பா 49:
சீவன் முக்தன் வித்வான் தேருவதன் முன் தன்னை
மேவும் உபாதிகுணம் விட்டுடனே – மேவுவான்
தன்னுரு சச்சித் இன்பத் தாங்கிடும் வண்டினுருத்
தன்னையுறல் போலத் தறி.

சீவன் முக்தன், அவன் ஆன்மஞானி ஆவதற்கு முன்னம் இருந்த உபாதிகளை கைவிட்ட உடனேயே, சச்சிதானந்த நிலை தனை அடைவான். வண்டு தன், புழு போன்ற உருவத்தினை விட்டு, பூச்சி வடிவத்தை அடைவதைப்போல.

ஜீவன் முக்தர் – என அழைக்கப்படுபவர், முக்தி என்னும் நிலையினை அடைந்த பின்னரும், உலக நன்மை பொருட்டு, தம் பூவுடலை துறக்காமல் இருப்பராவர். எனினும், அவருக்கு, அவருடைய ஞானத்தினால், அவர் சச்சிதானந்த சொருபீயாக இருப்பதினால், அவரே பிரம்மமாகவும் இருப்பவர். அவருக்கு முந்தைய உபாதிகள் ஏதும் அப்போது இல்லை. அதாவது, அவர் அந்நிலையை எட்டுமுன், அவருக்கு இருந்த, உடல், புலன் உணர்வுகள், மனம், போன்ற உபாதிகள் இல்லை.
எப்படி தங்கள் புழு போன்ற தோற்றத்தில் இருந்து, பறக்கும் பூச்சி போன்ற தோற்றத்திற்கு மாறிட, தங்கள் தோற்றத்தை, வண்டு போன்ற பூச்சிகள் இழக்கின்றனவோ, அதைப்போல.

பா 50:
மோகக் கடல் கடந்து மூளாசை கோபமுதல்
ஆகும் அரக்கர் அறக்கொன்று – யோகி
அமைதியொடு கூடியான் அவ்வின்பத்
தமைந்து ஒளிர்வானென்றே அறி.

மோகமெனும் கடலினைக் கடந்து, ஆசை, கோபம் எனும் அரக்கர்களைக் கொன்றபின், யோகியானவன், அமைதி என்னும் சாந்த நிலையினை அடைந்து, அது தரும் பேரின்ப நிலையில் ஒளிர்வான்.

மோகம், ஆசை, கோபம் என்னும் மூன்று அரக்கரையும் வெல்லுதல் யோகியின் முதற்செயலாகும். அவ்வாறு வென்றவன், எளிதாக, தான் யாரென்று அறியாமற் மறைக்கும் மாயைதனை வெல்வான். அறியாமை அகன்றால், பின் இனியெல்லாம் ஞானமே அல்லவோ. அங்கு, அமைதியைத் தழுவிதல் என்பது, “சும்மா இரு சொல்லற”, என்பதைச் சொல்லுகிறதோ! அந்நிலையில், நான் யார் என வினவிட, அவ்வினவலின் தோன்றலின் ஆதாரத்தினை ஆராய்ந்திட, கிட்டாதோ யாதும்!.

(கடல் கடந்து, அரக்கரைக் கொன்று, பிரிந்த மனைவியொடு சேர்ந்து, ஒளிர்ந்தான் இராமனும்!.)

இந்தத் தொடரில், இரமண மகரிஷி அவர்கள், வெண்பாக்களாய் வடித்த, ஆத்மபோதம் தனைப் பார்த்து வருகிறோம். அடியேனுக்குப் புரிந்த வரையில், செய்யுட்களைப் பிரித்துப் பொருள் தேடி வருகிறேன். பிழைகளைச் சுட்டினால், திருத்திட ஏதுவாய் இருக்கும். இதுவரை வந்த பகுதிகளை இங்கே காணலாம்.