விவேகானந்தரின் வாழ்க்கைச் சரித்திரம் தனை இந்தத் தொடரில் படித்து வருகிறோம்.
மெய்யன்பர்களே, தொடர்ந்து படிக்கலாமா?

கடந்த பகுதிகள்:
பகுதி 1
பகுதி 2

கிட்டத்தட்ட இப்போது, நரேந்திரன், ஸ்ரீஇராமகிருஷ்ணரின் சிறப்பு சீடன் எனப்பெயர் பெற்றுவிட்டார். சிறப்பானதொரு பயனுக்காக, இராமகிருஷ்ணராலேயே தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவனல்லவா!. எல்லா மாணவர்களுக்கும் சமமாக தன் சக்தியினைச் செலவிட்டாலும், எப்போதும் இராமகிருஷ்ணர் நரேந்திரன் மீது ஒரு ‘கண்’ வைத்திருந்தார். இடர் வரும் போதெல்லாம், இராமகிருஷ்ணரின் உதவியை நாடினார் நரேந்திரன். ஒருமுறை பக்கத்தில் இருந்த ஒரு ஆலையில் இருந்து வந்த சங்கூதும் சப்தம் அடிக்கடி வர, அது தன் கவனத்தை திசை திருப்புவதாகச் சொல்ல, இராமகிருஷ்ணரோ, அந்த சப்தத்தின் மீதே கவனத்தை நிறுத்தச் சொன்னாராம். இன்னொருமுறை, தியானம் செய்யும் போது, தன் உடலை மறக்க கடினப்பட, இராமகிருஷ்ணர் நரேந்திரனின் புருவ மத்தியில் ஒரு விரலை அழுத்தி, அந்த அழுத்தத்தைக் கவனிக்கச்சொல்ல, அந்த செயல்முறை நரேந்திரனுக்கு உதவியாய் இருந்தது.

ஒருமுறை, மற்ற சீடர்களில் சிலர் இறைஇன்பத்தில் ஆட்டம் வந்து ஆடிட, நரேந்திரன், எனக்கு மட்டும் ஏன் இப்படி ஏற்படுவதில்லை என தன் ஆசிரியரிடம் கேட்க, அவர் சொன்னார்: “குழந்தாய், ஒரு பெரிய யானை, சிறிய குளத்தில் இறங்கினால், அதிலுள்ள தண்ணீர் நாலாபக்கமும் தெறித்தோடும். ஆனால் அதே யானை கங்கையில் இறங்கினால், ஆற்றில் சலசலப்பேதும் இல்லை. நீ குறிப்பிட்டவர்கள், அவர்களின் மிகக் குறைந்த அனுபவத்தால் கூத்தாடுகிறார்கள். நீயோ, பெரும் ஆற்றுக்கு ஒப்பானவன்.” என்றாராம்.

மற்றொருமுறை, அதிகப்படியான இறையருள் தந்த ஊக்கத்தினால், சற்றே பயந்துவிட்டார் நரேந்திரன். அதைப்பார்த்த இராமகிருஷ்ணர், அவரிடம் வந்து, ‘இறைவன் இனிப்பான கடல் போன்றவன். நீ அதில் மூழ்குவதற்கு அஞ்சுவானேன்?
ஒரு கோப்பையில் இனிப்பான ரசம் ஒன்று நிறைந்திருக்கிறது. அந்தப்பக்கம் மிகவும் பசியான தேனீ ஒன்று வருகிறது. அந்த தேனீயாக இருந்தால் நீ என் செய்வாய்?’ என்று வினவினார். நரேந்திரனோ, ‘நானாக இருந்தால் அந்த கோப்பையின் விளிம்பில் கவனமாக உட்கார்ந்து கொண்டு, மெதுவாக அந்த இரசத்தைப் பருகப்பார்ப்பேன். இல்லாவிடின், அந்த இரசத்தில் தவறி விழுந்து மூழ்கி விட்டால், உயிரல்லவோ போகும்?’ என்றாராம். இராமகிருஷ்ணரோ, ‘நல்லது, ஆனால் நாம் இங்கே இரசமாக பார்ப்பது – பேரின்பம் தரும் சச்சிதானந்தக் கடல். இங்கே இறப்பென்பதே இல்லை. யாராவது இறை அன்பைப்போய் அதிகம் எனச் சொல்ல இயலுமா? எவ்வளவானாலும், அது அதிகமில்லை. நீ அந்தக் கடலில் ஆழத்திற்கு செல்ல வேண்டும்’ என்றாராம்.

பின்னொருநாள், ஆசரமத்தில் மாணவர்கள் அனைவரும் இறைவனின் இயல்பைப் பற்றி விவாதித்துக் கொண்டிருந்தனர். இறைவன் அவதாரமெடுத்து உண்மையா அல்லது இறைவன் எப்போதும் உருவமற்றவனா – இப்படியெல்லாம் விவாதங்கள். இவற்றில் நரேந்திரனும் உண்டு. நரேந்திரனோ, தனது கூரிய சொல் ஆற்றலால் அந்த விவாதத்தை பிரித்து மேய்ந்து, எல்லோரையும் வாயடைத்துப் போகும்படி செய்து விட்டு, அந்த வெற்றியில் பெருமிதம் கொண்டார். அவர்களின் விவாதத்தை இரசித்து வந்த இராமகிருஷ்ணர், அது முடிந்ததும், ஒரு பாட்டும் பாடினார். அதன் வரிகள்:

எப்படியெல்லாம் யோசிக்கிறாய் மனமே
எம்பெருமானை அறிய,
எப்படியெல்லாம் யோசிக்கிறாய் மனமே?

இருட்டறையில் அடைத்த பித்து
பிதற்றுவதுபோல் அல்லவோ நீ?

அன்பால் மட்டுமே அடையத்தக்கவன் அவன்,
அன்பிலாமல் அவனை அளக்கத்தான் இயலுமோ?

உறுதியால் மட்டுமே அவனை அடைய இயலும்,
மறுப்பினால் ஒருபோதும் இயலாது.

வேதமோ, தந்திரமோ மேலும் ஆறு தரிசனமோ
ஒன்றும் உதவாது என அறிவாய்.

இதன் பொருளை உணர்ந்த நரேந்திரன், அறிவால் மட்டும் இறைவனை அளவிட, அவனை அறிந்திட முடியாது என உணர்ந்தார்.

உண்மையில், விவேகானந்தரின் இதயத்தில் பெரும் இறை அன்பு நிறைந்திருந்தது. அதை அவர், அவ்வளவாக எல்லோருக்கும் வெளிப்படுத்தியதுதான் இல்லை. ஒருமுறை இராமகிருஷ்ணர், நரேந்திரனின் கண்களைக் காட்டி, ‘இறை பக்தனுக்கு மட்டுமே இப்படி இளகிய பார்வை இருக்கும். ஞானியின் கண்களோ வரண்டு இருக்கும்.’ என்றாராம்.
பல ஆண்டுகளுக்குப் பின், விவேகானந்தர், தன்னையும் தன் குருவின் மெய்ஞான நிலைப்பாட்டினையும் ஒப்பிட்டு இவ்வாறு சொன்னாராம் : “என் குருவோ உள்ளே பெரும் ஞானி; ஆனால் வெளியே மற்றவர் பார்வைக்கு பக்திமான். நானோ உள்ளே பக்தியாளன்; வெளியில் உங்கள் கண்களுக்கு ஞானியாகத் தெரிகிறேன்.” என்றாராம். அதாவது, இராமகிருஷ்ணரின் மிகப்பெரும் ஞானமெல்லாம், மிக மெல்லிய பக்தி எனும் திரையால் மூடப்பட்டிருந்தது என்றும் தன் பக்தியெல்லாம் தன்னுள்ளேயே இருப்பதை மற்றவர் அதிகம் அறியார், ஆனால், தான் செய்யும் பிரசங்கங்களினால், தான் ஞானிபோல தோன்றிடச் செய்கிறது என்கிற பொருளில்.

(நாம் இந்த புத்தகத்தை தொடர்ந்து படிக்க இருக்கிறோம், நீங்களும் தொடர்ந்து வரவும்.)

உசாத்துணை : சுவாமி விவேகானந்தர் வாழ்க்கைக் குறிப்புகள் – சுவாமி நிகிலானந்தர்.

Advertisements