்றும் ஸ்ரீலங்கா.
சாக்தம்: பல பகுதிகளிலும்; பெருமளவு கிழக்கு இந்தியா – வங்காளம் மற்றும் ஒரிசா.
வைணவம்: பல பகுதிகளிலும்; தென் இந்தியா மற்றும் வட இந்தியா.
ஸ்மார்தம்: பல பகுதிகளிலும்; தென் இந்தியா மற்றும் வட இந்தியா.