திமிர வுததி அனைய நரக

செனன மதனில், விடுவாயேல்

செவிடு குருடு வடிவு குறைவு

சிறிது மிடியும் அணுகாதே

அமரர் வடிவும் அதிக குலமும்

அறிவு நிறையும் வரவேநின்

அருள தருளி யெனையு மனதோடு

அடிமை கொளவும் வரவேணும்

சமர முகவெல் அசுரர் தமது

தலைகள் உருள மிகவேநீள்

சலதி யலற நெடிய பதலை

தகர அயிலை விடுவோனே

வெம் அரவணையில் இனிது துயிலும்

விழிகள் நளினன் மருகோனே

மிடறு கரியர் குமர பழநி

விரவும் அமரர் பெருமாளே.

——————————-
அருஞ்சொற் பொருள்:

திமிர – இருண்ட

உததி – கடல்

சமரம் – போர்

சலதி – கடல்

பதலை – மலை

அயில் – வேல்

மிடறு – தொண்டை

————————————————————-

பிறப்பின் தொடக்கமே இருளில் தானே, என் இறைவா,

கருவின் இருளில் தானே, இருண்ட கடலாய், இருளில் தானோ?

நிரந்தரம் இல்லா இவ்வுலகில் பிறப்பதும் நரகம் தானே?

இறைவா, இவ்வுலகம் எனக்கு நரகம் தானே?

இந்நரகம் தனில் உழலச் செய்தாலும், நீ எனைச் செய்தாலும்,

செவிடு, குருடு, ஊனம் அல்லது வறுமை,

பிறக்கும்போதே பிணித்திடும் மரபணு நோய்கள்,

என பலவும் எனை வாட்டி வருத்தாமல்,

அமரர் அழகும், நிறைந்த குலமும், அறிவின் நிறைவும்

பெற்றிட தருவாய் உனது திருவருளை.

சிறுபதரென என்னைப் புறம் தள்ளாது,

என்னையும் உன்மனதில் பொருட்படுத்தி

என்னையும் அடிமையென ஆட்கொள்ள வரவேண்டும்.

போர் முனையில், அசுரர் தலைகள் சிதறிட

அலறலில் ஓயாக் கடலலை போல் ஒலிகள் எழ,

நீண்ட மலையாக எழுந்து நின்ற அசுரனும் பொடிப்பொடியாக,

நெடிய வேலாயுதத்தினை செலுத்திய என் இறையே,

நீ யாரேன யாரேனும் கேட்டால் நான் இவ்வாறு சொல்வேன்:

அரவணையில் பள்ளி கொள்ளும் பரந்தாமனின் மருகனும்

கருநீலகண்டம் கொண்ட சிவனாரின் குமாரனுமான

பழனி மலையில் தண்டம் தனைத் தரித்து

அமரர்கள் அருகில் வந்து தொழுதிடும் குமரன் என்று.