‘நீங்கள் கடவுளைக் கண்டதுண்டா?’
‘எனக்கு கடவுளைக் காட்ட முடியுமா?’

இப்படி எல்லோரிடமும், இறுதியாக இராமகிருஷ்ண பரமஹம்சரிடமும் கேட்ட அந்த வங்காளத்துச் சின்னப்பையன், நரேந்திரனைப் (நரேந்திரநாத் தத்தா) பற்றி நமெக்கெல்லாம் நன்றாக தெரியும். விவேகானந்தரான அவர் கதை நமக்கு எப்போதோ சொல்லப்பட்டு விட்டதல்லவா? அது சரி, நரேந்திரனின் பயிற்சிக்கூடம் எப்படி இருந்திருக்கும்? விவேகானந்தர் எப்படி கடவுளை கண்டறிந்தார்? சுவையான சில சம்பவங்கள் மூலமாக பார்ப்போம்.

முதலாவதாக, இராமகிருஷ்ணர் தன் சீடர்களுக்கு இந்த ஒரு வழியினைத்தான் பின்பற்ற வேண்டும் என்றெந்த கட்டுப்பாட்டினையும் விதிக்கவில்லை. அவரவர் பின்புலத்திற்கு தகுந்தவாறு தங்கள் வழியினில் தங்கள் இறைஅறிவுத் தேடலில் ஈடுபடலாம். அவ்வாறே நரேந்திரனுக்கும். அதே சமயம், நரேந்திரனின் பயிற்சி முறைகள் பரமஹம்சரால் நேரடியாக உன்னிப்பாக கண்காணிக்கப்பட்டன.

பயிற்சிக்கூடத்தில் சக மாணவர்களுக்குள் பல சமயம் அவர்களுக்குள் வாக்குவாதம் வரும். பல கடவுள்களைப் பற்றியும், பல நம்பிக்கைகளைப் பற்றியும் விவாதங்கள் வளரும். இந்த விவாதங்களில் நரேந்திரனின் பேச்சுத் திறமைகளை தொலைவில் இருந்து ரசிப்பார் ராமகிருஷ்ணர். அப்படி ஒரு சமயத்தில், ராகல் என்னும் சக மாணவரின் காளி பக்தியை நரேந்திரன் கிண்டல் செய்வதைப் பார்த்து, மற்றவகள் இறை நம்பிக்கையை சிதைக்கும் படியாக ஏதும் செய்யக்கூடாது என அறிவுறுத்தினார்.

இன்னொரு சமயம், இராமகிருஷ்ணர் விளக்கியிருந்த அத்வைதக் கோட்பாடுகளைப்பற்றி மாணவர்கள் விவாத்தித்து கொண்டிருந்தனர். அப்போது நரேந்திரனோ, ‘இது என்ன பிதற்றல், இறைவன் எங்கேயும் இருக்கிறானாம். அருகிலிருந்த ஜாடியைக் காட்டி, இந்த ஜாடியிலும் இருக்கிறானம், அதன் மூடியிலும் இருக்கிறானாம்’ – என்று கிண்டலாகச் சொல்லவே, அனைவரும் சிரித்து விட்டனர். இவர்களின் நகைப்புக்கு காரணம் அறிந்து அங்கு வந்த இராமகிருஷ்ணர், நரேந்திரனைத் லேசாக தொட்டுவிட்டு சென்று விட்டார். நரேந்திரனுக்கு என்ன நடந்ததோ தெரியவில்லை. அடுத்த சில நாட்களுக்கு நரேந்திரன் பார்ப்பதில் எல்லாம் பரப்பிரமம் தெரிந்ததாம்!. அத்வைதத்தின் சாரம் அப்போதே நரேந்திரனுக்கு காணக்கிடைத்தாலும் முழுஅறிவினைப் பெறுவதற்கு பின்னொரு நாளானது.

ராமகிருஷ்ணரும் தன் மாணவர்களை பலவிதமான சோதனைகளுக்கு உட்படுத்தி வந்தார். ஒருமுறை, ஒரு காரணமே இல்லாமல் நரேந்திரனுடன் சில நாட்களாக பேசவே இல்லை. முகமெடுத்துக்கூட பார்க்காமல் அலட்சியப்படுத்தி வந்தார். சில நாட்கள் கழித்து, அவரே நரேந்திரனிடம், ‘உன்னிடம் ஒரு வார்த்தை கூட பேசாமல் இருக்கிறேன். நீயேன் தினமும் இங்கே திரும்பித் திரும்பி வந்து கொண்டே இருக்கிறாயே?’ என்றார் கோபமாக. நரேனோ, சாந்தமாக, ‘உங்கள் மீதுள்ள அன்பினால் உங்களைப் பார்க்க வருகிறேன், நீங்கள் பேசுவதைக் கேட்பதற்காக அல்ல’ என்று சொன்னார். நரேனின் பதிலில் மகிழ்ந்த இராமகிருஷ்ணர், ‘நல்லது, உன்னை சோதனை செய்யவே இப்படிச் செய்தேன். என் வெளி அணுகுமுறையில் மாற்றத்தினால் நீ மாறுகிறாயா என்று பார்த்தேன். வேறொருவாராய் இருந்தால் இங்கே திரும்பி வந்திருக்கமாட்டார்’ என்றார்.

ஒருமுறை நரேந்திரனை அழைத்து, பலவிதமான ஏற்பாடுகளையெல்லாம் செய்துவிட்டு, இதுவரை கடும் தியானங்கள் புரிந்து பெற்ற ஆத்ம சக்தியெல்லாம் உனக்கு தந்துவிடலாம் என நினைக்கிறேன் என்றார். நரேந்திரனோ, ‘அப்படியா, இந்த சக்தியெல்லாம் பெற்றால், அவை கடவுளை அறிய எனக்கு துணை புரியுமா?’ என்று கேட்டார். பரமஹம்சரோ புன்னகைத்து, ‘அவற்றைக் கொண்டு கடவுளை அறிய இயலாது. ஆனால் நீ ஒரு ஆசானாக மற்றவர்களுக்கு இருக்க அவை துணை புரியும்’ என்றார். உடனே நரேன், “ஐயா, அப்படியானால் அவை இப்போது எனக்கு தேவைப்படாது, முதலில் கடவுள் யாரெனக் கண்டறிவதில் கவனம் செலுத்துகிறேன். அவ்வாறு கண்டறிந்தபின், இந்த சக்திகளுக்குத் தேவை இருக்குமா எனத் தெரியும். மேலும், இப்போது இவைகளை பெற்றுக்கொண்டாலோ, என் தேடலை மறந்துபோய், என் சுயநலத்திற்காக பயப்படுத்தி விடுவேனோ என்னவோ.” என்று மறுத்து விட்டார்.

இராமகிருஷ்ணரைப்போல் நரேந்திரனால் உள்ளொளியில் அமைதியாக ஒளிர்ந்திட இயலவில்லை. தனக்கு தியானம் சொல்லித் தரும்படி மன்றாடிட, அதற்கு இராமகிருஷ்ணரோ, “கடவுள் நம் பிரார்த்தனைகளைக் கேட்டுக் கொண்டே இருக்கிறார். நீ கடவுளைப் பார்க்கவும், பேசவும் முடியும் – என்னுடன் நீ பேசுவதைப் போலவே. அவர் பேசுவதைக் கேட்கவும் அவரைத் தொடுவதை உணரவும் முடியும்.” என்றார். தொடர்ந்து, “நீ தெய்வங்களின் உருவங்களில் நம்பிக்கை அற்றவனாக இருக்கலாம். ஆனால், எல்லாவற்றுக்கும் மேலான ஒருவன் இருக்கிறான் என்று நம்பினால், அவனிடம் கேள் – ‘இறைவா, நீ யாரென்று நானறியேன். என் மீது கருணை கொண்டு, உன் நிஜ சொருபத்தினை காட்டிடுவாய்’ என வேண்டிடு. உன் வேண்டுதல் நேர்மையாய் இருக்கும் பட்சத்தில், நிச்சயம் அவன் அதற்கு செவி மடுப்பான்.” என்றாரே பார்க்கலாம்.

உசாத்துணை : விவேகானந்தர் வாழ்க்கைக் குறிப்புகள் – சுவாமி நிகிலானந்தா

(இன்னமும் வளரலாம்…)