“அம்மா” என்று அன்போடு சத்யகாமன் அழைத்த குரல் கேட்டு, அவன் அன்னை திரும்பிப் பார்க்கிறாள்!

“அம்மா, நல்லதொரு வழிநடத்தும் குருவினைத் தேடி அடைய வேண்டிய தருணம் வந்துவிட்டது போல உணர்கிறேன் நான். நமது மூதாதையர் பற்றிச் சொல்லுங்களேன், குருவானவர் கேட்டிடச் சொல்ல வேண்டுமல்லவா…” என வினாவெழுப்பினான், சத்யகாமன்.

“தெரியாது அன்ப” என்பதுடன் அவள் சொல்கிறாள் – “என் இளவயதில் அங்கும் இங்குமாக நான் அலைந்து வேலைகள் செய்து கொண்டிருந்த போது நீ பிறந்தாய். உன் பெயர் சத்யகாமன். என் பெயர் ஜபலை. நீ ஏன் “சத்யகாமன் ஜபலை” என உன்னை அழைத்துக் கொள்ளக்கூடாது” என்றாளே பார்க்கலாம்!

“அப்படியே ஆகட்டும்” எனச்சொல்லி அன்னையிடம் இருந்து விடைபெற்றுக்கொண்ட அவன் கௌதமரிடன் வந்து “மகரிஷிக்கு வணக்கங்கள். அடியேனைத் தங்கள் சீடனாக ஏற்றருள் புரிய வேண்டும்” என்றான்.

அவரோ, எதிர்பார்த்தபடியே, அவனது குடும்பத்தினைப் பற்றிக் கேட்கலானார். அவனோ, உண்மையை மறைக்காமல், தன் தாய் சொன்னதை அப்படியே சொல்கிறான்.

அதைக்கேட்ட மகரிஷியோ, “உன் பெயரில் இருக்கும் சத்யம் போலவே, நீ உண்மையை உரைப்பதிலேயே உன் உயர் பிறப்பை உணர்கிறேன். உனக்கு உயர் ஞானத்தை அடையும் உபதேசத்தினை தொடங்கி வைக்கிறேன்.” என்று சொல்லி, அவனை தன் சீடர்களில் ஒருவனாக ஏற்றுக்கொண்டார்.

பின்னர், அவர் அவனிடம் நூறு மெலிந்து நலிந்த பசுக்களை ஒப்படைத்து அவற்றை மேய்க்கும் பொறுப்பையும் தந்தார். அவற்றை பெற்றுக்கொண்ட அவன், இந்த நூறு பசுக்களை ஆயிரமாக மாற்றிக் காட்டிய பின்னர், நமது குருவிடம் திருப்பி ஒப்படைக்கலாம்” என மனதில் சொல்லிக் கொண்டான்!

பல வருடங்களுக்கு காடுமேடுகளில் அலைந்து குரு தன்னிடம் ஒப்படைத்த அந்த பொறுப்பை சிரமேற்கொள்கிறான் சத்யகாமன்.

பின்னொருநாள், அவன் மேய்த்த மாடுகளில் ஒன்று அவனருகே வந்து கேட்கிறது, “நாங்கள் இப்போது, ஓராயிரம் மாடுகளாகி விட்டோம். இப்போது உன் எண்ணப்படியே குருவிடம் எங்களை நீ திருப்பி ஒப்படைக்கலாமே?.”. பின்னர், “இத்தனை வருடங்களாக நீ எங்களை கவனித்துக் கொண்டதுக்கு மாற்றாக, நான் உனக்கு பிரம்மத்தின் நான்கு பாதங்களில் ஒன்றினை சொல்லுவேன்” என்றது.

“அப்படியே ஆகட்டும் மாடு ஐயா” என்றான் சத்யகாமன்.

“மொத்தம் நான்கு பகுதிகள். கிழக்கு, மேற்கு, தெற்கு, வடக்கு என்பன. இந்த நான்கும் பிரம்மத்தின் ஒரு பாதம் ஆகும். இந்த பாதத்தின் பெயர் “திகழ்ஒளி”. இந்த நான்கின் மீதும் தியானிக்க ஒளியாக வேண்டும். நெருப்பாகிய அக்னி உனக்கு இதைப்பற்றி மேலும் சொல்லும்” என்றது மாடு.

மறுநாள், ஆயிரம் மாடுகளுடன், தனது குருவின் ஆசிரமத்தினை நோக்கி நடக்கலானான் சத்யகாமன். அன்று மாலைப்பொழுதைக் கழிக்க, நெருப்பினை மூட்டி அனல் வளர்க்க, அருகே வந்து அழைத்தது அக்னி, “சத்யகாமா…”.

“நண்பா, உனக்கு பிரம்மத்தின் இன்னொரு பாதத்தினைச் சொல்வேன்” என்றது அக்னி.

“அப்படியே ஆகட்டும் அக்னி ஐயா” என்றான் சத்யகாமன்.

“மொத்தம் நான்கு பகுதிகள். பூமி, ஆகாசம், வானம், கடல் என்பன அந்த இன்னொரு பாதம். இதன் பெயர் “அந்தமில்லா”. இந்த உண்மையினை நீ தியானித்து வந்தால், நீயும் முடிவில்லாதவனாக என்றென்றைக்கும் ஜீவித்திருப்பாய்” என்றது. மேலும் சொல்ல, அன்னப்பறவை ஒன்று வரும் என்றது.

மறுநாள் தொடர்ந்து நடந்த சத்யகாமன், அன்றைய மாலைப்பொழுதினைக் கழிக்கையில், அக்னி சொன்னது போலவே, அன்னமும் அவன் அருகில் வந்தழைத்தது.

“நண்பா, உனக்கு பிரம்மத்தின் இன்னொரு பாதத்தினைச் சொல்வேன்” என்றது அன்னம்.

“அப்படியே ஆகட்டும் அன்னம் ஐயா” என்றான் சத்யகாமன்.

“மொத்தம் நான்கு பகுதிகள். நெருப்பு, சூரியன், சந்திரன், மின்னல் என்பன. இவை நான்கும் பிரம்மத்தின் இன்னொரு பாதம். இதன் பெயர் “முழுஒளி”. ஒளியால் நிறைந்து இந்தப் பாதத்தினை தியானித்தால், இதனை அறியலாம். நாளை, பறவை ஒன்று இதைப்பற்றி மேலும் சொல்லும்” என்றது.

அடுத்த நாள் அதைப்போலவே பறவை ஒன்று வந்து அவனை அன்புடன் அழைத்தது, “சத்யகாமா…”.

“நண்பா, உனக்கு பிரம்மத்தின் இன்னொரு பாதத்தினைச் சொல்வேன்” என்றது பறவை.

“அப்படியே ஆகட்டும் பறவை ஐயா” என்றான் சத்யகாமன்.

“மொத்தம் நான்கு பகுதிகள். மூச்சு, கண், காது, மனம் என்பன. இந்தப் பாதத்தின் பெயர் “நிறுவப்ப்பட்டது”. இதை நன்கு தியானிக்க, இந்த உலகத்தில் இருந்தாவாறே ஆகாசத்தை அறிய வேண்டும்.” என்றது.

இப்படியாக, பிரம்மத்தின் நான்கு பாதங்கள் என்னவென்று சொல்லியதைக் கேட்டவாறு, தனது குருவின் ஆசிரமத்தினை வந்தடைந்தான் சத்யகாமன்.

அவனை அருகில் அழைத்த குரு, “சத்யகாமா, உன் முகம் மிகுந்த தேஜஸுடன் ஒளிருகிறதே – உயர் ஞானத்தை அடைந்தவன் போலே. என்னிடம் சொல், உனக்கு உயர் ஞானத்தை சொல்லித் தந்தவர் யாரோ?” என்றாரே பார்க்கலாம்!

அதற்கு சத்யகாமன், “பெருமதிப்பிற்குரிய ஐயா, எந்த மனிதரும் எனக்கு ஏதும் சொல்லித் தரவில்லை. எனினும், உண்மையான உயர் ஞானத்தினை உங்களிடம் இருந்து பாடம் கேட்கவே நான் காத்திருக்கிறேன். ஏனெனில் ஆசிரியரின் ஞானம் மட்டுமே மாணவனுக்கு பலன் தரும் என்பதனால்.” என்றான்.

பின்னர் அந்த ஆசிரியரும், தன் மாணவனுக்கு அதே ஞானத்தினை சொல்லித் தந்தாராம், எந்தக் குறைவும் இல்லாமல்.

– சந்தோக்ய உபநிடதம்