பா 53:

உபாதிநா சத்த லுறுவான் முனிவ
னுபாதியில் விஷ்ணுவி னுள்ளே – யபேதமே
தோயத்திற் றோயமும் தூவிண்ணி லேவிண்ணும்
தீயிற்றீ யும்போலத் தேர்.

(சீர்களைப் பிரித்த பின்)
உபாதி நாசத்தல் உறுவான் முனிவன்
உபாதியில் விஷ்ணுவின் உள்ளே ஏய – பேதமே
தோயத்தில் தோயமும் தூவிண்ணிலே விண்ணும்
தீயிற் தீயும்போலத் தேர்.

பொருள்:
தான் உண்மையில் யாரென தெரியாமற் செய்யும் உபாதிகளை அழித்து ஒழித்தவன், உபாதி இல்லாத, எங்கெங்கும் நீக்கமற நிறைந்திருக்கும், விஷ்ணுவின் உள்ளே சென்று, அதுவாகவே ஆவான். அவனுக்கும், பரமனுக்கும் வேறுபாடு ஏதும் இருக்காது – தண்ணீரில் தண்ணீர் போலவும், தூய விண்ணில் விண் போலவும், நெருப்பில் நெருப்பு போலவும், தான் இரண்டற இருப்பதை அறிந்து தெளிந்தான்.

விளக்கம்:
தன் முந்தைய வினைகள் களையப்பட்டவன், உபாதிகளையெல்லாம் இழந்து, இறுதியான நிலையினை அடையுங்கால், எல்லாமும் ஆன பரமனும், தன் ஆன்மாவும், இரண்டு என்றில்லாமல், ஒன்றாக இருப்பதை அறிவான்.

ஒரு பானை நிறைய இருந்த தண்ணீர் இருக்கையில், அந்தப் பானை உடைந்து, அதன் நீர், ஒரு பெரிய நீர்நிலையில் கலந்து விட, அந்த நீர்நிலையில் இருக்கும் தண்ணீரில், எந்தத் தண்ணீர் பானையில் இருந்த வந்த தண்ணீர், எனப் பிரித்தறிய இயலாததுபோல, பரமனில், ஜீவனின் ஆன்மா, இரண்டற இருப்பதை அறிவான்.

ஒன்றுமில்லாத பானை, ஒன்று உடைந்து போக, பானைக்குள் இருந்த பரப்பிற்கும், எங்கெங்கும் நிறைந்திருக்கும் பர வெளிக்கும், இடையே பிரிவேதும் இல்லை.

எரிந்து கொண்டிருக்கும் நெருப்பு, அணைந்து போக, எங்கே போனது நெருப்பு?. அணைந்த நெருப்பும், எல்லாமுமான பரமனில் கரைந்தது போல.

முக்தி என்றால் என்ன?
மீண்டும் மீண்டும் பிறப்பெடுத்து, அல்லலோ அல்லல் படும் நிலைகளில் இருந்து, சுதந்தரம் பெறும் நிலையே முக்தி என்பதாகும். பொதுவாக இரண்டு வகையில், குறிப்பிடுகிறார்கள்: ஜீவன் முக்தி – அதாவது, மனிதர் உடலில் உயிர் இருக்கும் போதே, அடையும் முக்தி நிலை. விதேக முக்தி – உடலை விடுத்தபின், அடையும் முக்தி நிலை. ஜீவன் முக்தர், உடலோடு இருப்பதனால், இன்னும் அவருக்கு, தன் ஆன்மாவும், பரமனும், இரண்டாகத் தெரியும் நிலையில் இருப்பார். ஆனால், அது உண்மையல்ல என்பதையும் அவர் அறிவார். உண்மையான இறுதி நிலை, ஒன்றான நிலை, என்பதை அவர் நன்கு அறிந்திருப்பதால், மனக் கலக்கங்கள் இல்லை. என்றாலும், அவர் பரமனின் நிலையான நிலையை அறிந்திருந்தாலும், தன் உடலைத் துறக்கும் வரையிலும், அவர் பரமனாகவே மாறுதல் நிகழாது. (உடலோடு, சேர்ந்து, மறைதல் என்னும் நிலையும் சொல்லப்படுகிறது. இந்நிலை, வேதாந்தத்தைக் காட்டிலும் சித்தாந்தத்தில் வலியுறுத்தப் படுகிறது.)

உபநிடதங்களில் இருந்து குறிப்புகள்:

“அவன் எப்போது, எல்லா தளைகளில் (கர்ம வினைகள்) இருந்து விடுபடுகிறானோ, அக்காலம் வரை, தாமதமாகின்றது. அதன் பின், அவன் முழுமை அடைகிறான்.”
சாந்தோக்ய உபநிடதம் VI. xiv, 2
“அவனுக்கு, இறுதியில், எல்லா மாயைகளும், அவற்றால் ஏற்படும் எல்லா குறைபாடுகளும் முற்றுப்பெறுகின்றன.”

ஸ்வேதஸ்வதார உபநிடதம் 1.10
“எப்படி, நதிகளெல்லாம், கடலினில் கலந்திடுகையில், தம், நாம, உருவங்களை இழக்கின்றதோ, அது போல, தன்னறிவு பெற்றவன், பரமனை அடைகையில், தன் நாம, உருவங்களை இழக்கிறான்.”
முண்டக உபநிடதம் III. ii.8

இப்போது, இரண்டு பகுதிகளுக்கு முன்னால், கே.ஆர்.எஸ் எழுப்பிய வினாக்களை, திரும்பிப் பார்க்கலாமா?

1. இந்த நிலையில் அவர்கள் வினைகள் அனைத்தும் ஓய்ந்திருக்குமா? சஞ்சித/பிராரப்தங்கள் முடிந்து விட்டிருக்குமா?
ஜீவன் முக்தருக்கு, முழுமையாக எல்லா வினைகளும் முடிந்திருக்காவிட்டாலும், உபாதிகளால் குறைபாடுகள் இல்லை. அவற்றால், தான் இரண்டாகத் தெரிவதை நன்கறிந்திருப்பார்.

2. உலகியலின் இயற்கைத் தேவைகளை (உண்பது/உறங்குவது) கடந்து விட்டிருப்பார்களா?
ஜீவன் முக்தருக்கு, உண்பது, உறங்குவது போன்ற உபாதிகள் முழுமையாக முடிவடையாவிட்டாலும், அவற்றால், யாதொரு குறைபாடும் இல்லை.

3. ஜீவன் முக்தியில் இருப்பவர், விதேஹ முக்தி எப்படி எப்போது பெறுவார் என்பது எப்படி தீர்மானிக்கப்படும்? ஜீவன் முக்தரே தீர்மானித்துக் கொள்வரா?
எல்லா கர்ம வினைகளும் முடிந்த பின்னால், எல்லா உபதிகளையும் இழந்து, தானும், பரமனும் வேறல்ல என்பது தெளிந்து, அந்த பரமனை அடைவார்.