சென்ற பகுதிகளில், சக்திக்கு சிவன் தந்த விளக்கமும், அந்த விளக்கத்தின் உள்ளே சிவன் மேற்கோள் காட்டிய சம்பவத்தினில், அனுமனுக்கு சீதை தந்த விளக்கமும் பார்த்தோம். அவற்றிலெல்லாம், எங்கெங்கும் நிறைந்திருக்கும் பிரம்மமாகவே இராமனின் உண்மை உருவம் இருப்பதாகப் பார்த்தோம். நம் அறியாமையினால்தான் இராமனை அவன் மாயா சக்தியில் இருந்து பிரித்தறிய இயலாமல் இருப்பதால் நம்மால் அவனை பரப்பிரம்மமாக உணர இயலவில்லை என்பதையும் பார்த்தோம்.

தொடர்ந்து சக்திக்கு சிவன் இராமனைப்பற்றி விளக்கிக்கொண்டிருக்கிறார். அதில் அனுமனுக்கு சீதை இராமனின் உண்மை உருவத்தினை விளக்கியதைத் தொடர்ந்து, சீதை அருகிலேயே இருந்த இராமனும் தொடர்ந்து அனுமனுக்கு உயர்ஞான உபதேசம் செய்யலானார்!.

இராமரின் உரை: அன்பின் அனுமனே, இப்போது உனக்கு நான் ஆத்மா, அனாத்மா மற்றும் பரமாத்மா பற்றியான உண்மையை சொல்லப்போகிறேன்:

ஒரு விளக்கத்திற்காக, ஆகாசத்தை எடுத்துக் கொள்வோம். அதை மூன்றாக பிரித்துக் கொள்வோம். முதலில் எங்கெங்கும் வியாபித்திருக்கும் வானம். அடுத்தாக, அந்த வானத்தின் ஒரு பகுதியாக, மண்ணில் நீர்நிலைகளின் பிம்பமாகத் தெரியும் வானம். இறுதியாக, ஒரு பானையிலோ அல்லது குடத்திலோ நிரப்பியிருக்கும் நீரில் பிம்பமாகத் தெரியும் வானம்.

இந்த ஆகாசப் பிரிவுகளைப்போலவே, சுத்த சைத்தன்யமும்(சைத்தன்யம் : உயர் ஞானமாய் விளைந்திருக்கும் பிரம்மம் – Consciousness) மூன்று பகுதிகளாகச் சொல்லலாம். முதலில் எங்கெங்கும் நிறைந்திருக்கும் சுத்த சைத்தன்யம். அடுத்ததாக புத்தியினால் தெரியும் சைத்தன்யம். மூன்றாவதாக, ஜீவனின் புத்தியில் பிம்பமாகத் தெரியும் சைத்தன்யம்.

எங்கெங்கும் வியாபித்திருக்கும் சுத்த சைத்தன்யம், எங்கெங்கும் விரிந்திருக்கும் ஆகாசத்தைப் போன்றது. அடுத்ததாக புத்தியில் தெரியும் சைத்தன்யம், ஒரு நீர் நிலையில் பரப்பளவிற்குள் அதன் எல்லைகளுக்கு உட்பட்டது. அடுத்ததாக, ஒரு சிறிய குடத்தில், அந்த நீர் நிலையில் இருந்து முகந்து வைக்க, அது தனிப்பட்ட ஆன்மாவிற்கு ஒப்பாகும். ஆக அந்த குடத்தில் பிம்பமாகத் தெரியும் வானம், அந்த குடத்தின் எல்லைகளுக்கு உட்பட்டது.

இப்போது, ஆன்மஞானம் முழுமையாக அடையாதவர்கள் என்ன தவறு செய்கிறார்கள் என்றால், புத்தியில் அல்லது ஜீவனில் பிம்பமாகத் தெரியும் சைத்தன்யத்தினை உண்மையானதாகக் கொள்வதுதான். அதாவது, தங்கள் அக உறுப்புகளால் செய்யும் செயலின் விளைவுகளுக்கு தாங்களே மூலம் என நினைக்கிறார்கள். உண்மையில் அவர்கள் ஒரு கருவி தான் என அறியார். அப்படித் தவறாக கொள்ளும் ஆத்மா, ஜீவனே ஆன்மாவின் மூலம் எனக் கொள்கிறது. அதானால்தான் அது ஜீவாத்மாவாகவே இருக்கிறது. அவர்களுடைய புத்தியானது, சித்தில் சேமித்திருக்கும் அனுபவங்களின் மூலமாக மட்டுமே முடிவு எடுத்ததினால் ஏற்படும் விளைவு இது. தத்வமஸி (அதுவே நீ) என்னும் மகாவாக்கியத்தினை கேட்டிட, ஓதிட, தியானித்திட, பரமாத்மாவிற்கும் ஜீவாத்மாவிற்கும் உள்ள ஒற்றுமையை உணரலாம். எல்லைகளால் சிறைப்பட்ட ஜீவனையும், அதன் புத்தியையும் மாயை என உணர, தானே எல்லாம் என்னும் அகங்கார மடமையும் அழிவதைக் காணலாம்.

தொடர்ந்து இராமர் சொல்கிறார்: என்னுடைய பக்தன் எவனொருவன், இந்த பேருண்மையை புரிந்து கொள்கிறானோ, அவனே என் நிலையை அடைவதற்கு தகுதியானவன். வெறுமனே, இந்த உண்மையைத் தேடி, மறைகளை மட்டும் கற்று அலசியும், என்னிடம் பக்தி இல்லாமல் இருக்கிறவன், என்னைப் பற்றி அறிய இயலாதவனாய் இருக்கிறான். அவனால் நூறு பிறவி எடுத்தாலும் பக்தி இல்லாமல் முக்தியை எட்ட இயலாது.

இப்படியாக இராமர் அனுமனிடம் சொல்லி முடித்தார்: “எந்த ஒரு தீவினையும் அண்டாதவனே, “ஸ்ரீராம இருதயம்” என்னும், என் உண்மை நிலையை உரைக்கும் இவ்வுரையை நானே உனக்கு நேரடியாக வழங்கிடும் பேறு பெற்றாய். இதனால் பெறும் பேரறிவானது, இந்திர லோகம் ஆளும் பேறினைக் காட்டிலும் பன்மடங்கு பெரியது.

அதானால் தான் தொண்டரடிப்பொடியாழ்வாரும்,
“பச்சை மாமலைபோல் மேனி பவளவாய் கமலச் செங்கண்
அச்சுதா, அமரர் ஏறே ஆயர் தம் கொழுந்தே என்னும்
இச்சுவை தவிர யான் போய் இந்திரலோகம் ஆளும்
அச்சுவை பெறினும் வேண்டேன், அரங்கமாநகருளானே!”
என்றாரோ!

அத்யாத்ம இராமாயணத்தில் மேற்கூறிய ஸ்ரீராம இருதயம் எனப்படும், அனுமனுக்கு இராமர் அளித்திட்ட உரையை, பரமசிவன், பார்வதி தேவிக்கு உரைத்திட்டு சொல்கிறார்: “இந்த சுலோகங்களை இராம பக்தியோடு படிப்பவரும் கேட்பவரும் நிச்சயம் முக்தி அடைவர். பெரும் துயர் தரும் தீவினையாவும் கூட இவற்றைப் படிப்பவரிடம் இருந்து பறந்தோடிப் போகும். அவர்கள் பெரும் யோகியரும் பெருந்தவத்தால் அடையக் கடினமான பெரும் பேறினையெல்லாம் அடைவார்கள்”.

உசாத்துணை:
* அத்யாத்ம இராமாயணம் : சுவாமி தபஸ்யானந்தர் அவர்களின் ஆங்கில உரை.
* ஆதித்ய ஹ்ருதயமும் ஸ்ரீராம ஹ்ருதயமும் – பகுதி 2 : திரு. ச.நாகராஜன்.