தாபரத்து உள்நின்று அருள வல்லான் சிவன்
மாபரத்து உண்மை வழிபடுவாரில்லை
மாபரத்து உண்மை வழிபடு வாளர்க்கும்
பூவகத்து உள்நின்ற பொற்கொடி யாகுமே.
– திருமந்திரம் 1717


தானென அறிந்தோ இலையோ எனினும்
தன்னொளிர்ந்திடுமே தானேத் தானேயென்று
யாரறிவார் இதனை? யாருரை செய்வார்?
பாரிருள் போக்கிடப் பல்லாண்டு பாடிடுமே.

தனக்குள் நின்றாட எண்ணம் இல்லை
தடுமாறிடும் மனதிலும் நிலையே இல்லை
அலையாய் கரையும் மனது அகத்தில்
நிலையாய் நிலைப்பது எங்கே?

தானெனத்தான் அமர்ந்து, தன்னொளியைக் கூர்ந்திடத்
தாமரை இதயம் ஒளிர்ந்திடக் காணாயோ?
தானெனத்தான் அறிந்தது, தடாகமதில் மலர்ந்த
தாமரையும், எல்லாமுமே சிவமேயென அறியாயோ?

இன்பமும் மகிழ்வும் இனிமையும் ஆனந்தமும்
கொண்டபோதெல்லாம் ஒளிர்வதும் அதுதான் !
துன்பமும் அழுக்கும் சோர்வும் துயரமும்
கொண்டபோதெல்லாம் தோன்றாததும் அதுதான் !
என்ன வேண்டும் எனவறிந்த மனமே,
என்ன வேண்டும் இவ்விரண்டில்?
இன்பம் வேண்ட, வேண்டாயோ ஒளியைப்பே
ரின்பம் வேண்ட, நாடாயோ சிவமதை.

பூவகத்துள் நின்ற அன்னையவள் அன்பானவள்;
அவள்பெயர் பொற்கொடியாம், பொன்னென மிளிரும்
சிவஞானமதை ஈன்றிடும் அருட்கொடையாள்! – தானதைச்
சிவமனெத் தெளிந்திடச் செய்வாளே.

துன்பம் நேர்கையில் மின்னும் நவரத்தினமாய்
அன்னையவள் இதயக்கமலத்தின் மின்னுவதை நினைந்திட
எண்ணமதில் ஏறாது துயர், வாடாது பயிர்!
திண்ணமெனக் கொள்வாய் மனமே.

மூளை எலும்புகள் நாடிநரம்பெலாம் புகுந்து
மூச்சில் இடைபிங்கலை சுழிமுனையெல்லாம் நிறைந்திட
எப்போதும் இதயக்கமலம் ஒளிர்வதை உணர்வாய்;
எப்போதும் அதனைக்கவனித்து இருப்பாய்.