பா 28:

விளக்கின் உருவை விளக்கிட வேறு
விளக்கை விரும்பா விதம்போல் – விளங்கு
மறிவுருவாம் ஆன்மா வறிந்திடத் தன்னைப்
பிறித்தறிவு வேண்டாப் பெறாது.

விளக்கம்:

அங்கே அழகான விளக்கொன்று சுடர் விட்டு எரிந்து கொண்டிருக்கிறது.
இருண்ட வீட்டுக்கு நல்ல ஒளியை அளித்துக் கொண்டிருக்கிறது.
அந்த விளக்கு எவ்வளவு பிரகாசமாக ஒளிர்கிறது என்பதனை – அந்த விளக்கைப் போன்ற “இன்னொரு” விளக்கைக் கொண்டு விளக்க முடியாது. இந்த விளக்கைப் பற்றி விளக்க இன்னொன்று தேவையில்லை.

அதுபோல,
பேரறிவின் உருவாய் சுடர் விடும் ஆன்மாவினை யாதென்று விளக்க, இன்னொரு பொருள் ஏதும் தேவைப்படாது.

ஏன் அப்படி? ஏனென்றால், இந்த ஆன்மாவாகிய விளக்கு தானாக சுடர் விடுகிறது. அதன் ஒளிக்கு அதுவே காரணம். அது பேரானந்தம் தரும் உண்மையான ஞான சொரூபம். ஆதலால், ஆன்மா தான் யாரென்று விளங்கிக்கொள்ள இன்னொன்று தேவையில்லை.

அந்த ஆன்மா, இன்னொருவரின் உதவியில்லாமால் தானாக தன் நிஜ சொரூபத்தினை உணர்ந்திட இயலும் என்றால், குருவின் உபதேசமெல்லாம் எதற்கு எனவும் கேட்கலாம். சுடர்விளக்கானாலும் தூண்டுகோல் தேவை அல்லவா?
குருவின் உபதேசமோ அல்லது மறைகள் மூலமாக கற்று அறியும் எந்த அறிவும் தூண்டுகோலாகத்தான் அமையும். சரி, அப்படியென்றால், அந்த ஆன்மா, தான் யார் என்ற உண்மையை அறிந்திட என்ன செய்ய வேண்டும் என்று கேட்கலாம். அதை அடுத்த பா சொல்கிறது.

பா 29:

நேதிநேதி வாக்கினா நீக்கி உபாதியெலா
மீதியாஞ் சீவான்மா மீதிலா – வாதியா
மப்புறம் ஆன்மாக்களின் ஐக்கியமா வாக்கியங்கள்
செப்புவ தொர்ந்து தெளி

இது இல்லை, இதுவும் இல்லை, இதுவும் இல்லை (நேதி நேதி – பிரஹதாரண்யக உபநிடதம்) என்று ஒவ்வொன்றாக ஆன்மாவின் உண்மையான உருவம் இல்லை என்று கழித்துக்கட்டி, இதுவரை சேர்த்துவந்த உபாதியெல்லாம் ஒவ்வொன்றாக கழித்துக்கட்டி, கடைசியில் மிஞ்சி இருப்பது என்ன? சுயத்தில் மீதி இருப்பது என்னவென்றால் – எல்லாவற்றுக்கும் மேலானதான சச்சிதானந்தம் – அதுவே எல்லா ஜீவன்களிலும் ஒன்றாக இருப்பதாகும்.

இவ்வாறு ஆன்மாவின் உண்மையான, நிலையான, மாறுதலற்ற தன்மையை உணர்ந்து கொள்வதுதான், தன்னை யார் என உணர்ந்து கொள்வதாகும். இந்த உண்மையை ஆன்மா அறிந்து கொள்வதுதான் அனைத்து துன்பங்களிலும் இருந்து விடுதலை பெறுவற்கான ஒரே வழி.

உபாதி: உபாதி என்ற சொல்லுக்கு – ஆன்மாவின் மாயைத் தோற்ற மயக்க நிலை என்று சொல்லலாம். அதாவது இந்த உடல், அதன் அவையங்கள், நம் எண்ணம், நம் மனம், இவையும், இன்ன பிறவற்றையும் ‘நான்’ என தவறாக அடையாளம் கண்டுகொள்கிறோம். இதுபோன்ற ஒவ்வொரு நிலைப்பாடுக்கும் ஆன பெயர் ‘உபாதி’ என வழங்கப்படுகிறது. உபாதி ஒவ்வொன்றாக இழக்க வேண்டும். எல்லா உபாதியையும் கழட்டி விட்ட பின், உபாதி இல்லா ஆன்மா – அது தான் தூய்மையான சச்சிதானந்த நிலையாகும்.

சச்சிதானந்தம்: சத் + சித் + ஆனந்தம் :
சத்: சகலத்திலும் நிறைந்திருக்கும் பரமன் அல்லது பிரம்மம்.
சித்: சைத்தன்யம் – பேரறிவு – மெய்ஞானம்.
ஆனந்தம்: பேரின்ப பெருங்களிப்புத் தரும் ஆனந்தம்.

ஜீவனில் சத்தானது, சித் என்னும் மெய்ஞானம் தனை மறைத்திடும் உபாதியெல்லாம் இழந்தபின் சித்தம் தெளிகிறது. தெளிந்த ஜீவனில், பரமனிம் உண்மை பேரின்ப ஆனந்த நிலையினை அடைவதே சச்சிதானந்த நிலை ஆகும்.

———————————————————————————————
முந்தைய பகுதிகள்