பெரிய புராணத்தின் தொடக்கச் செய்யுள் – ‘உலகெலாம் உணர்ந்து ஓதற்கரியவன்…’. சேக்கிழார் பெருமானுக்கு சிவபெருமானே அடியெடுத்துக் கொடுத்து, அதிலிருந்து விளைந்த வாழ்த்துப் பாடலைப் பார்ப்போமா?

உலகெலாம் உணர்ந்து ஓதற்கு அரியவன்

நிலவு உலாவிய நீர்மலி வேணியன்

அலகில் சோதியன் அம்பலத்து ஆடுவான்

மலர் சிலம்படி வாழ்த்தி வணங்குவாம்

எவ்வுயிர்களாயினும் தம்மறிவால் உணர்வதற்கும் ஓதுவதற்கும் அரியவன்! : அவனை மனத்தால் உணர்வதும், மொழியினால் ஓதுதலால் அடைவதும் அவ்வளவு எளிதானது அல்லவாம்.

அப்படியே அறிவதற்கு அரியவனாய் இருப்பவனாக இருப்பினும், தன்னை அடைந்து உய்ய வேண்டும் எனும் பெருங்கருணையினைக் கொண்டவனாய் இருக்கிறானாம்!. (அவன் கருணையே அவனை அடைவதற்கான கருவி!)

பிறைச் சந்திரனையும் கங்கையையும் தன் திருச்சடையில் அணிந்து பல்லுயிர் காக்கும் பண்பைப் பெற்றவனாம்!

அளவிட இயலாத ஒளியினை உடையனாம்!

அரியவன், வேணியன், சோதியன் – இப்படியெல்லாம் பெருமை உடையவன் தில்லைச் சிற்றம்பலத்தே திருக்கூத்து ஆடுகின்றவனாகவும் இருப்பவன் கூத்தப் பெருமான்.

அன்பர்கள் உள்ளத்தில் என்றும் மலர்ந்து நிற்கின்ற சிலம்பணிந்த அவன் திருவடிகளை வாழ்த்தி வணக்கம் செய்வோம் என்று அவனெடுத்துக் கொடுத்த அடியினை முடிக்கிறார் சேக்கிழார் பெருமான்.
—————————————————————
இப்போது பாடலை பாடிக் கேட்கலாமா?

பாடுபவர் : ரஞ்சனி & காயத்ரி
வயலின் : சாருமதி ரகுராமன்
மிருதங்கம் : அருண் பிரகாஷ்
கடம் : குருபிரசாத்
ராகம் : பூர்விகல்யாணி

Ulagellam-unarndu
————————————————————–

தொடர்ந்து, அவர்கள், இன்னொரு பாடலையும் பாடினார்கள்.
அந்தப் பாடல், ஆறாம் திருமுறையான திருநாவுக்கரசர் தேவரத்திலிருந்து ஒரு பாடல்.

திருநாமம் அஞ்செழுத்தும் செப்பா ராகில்
தீவண்ணர் திறமொருகால் பேசா ராகில்
ஒருகாலுந் திருக்கோயில் சூழா ராகில்
உண்பதன்முன் மலர்பறித்திட் டுண்ணா ராகில்
அருநோய்கள் கெடவெண்ணீ றணியா ராகில்
அளியற்றார் பிறந்தவா றேதோ வென்னில்
பெருநோய்கள் மிகநலியப் பெயர்த்துஞ் செத்தும்
பிறப்பதற்கே தொழிலாகி இறக்கின் றாரே.

இறைவனின் திருவருளைப் பெறாதவர் யார்?

‘நமசிவாய’ எனும் அஞ்செழுத்து திருநாமத்தினை ஒருகாலும் செப்பாதவர்.

தீவண்ணம் உடைய சிவனின் இயல்பை ஒருகாலும் பேசாதவர்.

ஒருகாலும் திருக்கோயிலினை வலம் வாராதவர்.

உண்பதற்குமுன் மலரைப் பறித்து அவற்றை இறைவனுக்கு இட்டுப்பின் உண்ணாதாவர்.

கொடுநோய்கள் தீர வெண்ணீற்றை அணியாதவர்.

இவ்வாறு செய்யாதாரெல்லாம் இறைவனது திருவருளை இழந்தவர் ஆவர்.
இப்படிப்பட்டவருக்கு, தீராத கொடுநோய்கள் மிகத் துன்புறுத்தச் செய்து,
வரும் பிறப்பிலும் பயனின்றி இறந்து மீண்டும் மீண்டும்
பிறப்பதற்கு அவர் செய்த ஊழ் வினைகளே தொழிலாகி இறக்கின்றார், என்கிறார் திருநாவுக்கரசு நாயன்மார்.
—————————————————————
தீராத நோயெல்லாம் தீர்த்து வைக்கும் திருநீறினையும்,
பிறவிச் சுழலில் சிக்கித் தவிப்பவருக்கும் அபயம் தந்திடும்
நமசிவாய மந்திரத்தின் மாண்பினையும் இவ்வாறாய் எடுத்துரைக்கிறார் அப்பர் பெருமான்.
உம்மையில் தொடர்ந்த வினைகள், இம்மையில் அவன் பாதம் பற்றி அகற்றா வினைகள்,
எல்லாம் சேர்ந்து, மறுமையினைத் தொடர்வதற்கு தொழிலாகவே மாறி விடுகின்றனவாம்.
‘ஒருகாலும்’ என்ற சொல்லாடலை கவனிக்கவும். ஒருமுறையேனும், மேற்சொன்னவற்றைச்
செய்தாலும், அந்த நற்செயலின் பயனே, நாதனின் அருளைத் தந்திடாதோ.
நற்பயன்களின் தொடர்ச்சியால், வினைப்பயன்கள் வெந்து மடியாதோ.

————————————————————–
இன்ன பிற:
ஜெயமோகன் திண்ணையில் எழுதியது