சமயத்தின் நோக்கம் மனிதனை சமைப்பது – மனிதனைப் பக்குவப்படுத்துவது – இப்படிச் சொல்லிக் கேள்விப் பட்டிருக்கிறோம்.

நோக்கம் நிறைவேறி இருக்கிறதா?
நிறைவேறிக் கொண்டிருக்கிறதா?
அல்லது இனிதான் நிறைவேறுமா?

இந்த அறிவியல், தொழில் நுட்ப உலகில் சமயத்தால் எதையும் சமைக்க முடியுமா என்ன?

இந்த எல்லா கேள்விகளுக்கும் எளியதொரு நிகழ்ச்சியை மேற்கோள் காட்டுகிறேன். சில நாட்களுக்குமுன் இங்கே வானொலியில் காதில் கேட்ட கதைதான் இது:

அமெரிக்காவில் பெரும்பாலானோர் அன்றாடம் காய்ச்சிகள். நன்றாக உழைத்து பணம் சம்பாதிப்பது, அவற்றை நன்றாக அனுபவித்து செலவழிப்பது, இதுவே அவர்களின் தாரக மந்திரம். சேமிப்பது வெகு குறைவான பணமே. அப்படிப்பட்ட ஒருவர், வானொலியில் நடக்கும் ஒரு நிகழ்ச்சித் தொகுப்பாளரை தொலைபேசியில் அழைத்து தன்னைப்பற்றிய செய்தியை அவரே சொல்கிறார்:

“எனக்கு இரண்டு குழந்தைகள். அன்றைக்கு குடும்பமாக சர்ச்சுக்குப் போயிருந்தோம். அன்றைக்கு சிறப்பாக ஒவ்வொருவரும் ஒரு சிறப்பு பிரார்த்தனை செய்து கொள்வதாக நானும், என் மனைவியும், மற்ற குடும்ப நண்பர்களும் பேசிக்கொண்டோம். இதை குழந்தைகளும் கேட்டு அவர்களும் ப்ரார்த்தனை செய்து கொண்டார்கள் போலும். ப்ரார்த்தனை முடிந்தவுடன், நான் குழந்தைகளிடம் ஆவலுடன் கேட்டேன், அவர்களின் ப்ரார்த்தனை என்னவென்று. அதற்கு அவர்கள் சொன்னார்கள் – ‘நம் மாமா அவர்களுக்கு சீக்கிரம் வேலை கிடைத்து அவரது துயர்கள் எல்லாம் தீர வேண்டும்’ என்று. அவர்கள் சொல்வது உண்மைதான். அவரோ சென்ற சில மாதங்களாக வேலை இழந்து, பல கடன்கள் கழுத்தை நெறிக்க, படும் துன்பங்களை சொல்லி மாளாது. அவரின் குழந்தைகள் பாதி நேரம் எங்கள் வீட்டில் தான் தற்காலிக தஞ்சம். இந்தப் பிஞ்சுக் குழந்தைகளுக்கு, இப்படி இன்னொருவர் துன்பம் தீர வேண்டும் என்னும் எண்ணம் ஏற்பட்டிருக்கிறதே, மிக்க நன்றி இறைவா, என ஆச்சரியப்பட்டுக் கொண்டிருக்கும் அதே வேளையில், இன்னொரு உண்மையும் என்னை இடித்து உறைக்கத் துவங்கியது. எங்கள் குடும்பத்தைப் பற்றியான பயம் தான் அது. எங்களுக்கும் கிட்டத்தட்ட 36,000 டாலர்கள் வீட்டுக் கடன்கள் இருக்கின்றன. நாங்கள் கணவன் மனைவி இருவரும் சம்பாதிப்பதால், ஏதோ கடனின் வட்டியையாவது அடைக்க முடிகிறது. இதுவே ஒருவராவது, வேலை இழக்கும் படி நேர்ந்தால், என்னவாகும் என நினைத்துப் பார்த்தேன். என் குழந்தைகள் முகத்தையும் ஒருமுறை பார்த்தேன். உடனே முடிவுக்கு வந்தேன். இந்தக் கடன்களையெல்லாம் எப்படியாவது அடைத்துவிடுவது என்று. வீட்டுக்கு வந்தவுடன், மனைவியுடன் கலந்து பேசி, இதற்கான திட்டத்தை தயார் செய்தோம். இருவரும் ஒரு நாளைக்கு இரண்டு மணி நேரம் கூடுதலாக வேலை செய்வதாக முடிவு செய்தோம். வீண் செலவுகளையும் குறைத்துக் கொண்டோம். மாதத்திற்கு 2,000 டாலர்கள் என சேமிக்க, சென்ற 18 மாதங்களில் சேமித்ததை நேற்றுதான் வங்கியில் செலுத்தி, எல்லா கடன்களையும் அடைத்து விட்டோம். இன்றில் இருந்து நாங்கள் Debt Free!.”
என்ற மகிழ்ச்சியான கூதுகலத்துடன் சொல்லி முடித்தார் அவர்.

இந்த கதைச்செய்தியில், ப்ரார்த்தனை, குழந்தைகளிடம் ஆன்மிகம் போன்ற அருஞ்செய்திகள் இருந்தாலும், நான் முக்கியமாக குறிப்பிட விரும்புவது வேறு ஒன்றை. இந்தச் சம்பவம் நடந்த இடமான சர்ச் வளாகத்தை. சர்ச் என்னும் ‘ஆலயம்’ எப்படிப் பட்ட இடம்? எல்லோரும் ஒருவர் மத்தியில் ஒருவர் கூடி தங்கள் துயர் தீர இறைவனை வேண்டும் இடம். ‘வேண்டுதல்’ எப்போது நடக்கும். ஒருவர் மனமுருக நடக்கும். இந்த சம்பவக் கதையில், அந்த குழந்தைகள் அந்த சர்ச்சில், அந்த சூழ்நிலையில், இதைச் சுட்டிக் காட்டாமல், வீட்டீலேயோ, மற்ற இடத்திலேயோ விளையாட்டாக சொல்லி இருந்திருந்தால், அந்த நபர் அதற்கு அவ்வளவு முக்கியத்துவம் கொடுத்து, பாடுபட்டுக் கடனை அடைத்திருப்பாரா என்பது சந்தேகத்திற்கு உரியதே. அப்படிப் பார்க்கையில் சர்ச் என்னும் நிறுவனமும், அது சார்ந்த சமயமும் சமுதாய முன்னேற்றத்திற்கு எவ்வளவு துணை புரிகிறது என்பதனை உணர இயலும்.

சமயத்தின் பங்கு ஒருபுறம் இருக்கட்டும். அதை நமக்கு சாதகமாக நாம் பயன்படுத்திக் கொண்டால் தானே அதன் பயன் நமக்குத் தெரியும். ஒரு மாம்பழம் காய்வாட்டாக இருக்கிறது. அது இன்னமும் நன்றாக பழுக்கட்டுமே எனக் காத்திருக்கிறோம். மாம்பழம் மிகவும் கனிந்து அழுகி விடுவதற்கு முன் தக்க சமயத்தில் உண்டால்தானே சுவைக்க முடியும். அதுபோலத்தான், சமயத்தில் இருந்து நாம் சமைவதற்கு தேவையானவற்றை தேவையான சமயத்தில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இது அழுகிய பழம், என மாம்பழத்தைக் குறை சொல்வதில் பயனென்ன? சமயத்தில் இருக்கும் எல்லா விஷயங்களும் எல்லாருக்கும் பயன் தராமல் போகலாம். ஒருவருக்கு பயன் தருவது, இன்னொருவருக்கு உதவாமல் போகலாம். அதனால், சமயத்தை குறை சொல்வதை விடுத்து, பயன் பெறப் பார்ப்பதே நல்லது.

எப்படிப்பட்ட பயனைப் பெற நாம் முயல வேண்டும்? தம்மை சமைக்கத் தக்க பயனைப் பெற முயல வேண்டும். அவரது அகத்தினை, அகத்தினில் நிறையும் மனத்தினை இசை போல உருக்கி கனிந்திடச்செய்ய வேண்டும். அவ்வாறு மனதில் தூய உருக்கத்தில் ஏற்படும் உணர்வினையே திருமூலர் ‘அன்பு’ என்கிறார். அந்த அன்பே சிவம் என்கிறார். அன்பும் சிவமும் இரண்டல்ல என்கிறார், ஏனெனில் அந்த அன்பே, சிவமதைக் காண விசுதத்தில் வித்திடுகிறது. இந்த இறை அன்பு ஏற்பட, மனதளவில் பலவாறு பண் பட வேண்டும். அவரவர் மனமுதிர்ச்சிக்கு ஏற்றாற்போல, பல காலமும் ஆகலாம், சில நாட்களும் ஆகலாம். அதுவரை, அகமுருகி, அவன் தாள் பணிவதே அகத்தால் செய்ய வல்லது.