இலக்கியத்தில் ஆனைமுகனை, வினைகள் அகற்றும் விக்னேஸ்வரனை துதித்து போற்றியவர் பலர்!
பாலும், தெளிதேனும், பாகும், பருப்பும் கொடுத்து, அதற்கு பதிலாக சங்கத் தமிழ் மூன்று மட்டும் போதும் எனக் கேட்டு கணபதியுடன் ‘வணிகம்’ செய்த ஔவையைப் பற்றி நமக்கெல்லாம் நன்கு தெரியும். ஏனைய பலரும் கணேசனை துதித்து செய்யுள்களை இயற்றி உள்ளனர். அவற்றில் தேர்ந்தெடுக்கப்பட்ட சில உங்களுக்காக இங்கே:

திருமந்திரம் – திருமூலர்

ஐந்து கரத்தினை ஆனை முகத்தினை

இந்து இளம்பிறை போலும் எயிற்றினை

நந்தி மகன் தனை ஞானக் கொழுந்்தினை

புத்தியில் வைத்தடி போற்றுகின் றேனே.

திருக்கடைக்காப்பு – திருஞான சம்பந்தர்

பிடியதனுருவுமை கௌமிகு கரியது

வடிகொடு தனதடி வழிபடுமவரிடர்

கடி கணபதிவர அருளினன் முகுகொடை

வடிவினர் பயில் வலி வலமுறை இறையே.

இரட்டை மணி மாலை – கபிலர்

திருவாக்கும் செய்கருமமும் கைகூட்டும் செஞ்சொல்

பொருவாக்கும் பீடும் பெருக்கும் உருவாக்கும்

ஆதலால், வானோரும் ஆனைமுகத்தானைக்

காதலால் கூப்புவர் தம்கை.

விநாயகர் அகவல் – நக்கீரர்

வெண்ணீ றணியும் விமலன் புதலவர்

பெண்ணா முமையாள் பெற்றிடுந் தேவே

அரிதிரு மருகா அறுமுகன் துணைவா

கரிமுக வாரணக் கணபதி சரணம்

குருவே சரணம் குருவே சரணம்

பெருவயிற் றோனே பொற்றாள் சரணம்

கண்ணே மணியே கதியே சரணம்

விண்ணே யொளி வேந்தே சரணம்


பெருந்தேவனார்

ஓதவினை அகலும்; ஓங்கு புகழ் பெருகும்

காதற் பொருள் அனைத்தும் கைகூடும் – சீதப்

பனிக்கோட்டு மால்வரை மேல் பாரதப்போர் தீட்டும்

தனிக் கோட்டு வாரணத்தின் தாள்!


நம்பி ஆண்டார் நம்பி

என்னை நினைத்து அடிமை கொண்டு என் இடர் கெடுத்துத்

தன்னை நினையத் தருகின்றான் – புன்னை

விரசு மகிழ் சோலை, வியன் நாரையூர் முக்கண்

விரசு மகிழ் அத்தி முகத்தான்.

குமர குருபரர்

சீர்கொண்ட காசிநகர் சேர்துண்டி ராஜனெனும்

பேர்கொண்ட வைங்கரற்குப் பேசுபுகழ்த் – தார்கோண்ட

நற்றிருப்பாட் டீரைந்த்தும் ஞாலமிசைத் தொண்டரெலாங்

கற்றிருப்பார் மேலாங் கதி.


கந்தபுராணம்

மண்ணுலகத்தினிற் பிறவிமாசற

எண்ணிய பொருள் எல்லாம் எளிதின் முற்றுறக்

கண்ணுதல் உடையோர் களிற்றுமாமுகப்

பண்ணவன் மலரடி பணிந்து போற்றுவோம்.

திருஅருட்பா – இராமலிங்க அடிகளார்

முன்னவனே யானைமுகத்தவனே முத்தி் நலம்

சொன்னவனே தூய்மைச் சுகத்தவனே – மன்னவனே

சிற்பரனே, ஐங்கரனே செஞ்சடையஞ் சேகரனே

தற்பரனே நின் தாள் சரண்.

திருப்பல்லாண்டு – சேந்தனார்

குழலொலி யாழொலி கூத்தொலி ஏத்தொலி எங்கும் குழாம்பெருகி

விழவொலி விண்ணளவும் சென்று விம்மி மிகுதிரு ஆருரின்

மழவிடை யாற்கு வழிவழி யாளாய் மணஞ்செய் குடிப்பிறந்த

பழஅடி யாரொடுங் கூடி எம்மானுக்கே பல்லாண்டு கூறுதுமே.

உமாபதி சிவச்சாரியர்

வானுலகும் மண்ணுலகும் வாழ் மறைவாழப்

பான்மை தருசெய்ய தமிழ் பார்மிசை விளங்க

ஞானமத, ஐங்கர மூன்றுவிழி, நால்வாய்

ஆனைமுகனை பரவி அஞ்சலி செய்கிற்போம்