பா 66:

சிரவண மாதிகளாட் றேசுறு ஞான
வெரியினிற் காய்ச்சி யெடுக்கச் – சருவ
மலமும்போய்ச் சீவன் மறுவில்பொன் போனிர்
மலனாகித் தன்னொளிர் வான்.

பதம் பிரித்து:
சிரவணமாதிகளாலே சுறு ஞான
எரியினிற் காய்ச்சி எடுக்கச் – சருவ
மலமும் போய்ச் சீவன் மறுவில் பொன் போல்
நிர்மலன் ஆகித் தன்னொளிர்வான்.

பொருள்:
சிரவணம் முதலான சாதகங்களில் ஆன்ம முதிர்விற்கு உந்தப்படும் சாதகன்,
ஞானமெனும் நெருப்பில் நன்கு காய்ச்சி எடுக்கப்படுவது போலவாம்.
பொன்னை நெருப்பில் காய்ச்சி,
அதில் இருக்கும் பொன் அல்லாத, மற்ற உலோகங்களை அதனில் இருந்து அகற்றி,
தூய்மையான தங்கத்தை எடுப்பது போல,
சிரவணம் முதலான, கேட்டல், பாடுதல் போன்றவற்றில் ஈடுபட்டு,
தன்னில் இருக்கும் அழுக்கான மலங்களை அகற்றி,
தூய்மையான சச்சிதானந்தாமாய் ஒளிர்வான்.

விளக்கம்:
ஞானமெனும் நெருப்பு : நெருப்பு எப்படி, தூய்மையாய், மாசற்று இருக்கிறதோ அதுபோல, தூய்மையான மெய்ஞானமும், அழுக்கற்று இருக்கும். நெருப்பில் காய்ச்சி, அழுக்கு அகற்றிட, தூய்மையாகும் பொன்போல,
ஜீவனில் அழுக்கு அகற்றி, அதன் தூய்மையான முழுமுதல் நிலைக்கு திரும்பிட ஆவன செய்ய வேண்டும்.
எவ்வாறு?: சிரவணம் (மறைகள் சொல்லும் உன்னத நெறிதனைக் கேட்டறிதல்) முதலான (சிரவணம், கீர்த்தனம், ஸ்மரணம், பாத சேவனம், அர்ச்சனம், வந்தனம், தாஸ்யம், ஸக்யம், ஆத்ம நிவேதனம்)
வழி நெறிகளில் தன்னைத் தான் ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும்.
அவ்வழிநெறிகளில் நன்கு பக்குவப்பட்ட மனதில், அழுக்குகள் அகல, அதுவே அவன் தன்னைத் தானறிந்து ஒளிர்ந்திட ஏதுவாகிறது.

பா 67:
இதயவெளி தோன்றி யிருளையழி ஞான
உதயரவி யான்மா வொளிரு – நிதமுமே
யெல்லாவட் றும்பரவி யெல்லாமுன் தாங்கினிந்
றெல்லா மொளிர்விக்கு மெண்.

பதம் பிரித்து:
இதயவெளி தோன்றி இருளை அழி ஞான
உதய ரவி ஒளிரு(ம்) நிதமுமே
எல்லாவற்றும் பரவி, எல்லாமுன் தாங்கி நின்று
எல்லாம் ஒளிர்விக்கும் எண்.

பொருள்:
இதயவெளியில் இருந்து தோன்றிய, ஞானமானது, அறியாமை என்னும் இருளை அழித்திட, அது அன்றாடம் கிழக்கில் உதிக்கும் சூரியன் இருளை அழித்து, ஒளிர்வது போலவாம். அம்மெய்ஞானம், எல்லாப் பொருளிலும் பரவி, எல்லாப் பொருளையும் நிலைப்பெறச் செய்து, எல்லாப்பொருளிலும் நிறைந்து, அவை எல்லாவற்றையும் ஒளிர்ந்திடச் செய்திடுவது, என்று எண்ணுக.