பா 59:
அதனிடத் துள்ள தகிலமுஞ் செய்கை
யதையடுத் துள்ளதே யாகு – மதனாற்
பரவிடு மெல்லாம் பரம்பொருள் பாலில்
விரவிடு நெய்போல வே.

சீர்களைப் பிரித்தபின்:
அதனிடத்துள் உள்ளது அகிலம் உன் செய்கை
அதை அடுத்து உள்ளதே ஆகும் – அதனாற்
பரவிடும் எல்லாம் பரம்பொருள் பாலில்
விரவிடு(ம்) நெய் போலவே.

பொருள்:
பிரம்மம் – அதனுள், அகிலமும், அதளுள் அடங்கும் அனைத்துப் பொருள்களும் அடங்கும்.
அகிலத்தில் நிகழும் அனைத்து செயல்களும், அதனைத் தொடர்ந்தே நிகழ்கின்றன.
மூலமான பரம்பொருளில் இருந்துதான் மற்ற எல்லாமும் பரவுகின்றன.
பாலில் நெய் போல் பரம்பொருளும் எல்லாப் பொருளிலும், எல்லா உயிரிலும், எல்லா செயலிலும் விரவி இருக்கிறது.

விளக்கம்:
எல்லாப் பொருளிலும் பிரம்மம் எனும் பரம்பொருளே நிறைந்து இருக்கிறது.
எல்லாப் பொருளிலும் இருக்கும் நித்யமான, சாசுவதமான ஒரே பொருள் பிரம்மம் மட்டுமே.
எல்லா செயலிலும் – கேட்டல், பார்த்தல், நுகர்தல், தொடுதல், சுவைத்தல் – என எல்லா செயல்களும் நிகழ மூலக் காரணமாய், பரம்பொருளே அவர்களில் சைத்தன்யமாக திகழ்கிறான்.
பாலைக் கடைந்து அதிலிருந்து கிடைக்கும் நெய் போல, எல்லாப் பொருட்களின் பெயர் மற்றும் உருவ வேறுபாடுகளைக் கடைந்தெடுத்தால், கிடைத்திடும் பொருள் தான் பரம்பொருள்!

இப்படியாக, பரம்பொருளின் பேரின்பம் “இவை” எல்லாவற்றாலும் மறைக்கப்படுள்ளது, அவையாவன:

பா 60:
பருமையு னுண்மையுற் பத்தி வினாசங்
குருகலு நீட்சியுங் கூடத் – துருவங்
குணங்குல நாமமுங் கொள்ளாம லுள்ள
துணர்க பிரம்மமென் றுற்று.

சீர்களைப் பிரித்த பின்:
பருமையு(ம்) நுண்மை உற்பத்தி, வினாசம்,
குருகல், நீட்சியும் கூடத்து – உருவம்,
குணம், குலம், நாமமும் கொள்ளாமல் உள்ளது
உணர்க பிரம்மம் என்று உற்று.

பொருள்:
அளக்கக்கூடிய பொருளின் பருமனும்,
அளக்கவும் அரிதான பொருளின் நுண்மையும்,
உற்பத்தி ஆகுபவையும்,
அவற்றில் அவ்வப்போது அழிந்து போகுபவையும்,
சிறுத்துப் போதலும், பெரிதாகலும் –
இப்படியாக எல்லா வகையான உயிரும் பொருளுமாக இருந்தாலும், அவற்றில்,
உருவம், குணம், குலம், பெயர் போன்ற வேறுபாடுகளைக் கொள்ளாமல்,
ஒன்றென, இருப்பதுவே பிரம்மம் என உணர்ந்து கொள், உற்று நோக்கி.

விளக்கம்:
இவ்வாறாக, வெவ்வேறெனத் தெரிவதில் எல்லாம் மறைந்து இருப்பது பரம்பொருள். மறையோதி மனம் திறந்திட, மறைபொருள் புலப்பட, அறியாமை எனும் இருள் அகன்றிட, இவ்வேறுபாடுகள் களைந்திட, உன்னுள்ளே எழும் சுய வினவலின் விளைவாக, இவ்வேறுபாடுகள் அற்றதே பரம்பொருள் என உணர்வாய்.

பா 61:
எதனொளியி னாலொளிரு மேயிரவி யாதி
யேதனை யவையொளிர்க்க வெலா – தெதனாலே
யிந்தவுல கெலா மிலகு மதுதானே
யந்தப் பிரம மறி.

சீர்களைப் பிரித்தபின்:
எதன் ஒளியினால் ஒளிருமே இரவியாதியே
அதனை அவை ஒளிர்க்க இலா – எதனாலே
இந்த உலகெலாம் இலகும் அதுதானே
அந்தப் பிரமம் அறி.

(இலகும் – விளங்கிடும்)

பொருள்:
சூரியன் முதலான விண்மீன்களும், பரம்பொருளால் ஒளிர்கின்றன. ஆனால், அவை தமக்கே ஒளியினைத் தந்திட இயலா. எந்த ஒரு பொருளால், இவ்வுலகமெல்லாம், விளங்கித் திகழ்கிறதோ, அப்பொருள்தான் பிரம்மம் என அறிந்திடுவாய்.

விளக்கம்:
வானத்தில், தானாக ஒளிர்விடும் பொருட்கள் உண்டு. அவற்றின் ஒளியினைப் பிரதிபலிக்கும் பொருட்களும் உண்டு.
இவற்றில், எதுவாகிலும் சரி, அவற்றின் ஒளியின் மூலத்தின் மூலம், பரம்பொருளேயாம்.
தமது ஒளியாலேயே தம்மைத் தாமே, ஒளிர்க்க (தத்தம் அறியாமை அகன்றிடச் செய்திட) இயலாத பொருட்கள் இவை. அவற்றின் அறியாமை அகன்று, ஒளியுடன் திகழ, பரம்பொருளின் ஒளி தேவைப்படுகிறது.
அந்த பரம்பொருளின் ஒளியால் தானே, இந்த உலகமும், அண்ட சராசரங்களும், விளங்கித் திகழ்கிறது!

இருட்டில் ஒரு பொருள் இருக்கிறது. என்ன பொருள் என கண்டுகொள்ள இயலவில்லை. அதன்மீது ஒரு கைவிளக்கின் வெளிச்சத்தை செலுத்திப் பார்க்கிறோம், எந்த பொருள் எனத் தெரிய.
தபால்காரன் கொண்டுவந்து தந்த பெட்டிக்குள் இருக்கும் பொருள் என்னவென்று தெரியவில்லை, அதைப் பிரித்துப் பார்க்கும் வரை. பிரித்தபின் அதுவென்ன என விளங்குகிறது.
ஏற்கனவே தெரிந்த பொருளாக இருந்தாலும், தெரியாமல் இருந்தது, இப்போது தெரிந்ததாகிறது.
இப்படியாக, தெரியாமல் இருந்த ஒவ்வொன்றும் தெரியத் துவங்குகிறது, அதைப் பற்றிய அறியாமை அகன்றதும்.
ஆக, அறியாமை அகல, தெரியாப் பொருளைப் பற்றிய அறிவு சேர்கிறது, கொஞ்சம் கொஞ்சமாக.
இதற்கு எங்கே முடிவு?
எப்போது, இன்னும் மேலுமாக, அறிவதற்கு மேலும் ஏதுமில்லை என்ற நிலை எப்போது ஏற்படும்?
அந்த பரம்பொருள் இன்னவென்று அறிந்த பேரறிவினை எட்டிய நிலையில் மட்டுமே.
அதனால், அவ்வறிவிற்குப் ‘பேரறிவு’ எனப்பெயர். இவ்வறிவிற்கு மேல், அறியவேண்டியது ஏதுமில்லா முக்தி நிலை.

பாரதியும் சொல்லுவான்,
பல்லாயிரம் வேதங்கள் அறிவொன்றே தெய்வம் உண்டாமெனல் கேளீரோ!