இந்த உலகத்தையும் அதில் சஞ்சரிக்கும் வாழ்க்கைகளையும் தலைகீழாய் இருக்கும் ஒரு அரசமரத்துக்கு ஒப்பாக சொல்கிறது கீதையின் பதினைந்தாவது அத்தியாயம், கொஞ்சம் படித்துப் பார்க்கலாமா?

எல்லாவற்றுக்கும் மேலான பரமனை சரண் புகுந்து யோகத்தில் இறங்குவது ‘புருஷோத்தம யோகம்’. யோகமே செயல் யாவுக்கும் திறனாய் அமைவது. விசாலமான பார்வையினைத் தருவது. எங்கும் இருக்கும் கடவுளை எங்கும் காணும் திறனைத் தருவது.

——————————————————————————————————————————————–
1. பிரக்ருதியும், ஆன்மாவும் சேர்ந்து வானளாவிய ‘அச்வதம்’ எனும் அரசமரமாய் இப்பிரபஞ்சமெங்கும் பரவியிருக்கிறது. பிறவி, செயல், பலன், இறப்பு, மீண்டும் பிறவி, செயல் என எல்லாமும் இம்மரத்தில் அடங்கும். இம்மரத்தின் ஆணிவேரோ மேலிருந்து கீழேயாக, நிர்குண பிரமத்திடம் இருந்து வருகிறது. மேலே இருந்து வரும் வேர்களுக்குச் சமமானதாக, நிர்குணமாய் இருக்கும் பரமன், சர்குண நிலை பெற்று, ஆக்கம், நீக்கம் முதலியவற்றை செயல்படுத்துகிறான்.

இந்த மரத்தின் இலைகள் நன்நெறிகளைக் காட்டும் மறைகளுக்கு ஒப்பாகும். நன்நெறிகளால் விளையும் நற்பயன்கள் இலைகளில் இருந்து வரும் பழங்களுக்கு ஒப்பாகும். இந்த மரத்தின் சாராம்சத்தை எவன் உணர்கிறானோ, அவன் உண்மையை உணர்ந்தவன் ஆகிறான். மெய்ஞானத்தினை ஆணி வேருக்கு ஒப்பாகவும், அதிலிருந்து ஏற்படும் கிளை வேர்களை அஞ்ஞானத்திற்கும் ஒப்பாகவும் கொள்ளலாம். அஞ்ஞானத்தினால் மேலும் மேலும் கிளை வேர்கள் ஏற்பட்டு, ஆணி வேரிலிந்து பிரிந்து, மேலும் பலமாக இந்த மரம் பரந்து விடுகிறது.

பி.கு: தலைகீழாய் இருக்கும் இந்த மரத்தை மனிதனின் உடலுக்கு ஒப்பாகவும், மரத்தின் வேர்கள் மூளையின் அமைப்புக்கு ஒப்பாகவும் கூடச் சிலர் சொல்லுவார்கள்.

2. கிளைகள் மூலமாக குணங்கள் இலைகளைச் சென்றடையும். தான் சேர்த்து வைத்த குணங்கள் மூலமாக இலைகள் செழித்து வளர, அதனால் அந்த மரம் வளர்ந்து பெரிதாகிறது. சில கிளைகள் மேலேயும், சில கிளைகள் கீழே செல்லுவதுமாய் இருக்கின்றன. செயல்களில் தர்மச் செயல்கள், அதர்மச் செயல்கள் என இருப்பது போல. நற்செயலா, தீஞ்செயலா, என்பது ‘ரஜஸ், தமஸ், சாத்வீகம்’, எனும் முக்குணங்களின் கலவையால் தீர்மானிக்கப் படுகிறது.

மனித வாழ்க்கையில் தேடுதல் கிளைகளைக்கு ஒப்பு. இலைகளால் செழிக்கும் மரம் போல, வேதங்களால் உலகமும் செழிக்கிறது. மேலே இருந்து வரும் சத்தினை கீழ் நோக்கி செலுத்தி நிலத்தில் வேரூன்றும். இது மேலும் மேலும் வளர, கர்ம வினைகளால் இவ்வுலகத் தொடர்புகள் நீட்டித்து, உலக வாழ்க்கை என்னும் மரமும் செழித்து வளருகின்றது. புதுப்புது வினைகளையும் தோற்றுவிக்கின்றன.

பரவிச் செல்லும் கிளைகள் போல, வாழ்வின் பல்வேறு தேடுதல்களில் விளையும் ஆசையினால், செயல்களைப் புரிந்து, அவற்றால் பலனையும், மீண்டும் மீண்டும் செயல்களில் ஈடுபடவும் செய்கிறோம். கண் போன போக்கில் கால் போக நடக்க, மறைகள் சொல்லும் பாதையை மறந்து போனவர் வழி தடுமாறிட, கீழே போகும் கிளைகளாய், அவர்தம் அடுத்தடுத்த பிறவிகள், இன்னும் கீழான பிறப்புகளுக்கே இட்டுச் செல்கின்றது.

3. நம்மால் இந்த மரத்தின் ஆணிவேரின் ஆதியையோ, முடிவையோ காண இயலாது. பரமேஸ்வரனின் அடி, முடியினை அரியும் அயனும் தேடிக் காண இயலாதது போல, ஆணி வேரின் மூலத்தினையும், முடிவினையும் கண்டு கொள்ள இயலாது.

மேலும் மேலும், விழுதுகளால் நிலைபெற்று நிலத்தில் ஊன்றி விடுகிறது இம்மரம். குணங்களின் விளைவுகளுக்கு அடிமையாகி, மாந்தர் தம் வினைகள் பெருகிப் பெருகி, பிறவிப் பெருஞ்சுழலில் சிக்கித் தவிக்க, இதிலிருந்து அவர்கள் தப்புவதற்கான ஒரே வழி பற்றின்மையை பற்றிக்கொள்வதே. விளைவுகளில் விழுந்து விடாமல் நிஷ்காம்யமாக இருப்பதே, இம்மரத்தினை வெட்டி வீழ்த்துவதற்கான வாள் போன்றதாகும். சூரபதுமன் மாமரமாய் நின்றதும், ஞான வேலால் அவன் வெட்டுண்டு வீழ்ந்ததையும் ஒத்து நோக்குக.

கடற்கரையில் அலைகளைப் பார்க்கிறோம். நுரையோடு மேலெழும்பிக் கீழே விழும் நீரைத்தான் அலை என்கிறோம், ‘நீர்’ என்று சொல்லாமல். அந்த அலையின் உருவதை அகற்றி விட்டுப் பார்த்தால், தெரிவது நீர்தானே? அதுபோல, இந்த மரத்தின் உருவத்தையும், பெயரையும் நீக்கி விட்டுப் பார்த்தால், இருப்பது, பரமன் மட்டுமே. இந்த மரம் நம்மை உலக வாழ்க்கை என்னும் வட்டத்திற்குள்ளும், பிறவிச் சுழலுக்குள்ளும் அடைத்து வைக்கிறது. ஆன்ம விசாரம் செய்து பார்த்தால், இந்த மரம் என்று ஒன்று உண்மையில் இல்லாமல் இருப்பது புலனாகும். அதுவரை அந்த மரம் தெரிந்து கொண்டே இருக்கும். ஆகவேதான், “பிறவிச்சுழல், என்னும் இந்த மரத்தை, பற்றின்மை என்னும் கோடாலியால் வெட்டி வீழ்த்து” என்கிறான் பகவான் கண்ணன்.

4. இம்மரத்தை வெட்டி வீழ்த்தியபின், அந்த மரம் செழித்து வளர்ந்ததற்கு காரணமான பரமனையே சரண் புகுந்திட, அதுவே மோட்சமெனும் வீடுபேறு ஆகும். பரமனின் சத்தே வேர்களை மேலிருந்து கீழாக விழுதுகளை நிலத்தில் ஊன்றச் செய்தது. இது இயற்கையான நிகழ்வுதான். செயல்களைச் செய்ய வைத்ததும் அவன் நடத்தும் நாடகத்தில்தான். நிலத்தில் ஊன்றச் செய்ய வைத்த சத்தின் மூலமான பரமனை திரும்பிப் பார்ப்பதுவே யோகமாம் – புருஷோத்தம யோகமாகும்.

அலை என்ற எண்ணம் இருக்கும் வரை நீருக்கு தன்னுடைய தனிப்பட்ட உருவம் இருக்க, அதற்கு, ‘தான், தனது’ என்கிற எண்ணத்தை ஏற்படுத்தும். அது நீர்தான் – அதை சுற்றி சின்னதும், பெரியதுமாய் இருக்கிற பலப்பல அலைகளும், எல்லாமும், இந்தக் கடல் முழுதும் வியாபித்து இருக்கும் நீரெல்லாம் – ஒன்றேயான ஒட்டுமொத்த கடல்நீர் தான் என்பது உணர – அதற்கு அகந்தையற்ற நிலையில் – அது பரமன் எனும் பேரின்பக் களிப்பினைப் பருகுவதற்கான நிலைக்குத் தயாராகின்றது.

5. உயர்வான இந்நிலையினை அடைவதற்கான தகுதி என்ன? பகவான் கண்ணன் சொல்கிறான்: தானெனும் அகந்தை, தானெனும் மயக்கம், தானெனும் பற்று ஆகிவற்றை நீக்கி நிற்பதேயாம். அக்குணங்களைப் பெற்றவன், ஆத்ம ஞானத்தில் நிற்க, இன்ப துன்பங்கள் தரும் விருப்பு வெறுப்புகளைக் கடந்து நிற்க, அப்பேறு பெற்றவன் பரமபதம் என்னும் முடிவில்லா நிலையினை அடைகிறான்.

6. உயர்வான இந்நிலை எப்படி இருக்கும்? பரமபதம் என்னும் நிலைக்குச் சென்றவர், அவ்வின்ப நிலையில் இருந்து திரும்பிவரா நிலையாம் அது. (கண்டவர் விண்டிலர்). அவ்விடத்தை சூரியனோ, சந்திரனோ, நெருப்போ ஒளிர்ந்திட இயலா. ஏனெனில், அவ்விடம், எவ்வொளிரும் பொருளுக்கும் மூலமாகவும், எல்லா ஒளி தரும் பொருளைக்காட்டிலும் பற்பல மடங்குகள் ஒளிர்வதான பரஞ்சோதியாம். எத்தனையோ மில்லியன் மைல்கள் கடந்து வர இயன்ற சூரியஒளியானாலும், புறக்கண்களை மறைக்கும் அளவிற்கு அது எவ்வளவு பிரகாசமாக இருந்தாலும், அதனால் அகத்தினை ஒளிர்விக்க இயலுமா என்ன? அதை பரமனின் அருள் ஒளியால் மட்டுமே இயலும்.

7. மனிதனின் ஜீவனும், எங்கெங்கும் பரவியிருக்கும் பரமாத்மாவும் உண்மையில் ஒன்றே. குடத்தின் உள்ளேயுள்ள காற்றும், குடத்தின் வெளியே இருக்கும் காற்றும் ஒன்றே என்பது போலவே. அது பின்னமில்லாமல், ஒன்றேயென எப்போதும் எங்கெங்கும் ஒளிர் விடுகிறது. இன்னும் சிலர், இப்படியும் சொல்வார்கள்: பல்வேறு பூக்களின் பல்வேறு மகரந்தங்களில் ஈர்க்கப்பட்ட தேன் துளிகள், அதன் தனித்துவமெல்லாம் இழந்து ‘தேன்’ எனும் ஒற்றை அடையாளத்தைப் பெற்றது போல, பல்வேறு ஜீவன்களும் பரமன் எனும் ஒற்றை ஒளிக்கற்றையில் இணையுங்கால், தாம் தரித்துவந்த உருவம், பெயர் முதலான அனைத்தையும் இழந்து, ஒன்றாய் ஒளிருகின்றது.

பரமனின் ஒரு பகுதியான ஜீவன், உண்மையில் எல்லைகளால் குறிக்கிட இயலாதது. ஆனால் இவ்வுண்மையினை அறியாதவர் கண்களிலோ, தன்னைச் சுற்றியுள்ள உடலெனும் சுவரைத் தாண்ட இயலாமற் போகிறது. ஐம்புலன்களின் வழியாய் உணரப்படும் எந்த உணர்வும் அந்த அங்கங்களின் சக்தியாலோ அல்லது அந்தக்கரணங்களின் சக்தியோ இல்லை. பிரகிருதிக்கு உட்பட்டு, இவ்வங்கங்களின் வெளிப்பாடுகளெல்லாம், பரமனின் ஒளியின் பிரதிபலிப்பேயாம். பரமனின் சைத்தன்யம் ஏப்போதும் இந்த ஐம்புலன்களையும், மனதையும் ஈர்த்துக் கொண்டே இருக்கிறது.

8. அதே பரமன், இந்த ஐம்புலன்களையும், மனதையும் முடிவில் தன் பால் முழுதுமாய் ஈர்த்துக் கொள்கிறான். அது எப்போது? உடலை விட்டு உயிர் பிரியும்போது, ஐம்புலன்களையும், மனதையும் – இது வரை மனத்தில் சேர்த்து வைத்த வாசனைகளையும் கவர்ந்து கொண்டு செல்லும் – வீச்சிய காற்றில், பூத்திருக்கும் பூவின் மணம் காற்றோடு கலந்து பரவுவதுபோலவாம்!

இறப்பில், தூல உடலை விட்டு அருஉடல்(சூட்சும உடல்) பிரிகிறது. ஐம்புலன்களும், மனமும் அருஉடலில் அடங்கும். ஆகவேதான், தூல உடலில் புலன்களுக்கான அறிகுறிகள் ஏதும் அதற்கப்புறம் இருப்பதில்லை. பணிமாற்ற உத்தரவு வந்தவுடன், ஒரு அலுவலர் எப்படி, தனது பொருட்களையும், குடும்பத்தையும் மூட்டை கட்டிக்கொண்டு, வேறு ஊருக்கு போகிறாரோ, அது போல, அருஉடல் தனது உடமைகளான, ஐம்புலன்களும், மனதையும், மனம் சுமக்கும் வாசனைகளையும் மூட்டை கட்டிக்கொண்டு, தான் இதுகாறும் இருந்த தூல உடலெனும் வீட்டை காலி செய்துவிட்டு கிளம்புகிறது. பின்னர், தனக்கான இன்னொரு உடலை அடைந்தபின், தான் கட்டிக் கொண்டுவந்த மூட்டையை இறக்கி வைத்து, புற உலகை துய்க்கத் துவங்கி விடுகிறது. முற்பிறப்பிலிருந்து கொண்டு வந்த வாசனைகள் மூலமாக, கர்ம வினைகள் என்னும் வங்கிக் கணக்கு தொடரப்படுகின்றது.

9. பரம்பொருளே, தன்னொரு பகுதியினை மாயையில் ஆழ்த்தி, இப்படியொரு உலக வாழ்க்கையினைப் படைக்கிறான். ஆன்மாவிற்கு சுகங்களை அனுபவிக்கும் இயல்பு இல்லை. ஆனால், குண மயக்கங்களினால், அது ஐம்பொறிகள் மூலமாக பரமன் துய்க்கும் சுகங்களை, ஜீவனோ தான் அனுபவிப்பதாக கருதுகின்றது. இந்த மயக்கம் நீடிக்கும் வரை, இந்நிலை மாறுவதில்லை.

பரம்பொருளின் சைத்தன்ய ஒளி மனதின் புத்தியில் பிரதிபலிக்கும்போது, அதனால், ஐம்புலன்களும் ஒளிர்விக்கப் படுகின்றன. இதனால் தாம், நாம் ஆழ்ந்த கவனத்தில் இருக்கும்போது, இன்னொருவர் அருகே வந்து பேசினாலும், அவர்பால், உடனடியாக கவனத்தை திருப்ப இயலுவதில்லை. ஏனெனில், நமது கவனம் – அல்லது ஆழ்மனம் வேறிடத்தை நாடியிருக்கிறது. ஆழ்மனத்தின் மூலமாக, ஐம்புலன்களின் துணையோடு, ஜீவன் ஐம்புலன்கள் வழியாக நுகரப்படும் உணரப்படும் உணர்வுகளைத் தான் துய்ப்பதாகக் கொள்கிறது.

பரம்பொருள் நம்மில் இருந்து கொண்டே, நம்மை இயக்கிக்கொண்டே, ஐம்பொறிகள் வழியாக சுகத்தை துய்த்துக் கொண்டிருக்கையில், அப்பரமனை நாம் அன்றாட செயல்களில் ஏன் அறியாமலே இருக்கிறோம்?

10. ஏனெனில், அகத்தின் ஞானக் கண்ணால் மட்டுமே காணக்கூடயது அஃதாம். குண அனுபவங்களுக்கு ஆன்மா சாட்சியாய் மட்டுமே நிற்கிறது என்பதை அனுபவத்தில் ஞானியர் அறிவர். அவர்களது அறிவே வற்றாத பேரறிவாம். மெய்ஞானமாம். இவ் உண்மையினை அறியாமல், பொறிகள் மூலமாக துய்க்கும் சுகங்கள் யாவையும் தான் அனுபவிப்பதாக ஜீவனும் நினைப்பதால், அன்றாடம் எல்லாச் செயல்களிலும் பரமனை, அறியாமலே காலம் கழிக்கிறோம். விளைவு? மீண்டும் மீண்டும் பிறவி எனும் மீளாச்சுழலில் சிக்கித் தவிக்கிறோம்.

இலக்கியத்தை எல்லோராலும் படித்திட இயலும். ஆனால் அதன் சுவையை சுவைத்திட, இலக்கிய ரசனை வேண்டும். எல்லோராலும் நவரத்தின நகைகளை அணிந்து கொள்ள இயலும். அதன் சரியான மதிப்பை, நகைக்கடைக்காரரால் தான் துல்லியமாக மதிப்பிட இயலும். எல்லோராலும் இசையினை கேட்க முடியும். ஆனால் இசை ரசனை இருந்தால் தான், அதை ரசித்து அனுபவிக்க முடியும். அதுபோல, உயர் ஞானம் அமையப் பெற்றால் மட்டுமே, தன்னில் உறையும் பரமனே தன்னைத் துய்க்கிறான் என்பதை அறிந்து, தான் என்னும் அகந்தை அழிந்து, எல்லையில்லா பேரின்பத்தை துய்க்க முடியும்.

எப்போது ஒருவனால் ஞானியாக முடியும்? அகக்கண்ணால் எப்போது பரமனை உணர முடியும்?

11. மனமயக்கம் அகன்றிட, யோக பாதையில் நடந்திட, அது மனதைத் தூய்மை பெறச் செய்திடும். மனத்தூய்மை அடையாதவர்களாலோ, என்ன முயன்றாலும் அவர்களால் இலக்கினை அடைய முடிவதில்லை. எது இலக்கு? 1) அது இன்னொரு பொருளால் ஒளிர்விக்க இயலாதது 2) அது, உயரிய நிலையை அடைந்தபின், அதிலிருந்து திரும்பிட இயலாதது 3) அதனில், ஆன்மாக்கள் எல்லாம் சிறு சிறு பகுதிகளாய் இருப்பது.

மனமது தூய்மை அடைதல் என்றால் என்ன? மனமதில் எதை நீக்க வேண்டும் தூய்மை அடைய? மனமதில், ஐம்புலங்களை துய்ப்பது நான் என்று ஏற்படும் எண்ணத்தைத் தான். பக்தி யோகம் மற்றும் கர்ம யோகம் ஆகிய சாதனங்கள் கொண்டு, எண்ணச் சீரமைப்பு மேற்கொள்வதே யோக நெறியாம்.

அடுத்த நான்கு சுலோகங்கள், பரமன் எப்படி எல்லாவற்றிலும் ஊடுருவியிருக்கிறான் என்பதனை எடுத்துச் சொல்கின்றன:

12. ஒளிரும் எல்லாப்பொருளும் ஒளிருவது பரமனின் ஒளியினைத்தான். ஐம்புலன் காட்டும் காட்சியானது, அக ஒளியால் புலப்படும்பொழுது தெளிவான மயக்கமற்ற காட்சி கிட்டும்.

சக்தியின் தோற்ற வெளிப்பாடுகள் வெவ்வேறாக இருக்கலாம். மின்சார சக்தியின் வெளிப்பாடு, மின்சார பல்பில் வெளிச்சமாகவும், மின்சார விசிறியில் அதன் சுழற்சியாகவும், மின்சார உலையில் வெப்பமாகவும் வெளிப்படுவது போல, அவற்றுக்கு தோற்ற வெளிப்பாடுகள் வெவ்வேறாக இருந்தாலும் அடிப்படை சக்தி ஒன்றுதான். அது போலவே, உலகில் ஒளிரும் எப்பொருளும், பரமனின் சைத்தன்ய ஒளியின் வெளிப்பாடுதான்.

மேலும்,

13. பரிதியின் ஒளியினை பிரதிபலிக்கும் நிலவின் ஒளியிலும் பயிர்கள் வளர்வதுபோல, அகத்தில் பிரதிபலிக்கும் பரமனின் ஒளிதான் இப்பிரபஞ்சத்தினை வளர்ப்பதாம்.

இயற்கை செழித்து வளர்வதும், பரிதியின் ஒளி மற்றும் வெப்பத்தினால் தாவரங்களும் செழிப்பது போலவும், நிலவொளியினைப் பெற்றும் தாவரங்கள் வளர்வதும் – இப்படியாக, சூரியன், சந்திரன், அக்னி – என சக்தியூட்டும் அனைத்திற்கும் மூல சக்தியாக இருப்பது எல்லையிலா சைத்தன்யமாகும்.

மேலும்,
14. உணவாகவும், உணவின் சுவையாகவும் அமைந்து உடல் வளர்ச்சிக்கும் மாறுதலுக்கும் காரணமாய் அமைகிறான் பரமன்.

உண்ணும் உணவினை செரிக்கச் செய்து, அவற்றின் சத்தினை உடல் வளர்சிக்குப் பயன் படுத்திக்கொண்டு, இதரவற்றினைக் கழிக்கும் ஜீரண உறுப்புகளின் சக்தியாகவும் பரமன் இருக்கிறான்.

“அர்ஜூனா, நானே சூரியன், சந்திரன், பூமியின் இயற்கை வளங்கள்” என்றவன் தொடர்ந்து “நானே உனக்கு உணவாகும் செடிகொடிகள். நான் அவற்றை உண்பவன். நானே உன் வயிற்றின் ஜீரண சக்தியாவும் இருக்கிறேன்” என்று சொல்வதன் மூலம் – அவன் மறைமுகமாக கேட்கும் கேள்வியாக – “இதில் ஜீவனான நீ எங்கே?” என்பதும் புலனாகிறது.

மேலும், பகவான் கண்ணன் சொல்கிறான்:

15. “நானே அனைவரது இதயத்திலும் அமர்ந்திருக்கிறேன். எல்லா வேதங்களும் பரமன் என விளக்குவதும், அவற்றைக் கற்றால் அறியப்படுவதும் நான் தான். வேதாந்தத்தின் ஆசிரியனும் நான் தான்.”

இதயக்கமலத்தில் அமர்ந்தவாறு, ஆத்ம ஒளியினைப் பார்த்து, அதனொடு ஐக்கியப் படுத்திக் கொள்ளுதல் மூலம், காண்பவன், கண்ட காட்சி எனும் இரு நிலை மாறி, ‘காணும் மெய்யறிவு’ என்ற ஒன்று மட்டுமே மிஞ்சும்.

மெய்யியலில் ‘இதயம்’ எனக்குறிப்பிடப்படுவது மனத்தைத்தான். நற்பண்புகளால் செழித்து – அமைதியாகவும், விழிப்புடன் இருக்கும் மனத்தை.

இறைவன் எல்லா இடத்திலும் இருக்கும் போது, இதயத்தில் மட்டும் அமர்வதாகச் சொல்வதேன்? மனம் எனும் அங்கேதான் அவன் தன்னைத்தான் காட்டிக்கொள்கிறான். அங்கேதான் நாம் அவனை தியானம் போன்ற பயிற்சிகளை மேற்கொண்டு கண்டு கொள்ள இயலுவதால்.

உயிரில்லாத பொருட்களிலும் அவன் இருக்கிறான்; – என்றால் ஏன் அவற்றில் அசைவில்லை, ஏன் அவை வளர்வதில்லை?
ஜீவனின் ஆன்மா பரமனின் சைத்தன்ய சொரூபமாக இருக்கிறது. சைத்தன்யத்தின் பார்வையில் இருந்து பார்த்தால், அனைத்துமே பிரகிருதி மட்டுமே. பிரகிருத்தியில் சில பொருட்களில் மட்டும், சைத்தன்யம் பிரதிபலிப்பதால், அவை உயிர் மற்றும் அறிவு இருப்பதாக (இதனை ‘சேதனம்’ என்பார்கள்) நாம் சொல்கிறோம். பிரதிபலிக்கக் கூடியதை சூட்சுமம் என்றும், பிரதிபலிக்க இயலாதவற்றை (ஸ்)தூலம் எனவும் சொல்லலாம். நமது சூட்சும உடலும் பிரதிபலிக்கக் கூடியதால், அதனை ‘சேதனம்’ எனலாம். நம் மனம், சைத்தன்யத்தால் ஒளிர் விடக்கூடைய தன்மை உடையது. அவ்வொளியைப் பெற்று மனம், ஐம்பொறிகளைப் பிரகாசப் படுத்துகிறது. உயிரற்ற பொருட்களில் சூட்சும உடல் இல்லாததால், அவற்றால் சைத்தன்யத்தை பிரதிபலிக்க இயலுவதில்லை.

இவ்வாறாக, பரமன் எப்படி எல்லாவற்றிலும் ஊடுறுவி வியாபித்து இருக்கிறான் என்பதை மேற்கண்ட சுலோகங்களில் பார்த்தோம். தொடர்ந்து பகவான் சொல்கிறான்:

16. இவ்வுலகத்தில் இரண்டு வகை புருஷர்கள் இருகிறார்கள். ஒரு வகை – அட்சர புருஷன் – மாறுதலுக்கு உட்படாதவர்கள். இன்னொரு வகை – சர புருஷன் – மாறிக்கொண்டே இருப்பவர்கள்.

“புல்லாகிப் பூடாய் புழுவாய் மரமாகிப் பல்விருகமாகிப் பறவையாய் பாம்பாகி கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்..” என மணிவாசகர் குறிப்பிடுவது எந்த நிலையில்லா மாறுதலுக்கு உட்பட்டர்களை.
இன்னொரு வகை – ஜீவன் முக்தர்கள் – பிறவிச் சுழல் இவர்களுக்கு இல்லை. இவர்கள் கொல்லன் பட்டரையில் பயன்படுத்தும் “பட்டை தீட்டும் கல்” போன்றவர்கள். எத்தனை அடி விழுந்தாலும், அசையாமல் இருந்தவாறு, தன்மீது வைத்து அடிக்கப்படும் எல்லாப் பொருட்களுக்கும் இடம் கொடுத்து – அவற்றை ‘பதம்’ செய்ய உதவுவார்கள்.

இந்த இரண்டு வகை புருஷர்களைக் காட்டிலும் மேலானவன் பரமன். இவ்விரு புருஷர்களுக்கும் அப்பால், மேலான நிர்குண நிலையில் நிற்பவன். ஆகையால் அவன் புருஷோத்தமன், என்பதை அடுத்த இரண்டு சுலோகங்களும் சொல்லுகின்றன:

17. பரமனே, எல்லா வடிவமும் கொண்டு உலகைப் பலவிதமாய் படைத்தும், காத்தும் வருகின்ற யோகத்தைச் செய்யும் யோகேஸ்வரன். சர புருஷன், அட்சர புருஷன் ஆகியவர்களைக் காட்டிலும் மேலான புருஷோத்தமன்.

18. “அழிவிலாதன், பரமன்; அவனே புருஷோத்தமன்”, என உலகிலும், வேதங்களிலும் ஓதப்படுபவன்.

19. குணங்கள் செய்யும் மாயங்களைக் கடந்து, எவனொருவன் பரமனை இவ்வாறு அறிகிறானோ, அவனே எல்லாம் அறிந்தவனாகிறான். இவ் உண்மையினை அறிய முயல்வதே மனிதப் பிறவியின் நோக்கமாகும்.

ஜீவன் அடையும் வெவ்வேறு நிலைகளை இவ்வாறாக பகுக்கலாம்:

குணங்கள் கொண்டது : ஜீவன்

குணங்கள் நீங்கிய ஜீவன் : ஜீவன் முக்தன்

ஜீவன் முக்தன் -> சகுண பிரம்மம் அடைகிறான்

சகுண பிரம்மம் -> நிர்குண பிரம்மத்துள் அடங்கும்

இந்நிலைகளை அனுபவ அறிவில் அறிபவன் மெய்ஞானி. அவன் எப்போதும் பிரம்மமன்றி வேறொன்றும் காணான்.

20. இதுவரை படித்த சுலோகங்களை மனதில் நிறுத்தி தியானித்துத் தெளிவோர் ஞானியாவர். இக்கடமையெனும் யோக நெறியில் ஈடுபடுவோர் பிறந்த மனிதப் பிறவியின் கடன் நிறைவேறப் பெறுவர்.

பரமனின் உண்மையான தன்மையை எடுத்துரைப்பதே இந்த அத்தியாயத்தின் நோக்கமாகும். அதை அநுபவத்தில் அறிந்து கொள்வதே மானிடப் பிறப்பின் கடனாகவும், இலக்காகவும், நோக்கமாகவும் இருக்க வேண்டும் என்பதே கீதாசாரியனின் அறிவுரையாம்.

ஓம் தத் சத்.
சர்வம் கிருஷ்ணார்ப்பணம்.