“என் விளையாட்டு முற்றுப் பெற்றது” (My Play is Done) என்ற தலைப்பில், சுவாமி விவேகானந்தர், 16 மார்ச், 1895இல், நியூ யார்க்கில் எழுதிய ஆங்கிலக் கவிதையின் தமிழாக்கம்:
————————————————–
எழுதலும், வீழ்தலும் இயற்கையாய் இயைந்த நீரலை போன்ற நேரத்தில்,
இன்னமும் நான் உருண்டு கொண்டே இருக்கிறேன்;

சின்னதும், பெரியதுமாய், வாழ்க்கைச் சுழலில், நீர்த்தும், ஓடியும்;
ஓ, முடிவிலா விசை எனக்கு துன்பம்தான் தருகிறது. இனியும் அவற்றில் விருப்பமில்லை;

எப்போதும் உழன்றுகொண்டே, இலக்கை அடைய இயலாமல் இருக்க, ஏன் கரை கண்ணுக்குக்கூடத் தென்படவில்லை.

பிறவிக்குமேல் பிறவியெடுத்தும், இன்னமும் வாசலிலேயே நான்; வாசற்கதவுகள் திறந்தபாடில்லை.

மங்கிய கண்கள், நீண்டநாளாய் தேடிய, அந்த ஒற்றை ஒளிக்கற்றையைப் பிடிக்க, வீணாய் முயலுகின்றன;

வாழ்க்கையின் உயர்வான, ஒடிசலான பாலத்தின் மீதேறி கீழே பார்க்கிறேன்:
மக்கள் கூட்டமங்கே – மிகவும் கடனப்படுபவர்களும், அழுபவர்களும், சிரிப்பவர்களுமாய் – எதற்காக? யாருக்கும் தெரிவதில்லை.

கதவுகளுக்கு முன்னால், கடுமையான முகத்துடன், குரலொன்று கேட்கிறது: ‘இதற்குமேல் ஓரடியும் எடுத்து வைக்காதே. விதியை உன் வசப்படுத்தப் பார்க்காதே. இயன்ற அளவு அதை ஏற்றுக் கொள்ளப்பார்’ என்று.

மேலும், ‘அதோ அந்தக் கூட்டத்துடன் சேர்ந்துகொள். இந்தக் கோப்பையில் இருக்கும் ரசத்தைக் குடித்து, அவர்களைப்போல எவ்வளவு பித்துக்கொள்ள இயலுமோ, அதைக்கொள்.
அறிவதற்கு துணிவிருந்த உனக்கு, எதற்கு ஒப்பாரி?. நில், அவர்களோடு, கிட’, என்றது.

அந்தோ, என்னால், சும்மா இருக்க இயலவில்லையே. மிதக்கும் நீர்க்குமிழியான புவி –
அதன் வெற்று வடிவமும், வெற்று பெயரும், வெற்று பிறப்பு இறப்பு சுழலும் – இவையெல்லாம் எனக்கு ஒன்றுமிலா. நாமம், வடிவம் போன்ற தோற்றங்களைத் தாண்டி உள்ளே செல்ல எவ்வளவு காத்துக் கிடக்கிறேன்!

ஆ, கதவுகள் திறக்காதோ, எனக்காக அவை திறந்தேதான் ஆக வேண்டும்.

அன்னையே, சோர்ந்துபோன மகனுக்காக, வெளிச்சக் கதவுகளை திறந்து விடாயோ?

வீட்டுக்குத் திரும்பக் காத்திருக்கிறேன், அம்மா என் விளையாடல் முடிந்துவிட்டது.

நீ என்னை இருளில் விளையாட அனுப்பிவிட்டு, பயமுறுத்தும் முகமூடியை அணிந்தாயோ?

நம்பிக்கை இழக்க, துன்பம் வர, விளையாட்டு வினையானது.

இங்கும் அங்குமாய் அலைகளில் அலைக்கழிக்கப்பட, பொங்கும் கடலில்,
வலிய இச்சைகளும், ஆழ்ந்த துக்கங்களும், நிறைய, இருப்பது சோகம், வேண்டுவது மகிழ்ச்சி.

வாழ்க்கையோ, வாழும் இறப்பெனவாக, அந்தோ இறப்போ – யாரறிவார்?, ஏனெனில்,
இன்னொரு துவக்கம், இன்னொரு சுழற்சி, – மீண்டும் சோகமும், ஆனந்தமும்?

சின்னஞ்சிறார் பெரிதாய்க் கனவுகாண, பொற்கனவுகள், சீக்கிரமே, பொடிப்பொடியாய்ப் போக,
நம்பிக்கை நீரூற்றிக் காத்திருக்க, வாழ்க்கையோ பெரிதாய் துருப்பிடித்த இரும்பு.
தாமதமாக, வயதாக ஆக, பெறும் அனுபவ அறிவோ சுழற்சியை பயமுறுத்த, போய் சேர்ந்து விடுகிறோம்.

இளைஞராய், துவக்கத்தில், இருக்கும் சக்தியில் சக்கரம் சுழல, நாட்கள் நகர,
ஆண்டுகள் உருண்டோடுகின்றன. தோற்ற மயக்கத்தின் விளையாட்டு பொம்மையாய்,
அறியாமை தரும் நம்பிக்கை இன்னமும் சுழற்றிவிட, ஆசை நமைக்க,
துன்பமும், இன்பமும், சக்கரத்தின் ஆரங்கள்.

நானோ, நீரோட்டத்தில் இருந்து விலகிடுகிறேன், செல்வது எவ்விடத்திற்கென அறியாமல்.
இந்த நெருப்பில் இருந்து காப்பாற்று.

கருணை நிறை அன்னையே, ஆசையில் மிதக்கும் என்னைத் தடுத்தாட்கொள்!

உன் அச்சுறுத்தும் முகத்தைக் காட்டாதே, என்னால் அவ்வளவைத் தாங்க இயலுவதில்லை.

கருணை கொள்வாய், இச்சிறுவனின் தவறுகளைப் பொறுத்துக்கொண்டு.

என்றும் ஆர்ப்பாட்டமில்லா அமைதியான கரைகளுக்கு, என்னை எடுத்துச் செல்வாய் அம்மா – துன்பங்களுக்கு அப்பால், கண்ணீருக்கு அப்பால், உலக இன்பங்களுக்கும் அப்பால்.

சூரியனோ, சந்திரனோ, அல்லது மின்னும் நட்சத்திரங்களோ, அல்லது பளிச்சிடும் மின்னலோ – இவர்கள் யாராலும் வனின் புகழை, முழுமையாக வெளிப்படுத்த இயலாது, அவன் ஒளியையே அவர்கள் எல்லோரும் பிரதிபலித்தாலும்!

இனியும் சிதறடிக்கும் கனவுகள், வன் முகத்தை என்னிடம் இருந்து மறைப்பதை, அனுமதிக்காதே.
என் விளையாட்டு முற்றுப் பெற்றது; அன்னையே என் தளைகளை, உடைப்பாய், விடுதலை செய்வாய்!
——
மூலம்: The Complete works of Swami Vivekananda, Vol.6