பகுத்தறிவு என்றால் பகுத்து அறியும் அறிவு. எதை பகுத்து அறிவது?
உடல் வேறு உயிர் வேறு என்று பகுத்து அறிவதே பகுத்தறிவாம்.

நம்மால் நம்ப இயலாதவற்றை ‘மூட நம்பிக்கை’ எனப்பெயரிட்டு, அம் மூட நம்பிக்கைகளை புறம் தள்ளுவதே – பகுத்தறிவு என்றொரு விளக்கத்தைத் தான் நாம் வெகுவாகப் பார்ப்பதுண்டு. பல்லாயிரம் ஆண்டுகளாக உருவான சமூகத்தில் நம்பிக்கைகள் பல்வேறு விதமாக உருவாகுவதும், அவை பலராலும் பல்வேறு விதத்திலும் தேவையில்லாமல் பின்பற்றப்பட்டும், நம்பப்பட்டும் வருவதும் இயல்பாகும். ஒரு நம்பிக்கை எப்படி உருவாகிறது? ஒருவர் அல்லது ஒன்றுக்கும் மேற்பட்ட நபர்களால் ‘இது நிஜம்’, என நம்பப்படுவதால். அதுவே நம்பிக்கைகளுக்கு வித்தாகி, இன்னும் பலராலும் பின்பற்றப்படுகிறது. பின்பற்றும் சிலருக்கு, அவர் பின்பற்றும் நம்பிக்கை பொய்த்திட அவர்களில் சிலர் அப்போது அதிலிருந்து வெளிவருவதும் உண்டு. அவர்களில் சிலருக்கு வேறொரு நம்பிக்கை, நம்பிக்கை ஊட்டிட, அந்த நம்பிக்கைக்கு மாறி விடுவதும் உண்டு. வேறு சிலரோ, கேள்விகள் ஏதும் எழுப்பாமல் குருட்டுத்தனமாக நம்பிக்கைகளைப் பின்பற்றுவதும் உண்டு. நம்பிக்கை என்ற பெயரால் அறியாமைக்கு ஆளாகவும் கூடாது. மூடநம்பிக்கை என்ற பெயரால் அறிவை ஒதுக்கவும் கூடாது. மூட நம்பிக்கையா, இல்லையா? கண்டு பிடிப்பது எப்படி? சமீபத்தில் ‘கண்ணாடி’ என்றொரு தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட பெண்மணி ஒருவர் அழகாகச் சொன்னார் – “எனக்கு எந்த நம்பிக்கை பயன் தருகிறதோ, அதுவே ‘என் நம்பிக்கை’. மற்றவர்கள் அதை மூடநம்பிக்கை என்றழைப்பதைப் பற்றி எனக்குக் கவலையில்லை” என்றார்.

அறிவியல் வளர்ச்சியினால் நிரூபிக்க அல்லது ஏற்றுக்கொள்ளப் பட இயலாதவற்றைத் தான் மூட நம்பிக்கையா இல்லையா என்றொரு விவாதத்திற்கு உட்படுத்த வேண்டியுள்ளது. அதற்கு, இங்கு, இன்றைய அறிவியல் வளர்ச்சிதான் அதற்கு அளவுகோலாக இருக்கிறது. பல அறிஞர்களும், அறிவியல் வளர்ச்சியால் இந்த மூடநம்பிக்கைகளுக்கு ஒரு முடிவினைத் தர முடியும் என்று நம்பினார்கள், நம்பிக்கொண்டும் இருக்கிறார்கள். அறிவியிலை எப்படியாவது முன்னேற்றி எல்லா கேள்விகளுக்கும் ஒரு பரமத்துவமான பதிலினைத் தர முயன்று வருகிறார்கள்.

அறிவியல் ஆராய்சியாளர்களின் தேடுதல் ஒருபுறம் இருக்க, பல்லாயிரம் ஆண்டுகளாக இந்திய மெய்ஞானிகள், இத்தேடுதல் எல்லாவற்றிக்குமான முடிவினை தம்முள்ளேயே கண்டும், களித்தும், அவற்றை ஆராதித்தும் ஆனந்தித்தும் வருவதினை யாரும் புறம் தள்ள இயலாது. அகக்கண்களால் அவர்கள் கண்டு சொன்ன உண்மைகளின் வீச்சு என்றென்றைக்கும் நிலையானதாகவும் இருப்பது. மாறாக, புறக் கண்கள் பார்க்கும் உலகத்தேயே எல்லாம் எனக்கொள்பவர்களின் அறிவின் உண்மையான வீச்சு எள்ளளவேயாம்.

தனோடும் நின்றோங்கும் றிவொன்றே தெய்வம் என்றோதி அறியீரொ?

அகத்தனை ஆய்ந்து அறியார், தூல உடலின் சூக்கும வடிவத்தினை கண்டு கொள்ளுவதில்லை. இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி எங்கெங்கோ அலைந்து பார்த்து ‘இல்லை’ என்று சொல்லி என்ன பயன்? உள்ளே ஆழ்ந்து உணர்ந்த மெய்ஞானிகள், சூக்கும வடிவங்களை உற்று நோக்கி, அவற்றின் ஆதார சக்தியினை அறிந்து சொன்னார்கள், தெளிந்து சொன்னார்கள்:

உள்ள தனைத்திலும் உள்ளொளி யாகி
ஒளிர்ந்திடும் ஆன்மாவே-இங்கு,
கொள்ளற் கரிய பிரமமென்றே மறை
கூவுதல் கேளீரோ?

அதுவே, இயற்கையின் சக்தி என்பதை ஞானிகள் உணர்ந்திருந்தனர். காற்று, மழை, இடி முதலியவற்றின் இயக்க சக்தியும் தெய்வீக சக்தி என்பதை அறிந்திருந்தனர். இயற்கையினை வணங்கிய பண்டைக் காலத்தை எள்ளி நகையாடி, அது அச்சத்தினால் ஏற்பட்டது எனக் காரணம் கற்பிக்கும் சிறு மதியார் சில கணமாவது தம்மை உணர்ந்திருப்பாரா? உணர்ந்திருந்தால்தான் உண்மை அறிந்திருப்பாரே. இறை மறுப்பினையே பகுத்தறிவு என்று வழங்கிக் கொண்டதிலேயே தெரியவில்லையா இவர்களது மடமையினை.

ஒன்று பிரமம் உளது உண்மை அஃதுன்
உணர்வெனும் வேதமெலாம்-என்றும்
ஒன்று பிரமம் உளதுண்மை அஃதுன்
உணர்வெனக் கொள்வாயே.

தமது உடலிலேயே சூக்கும ரூபமாய் அமைந்திருக்கும் பிரகிருதி குணங்களையும் குண காரியங்களையும் அறிந்து கொள்ள முடியாதவர்கள் ஜீவனின் உண்மையான வடிவினை எப்படிக் கண்டு கொள்ள இயலும்? அது பாரெங்கும் ஒளிர்விடும் பரமன், சேதனமாய் இருக்கும் தன்னில் ஒளிர்வதை எப்படிக் கண்டு இன்புற இயலும்?


(ஓவியம் நன்றி: ஹிமாலயன் அகாடமி)

சித்தினை அசித்துடன் இணைத்தாய் –
அங்கு சேரும் ஐம்பூதத்து வியனுலகமைத்தாய்.
அத்தனையுலகமும் வர்ணக்களஞ்சியமாகப்
பலபல நல்லழகுகள் சமைத்தாய்.

சித்தானது, உடலான அசித்துடன் இணைந்தது. அவ்உடலை ஆலயம் என்றார்கள். அந்த ஆலையம் அமையும் இடம் தலம் அல்லது க்ஷேத்திரம் எனலாம். சூக்கும சரீரங்களும், தூல சரீரங்களும் அபரப்பிரகிருதி க்ஷேத்திரம் எனப்படும். குண வயப்பட்ட ஜீவன், பரப்பிரகிருதி க்ஷேத்திரம் எனப்படும். உள்ளம் கடந்த இந்நிலைகளை, கட-உள் என்றார்கள் ஞானிகள். ‘நான் கடவுள்’ எனும் நிலையை அடைய, குணங்களைக் கடந்து, அவை மறைக்கும் உள்ளொளியினை உணர்ந்து, ஒன்றாய் இருக்கும் பரமனெனத் தெளிந்தார்கள் ஞானியர். குண அனுபவங்களுக்கு ஆன்மா சாட்சியாக நிற்கிறது என்பதை அனுபவத்தில் அறிந்து தெளிகிறார்கள் ஞானியர். ஐம்பூதங்களின் கலவையான உலகையும், அது சமைந்திருக்கும் அண்ட சராசரங்களையும் சிதாகாசத்தில் – தன் இதயக்குகையில் கண்டு ஆனந்தக் களிப்படைவதுதான் பாரதி பாடும் “எத்தனைகோடி இன்பம்!” அன்றோ!