சென்ற பகுதியில் சக்தி சிவனிடம் இராமனைப் பற்றி விளக்கங்கள் கேட்கிறதாகப் பார்த்தோம். மகேஸ்வரன் உண்மையில் இராமன் யாரெனச் சொன்னதுடன், அதை மேலும் விளக்கும் பொருட்டு, சீதை அனுமனுக்குச் சொன்ன விளக்கங்களை மேற்கோள் காட்டுகிறார்.

இந்தப் பகுதியில் சீதா பிராட்டியின் உரையினைப் பார்ப்போமா?

தேவி சீதை: ஸ்ரீஇராமசந்திர மூர்த்தி சாட்சாத் பரப்பிரம்மமே. அவனே சத்-சித்-ஆனந்தம். ஒன்றென ஒன்றேயானவன். அவனைப் புலன்களால் ஒரு பொருளென உணர இயலாது, எனெனில் அவன் எந்த குணங்களும் அற்றவன். இராமன் மாசற்ற தூய ஆனந்தம். அவன் மாறுதலற்றவன். அறியாமையின் அறிகுறிகள் அற்றவன். எங்கெங்கும் நிறைந்திருப்பவன்.
சீதையாகிய நானோ பிரகிருதி. எல்லாப் பொருட்களும் உருவாகுவதற்கான இயக்கப்பொருளாகவும், உருப் பொருளாகவும் இருக்கிறேன். அந்த பிரம்மாகிய இராமனின் ‘இருப்பினால்’ என்னால், அதாவது அவன் சக்தியான பிரகிருதியானால், இந்த அண்ட சராசரங்களை நான் படைத்தது.
(தொடர்ந்து, அயோத்தி நகரில், ரகுகுலத்தில் தசரதநந்தனன் இராமன் பிறந்தது முதல் தொடங்கி, தனக்கு அவனுடன் திருமணம் நடந்ததையும், இராவணன் மாயசீதையை அபகரித்ததையும், போரில் இராவணனை வதைத்து, அயோத்தி திரும்பி, இராம பட்டாபிஷேகம் நிறைவுற்றது வரை விவரமாக விவரித்தார்.)
இராமன் மேலே செய்தவை யாவும் பிரகிருதி ஆகிய என் மூலமாக நிறைவேற்றியவை. ஆனால் இராமனோ எந்த மாற்றங்களும் அற்றவன்.
மேலும், இராமன் நடப்பதுமில்லை, உட்காருவதும் இல்லை. சோகப்படுவதும் இல்லை. எதற்கும் ஆசைப்படுவதும் இல்லை. எதையும் வெறுத்து ஒதுக்குவதும் இல்லை. மொத்தத்தில் அவனிடம் எந்த ஒரு செயலும் நிகழ்வதற்கான தடையம் கூட ஒன்றுமில்லை. அவன் சுத்த ஆனந்தமாக நிறைந்திருப்பதால், அவனில் அசைவேதும் இல்லை, யாதொரு மாறுதலும் அவனில் இல்லை.
அதே சமயத்தில், இராமனை அவன் மாயையில் இருந்து பிரித்தறியும் உயர்ஞானம் இல்லாதவர்களுக்கு, மேற்சொன்ன மாறுதல்கள் யாவும் அவனில் நிகழ்வாதாக தவறாகக் கொள்வர். ஆனால் உண்மையில் மாயையின் உள்ளுக்குள் தான் மாறுதல்கள் எல்லாம் நிகழ்கின்றன.

இவ்வாறாக இராமனின் உண்மை சொரூபத்தினை பிராட்டியார் இயம்பி முடித்தார்.

———————- அத்யாத்ம ராமாயணம் : பின் குறிப்புகள் —————-
மேலே தேவி சீதையின் உரையினைப் பார்க்கையில் அத்யாத்ம ராமாயணத்தின் இலக்குகள் தெளிவாகத் தெரிகின்றன. இராம காதையினைக் கொண்டு ஆன்ம உபதேசத்தினை தருவது என்பதே அந்த இலக்காகும். இராமனை பரப்பிரம்மாக பார்க்கும் இந்நூல் – இப்படித்தான் என்று நேரடியாக விளக்க இயலாத பிரம்மத்தினை இக்காதை மூலம் விளக்குகிறது. அதே சமயத்தில் பரமன் ஒருவனாக காட்டப்படுவதுடன், அவனே இஷ்ட தெய்வமாக – ஈஸ்வரனாகவும் பார்க்கப்படுகிறான்.
இராமன் காட்டுக்குச் செல்வதும், கைகேயி மற்றும் மந்திரை மூலமாக நிகழும் சம்பங்கள் அனைத்தும் அவன் மாயையின் திருவிளையாடலே என்று விளக்குகிறது அத்யாத்ம ராமாயணம்.
மேலும்: இராவணனால் கவரப்பட்ட சீதையும் உண்மையான சீதையல்ல. இராமனின் மாயசக்தியால் உருவாக்கப்பட்ட மாயசீதை. உண்மையான சீதையோ அக்னி தேவதைக்குள் ஒளித்து வைக்கப்படுகிறார். யுத்த காண்டத்தின் நிறைவில், மாயசீதை அக்னிப்பிரவேசம் செய்ய, இராமன் தன் சீதையை அக்னியிடம் இருந்து பெற்றுக் கொள்கிறான்.
இராவணன் மற்றும் கும்பகர்ணன் போன்றோரோ, வன் கையாலேயே முக்தி அடைய விரும்பியதால், போரும் மூண்டு, அதில் தங்கள் அஞ்ஞானத்தை முடித்துக் கொள்கின்றனர். அவர்கள் விபீடனனைப்போல் பக்தி மார்கத்தில் செல்லாமல், இராமனுடன் சண்டை இடுவதே தங்களுக்கு எளிதாக முக்தி அடைவதற்கான வழியாகக் கொண்டனர்.
—————————————————————–
கம்பராமாயணத்திலும்:

போரில் இராவணன் விடுத்த சூலத்தினை இராமன் தவிடுபொடியாக்கிய உடன், யாரிவன் இந்த இராமன் என்று ஐயுற்று இவ்வாறாக சொல்கிறான்:

முன்பு தன் அண்ணன் விபீடனனார் சொன்னதுபோல்,

‘சிவனோ? அல்லன்; நான்முகன் அல்லன்; திருமாலாம்
அவனோ? அல்லன்; மெய் வரம் எல்லாம் அடுகின்றான்;
தவனோ என்னின், செய்து முடிக்கும் தரன் அல்லன்;
இவனோதான் அவ் வேத முதல் காரணன்?’ என்றான்.
(கம்பராமாயணம் – இராவணன் வதைப்படலம் 135.)

சிவன், பிரம்மன், திருமால் – இவர்களில் யாருமல்லன் இராமன் – இவர்களுக்கெல்லாம் மேலான பரமன் – வேதமுதல்வனோ என்கிறான்.