இறைவன் எங்கே இருக்கிறான் என்று எனக்கு முதன் முதலில் சொல்லித்தந்த வரிகள் – இந்த வள்ளலாரின் வைர வரிகள் தான். ஏதோ ஒரு வகுப்பு, எதுவென்று நினைவில்லை – தமிழ் பாடப் புத்தகத்தில் கடவுள் வாழ்த்துப் பாடலாக வரும்:

எங்கும் மனிதர் உனைத்தேடி
இரவும் பகலும் அலைகின்றார்.

எங்கும் உளது உன் உருவம்
எனினும் குருடர் காண்பாரோ?

எங்கும் எழுவது உன் குரலே
எனினும் செவிடர் கேட்பாரோ?

எங்கும் என்றும் எவ்வுயிரும்
எல்லாம் ஆன இறைவனே.

அந்த வயதில், கடவுள் என்றால் படங்களில் பார்த்த சிவனோ, முருகனோ, திருமாலோ, விநாயகனோ – இப்படி இன்னும் பலரின் திருமுகங்கள் தான் நினைவுக்கு வரும். அந்தப் பருவத்தில் – இப்படி யார் ஒருவரின் பெயரும் இல்லாமல், இறைவன் இவன் என்று சொன்ன அந்த வரிகள் என் கவனத்தை கயிற்றால் கட்டி இழுத்தன போலும். எளிதான அந்த வரிகளின் சக்தி இன்றைக்கும் பிரம்மிப்பாகவே இருக்கிறது.

யார் இறைவன் என்றெல்லோரும் தேடி அலைகின்றார். ஓராயிரக்கணக்கில் கதைகள் சொல்லி எப்படியெல்லாமோ அவனைப் பற்றி பலரும் சொல்லி விட்டார். எனினும் அந்த தேடல் தீர்ந்த பாடில்லை. மண்ணில் எத்தனை மூலை முடிக்கிலும் தேடினாலும் அவன் மாயவனாகவே இருக்கிறான். ஏற்கனேவே பலர் தேடிக் கண்டதாகச் சொன்னாலும் ஒவ்வொருவரும் மீண்டும் தானாகவும் தேட வேண்டியிருக்கிறது. மனிதர் தேடும் வேறு எந்த பொருளுக்கும் இப்படி ஒரு தனித்துவமான குணம் இருப்பதாகத் தெரியவில்லை.

ஒரு குறிப்பிட்ட கடவுளை வணங்குவது ஒரு குறிப்பிட்ட உருவத்தில் இறைவனைக் குறிக்குவது போலாகாதா? அப்படி குறுக்கப்பட்ட கடவுளும் கடவுளாகுமோ என்று கேட்கலாம். கடவுளே இவ்வுலகம். அனைத்து உருவங்களும் அவர் உருவங்களே. எந்த உருவத்தில் வேண்டுமானாலும் அவரை வழிபடலாம். கீதையில், இறைவன் ஸ்ரீகிருஷ்ண உருவத்தில் அர்ஜூனனுக்கு இவ்வாறு உபதேசம் சொல்கிறார். “இறைவனான என்னிடம் இருந்தே அனைத்தும் தோன்றுகினறன, நிலை பெறுகின்றன, ஒடுங்குகின்றன”.

எங்கும், என்றும், எவ்வுயிரும் எல்லாமும் ஆன இறை அவன் பிரதிபலிக்கும் இடங்கள் வெவ்வேறாக இருக்கலாம். ஆனால் பரம்பொருளான சைதன்யமோ அளவற்றது. எல்லையில்லாதது. அதே சைதன்யம் என்னும் பேரறிவுதான் (Super Consciousness), மேலே பகவான் ஸ்ரீகிருஷ்ணன் கீதா உபதேசத்தில் ‘என்னிடம் இருந்து’ என்ற சொல்லாக மலருகிறது. அதே சைதன்யம்தான் நம்மையும் ‘நான்’ எனச் சொல்ல வைக்கிறது. நான்தான் எல்லாவற்றுக்கும் காரணம் என்று நீங்களும் நானும் கூடச் சொல்லலாம். நான் இந்த உடல் அல்ல, நான் இந்த மனம் அல்ல, நான் என் அவையங்கள் அல்ல, நான் புத்தியா, நான் ஒன்றுமில்லாமல் சூன்யமா, பின் நான் யார், என்ற சுய வினவலின் மூலமாக அறிந்து, அந்த அறிவின் மூலமாக நான் அந்த சைதன்யமாகவே இருக்கிறேன் என்று உணர்ந்து சொல்லலாம்.

வேதாத்திரி மகரிஷி அழகான எடுத்துக்காட்டு ஒன்று தருவார். எங்கெங்கும் நிறைந்திருக்கும் பிரம்மத்தினை, ஒரு பெருங்கடலுக்கு ஒப்பாக எடுத்துக் கொண்டு, அதிலிருந்து ஒரு குடுவையில் நீர் முகர்ந்து கொண்டால், அந்த குடுவை நீர்தான் நம் ஜீவன். குடுவை நீர் மீண்டும் கடலில் கலக்கும்வரை, அது வெறும் நீர்தான். கடலில் கலந்த பின்னோ அது கடல். கடலில் எந்தப் பகுதி நீர் இந்தக் குடுவை நீர் எனப்பிரித்தறிய இயலாது.அதுபோலவே ஜீவன் பரமனை அடைந்த பின்னரும்.

சுவாமி தயானந்த சரஸ்வதி கடலின் அலைகளுடன் ஒப்பிடுவார். பெருங்கடலில் சிறிய அலை ஒன்று கரையை நோக்கி உருண்டோடிக் கொண்டிருக்கிறது. இன்னும் சிறிது நேரத்தில் நான் அழிந்து விடுவேனே என்ற வருத்ததுடன். “நான் அழியுமுன் என்னை காப்பாற்ற யாருமில்லையா” என ஓலமிடுகிறது. அதைக்கேட்டு அருகில் வந்த பேரலை ஒன்று, சிற்றலையிடம், “வருத்தப்படாதே, கண நேரமே தோன்றி மறையும் அலையல்ல நீ, இந்த பெருங்கடல் நீ என உணர்வாய். உன்னையும், என்னையும், ஏனைய அலைகளையும் படைத்த கடவுள் இந்த கடலே. உன்னில், என்னில் மற்றும் ஏனைய அலைகளிலும் இந்த கடலே நீராக வியாபித்து இருக்கிறது. நீயும் இந்தக் கடலும் வேறல்ல, அனைவரும் இந்தக் கடலில்தான் இறுதியில் ஒடுங்குவோம்.” என்று கூறுகிறது.

இறைவனும் நாமும் உண்மையில் அளவற்ற சைதன்யம்தான். சைதன்யமான நம்மிடத்தில்தான் அனைத்துலகமும் இருக்கிறது. அதைப்படைத்த இறைவனும் இருக்கிறான்.