மாமல்லபுரத்துக் கடற்கரைச் சிற்பங்களுள் அர்ஜூனன் தவநிலையைக் காட்டும் சிற்பம் மிகவும் புகழ் பெற்றது. அத்தனை அத்தனை உருவங்களைத் தாங்கி நிற்கும் அச்சிற்பத்தின் நடுநாயகமாக, அர்ஜூனனார் விலா எலும்புகள் தெரிய, இருகை தூக்கி, ஒற்றைக்காலில் நின்றவாறு இருக்கும் தவக்கோலத்தை துல்லியமாய் அச்சிற்பத்தில் இழைத்திருப்பார்கள் பல்லவர்கள். கண்ணுக்கு விருந்தான இச்சிற்பத்தோடு காதுக்கு விருந்தான கவிநயத்தினை சற்றே இங்கு பருகலாமா! வில்லிபுத்தூரார் இயற்றிய வில்லிபாரதக் காப்பியத்தோடு.

தமிழ்த்தாத்தா உ.வே.சா அவர்கள் வில்லி பாரதத்தின் சந்த நயத்தை மிகவும் சிலாகித்து “அந்நூலின் நடையிலே ஒரு தனியான கம்பீரம் உள்ளது. இடத்துக்கேற்ற சந்தங்கள் அதில் மிக அழகாக அமைந்திருக்கின்றன. குதிரையின் கதியொலியும், தேரின் கடகடவோசையும் யானையின் முழக்கமும் அந்தச் சந்தங்களிலேயே ஒலிக்கும்.” என்பார்.

“அர்ஜூனன் தவநிலை” என்று ஆசிரியர் தலைப்பிட்ட பகுதியில் இருந்து:

ஆசில் நான்மறைப்படியும், எண் இல் கோடி ஆகமத்தின்
படியும், எழுத்து ஐந்தும் கூறி,
பூசினான் வடிவம் எலாம் விபூதியால்; அப் பூதியினைப் புரிந்த
சடைப் புறத்தே சேர்த்தான்;
‘தேசினால், அப் பொருப்பின் சிகரம் மேவும் சிவன் இவனே
போலும்!’ எனத் தேவர் எல்லாம்
பேசினார்; வரி சிலைக் கை விசயன் பூண்ட பெருந் தவத்தின்
நிலை சிலர்க்குப் பேசலாமோ?
-வில்லி பாரதம்

சி வா ய ந ம எனும் ஐந்தெழுத்து மந்திரத்தைச் செப்பி இருந்தனன்.
அபாயம் இல்லை என அறிந்தோதும் அர்ஜூனன், பரகதி பெற
உபாயம் இதுவே என ஓதினான்.
ஓலமறைகள் ஒன்றென ஒலித்திடும் ஐஞ்தெழுத்தை நெஞ்செழுத்தாய்க் கொண்டனன்.

அர்ஜூனனின் தவஒளியினைக் கண்ட தேவரெல்லாம் – கயிலாயம் மேவும் பெம்மான் சிவனே இவன் என்று பேசினராம். அப்படிப்பட்ட, அர்ஜூனனின் தவக்கோலம் எப்படியெல்லாம் இருந்ததாம்?

ஒரு தாளின்மிசை நின்று, நின்ற தாளின் ஊருவின்மேல் ஒரு
தாளை ஊன்றி, ஒன்றும்
கருதாமல், மனம் அடக்கி, விசும்பின் ஓடும் கதிரவனைக் கவர்
வான்போல் கரங்கள் நீட்டி,
இரு தாரை நெடுந் தடங் கண் இமையாது, ஓர் ஆயிரம் கதிரும்
தாமரைப் போது என்ன நோக்கி,
நிருதாதியரில், மனுவாய்த் தவம் செய்வாரில், நிகர் இவனுக்கு
ஆர்கொல்
?’ என, நிலைபெற்றானே.

நிலத்தின் தொடர்பினை ஒற்றைக் காலோடு நிறுத்திடவே ஒற்றைக் காலில் நின்றனன் போலும். நிலமகளும் அக்காலைத்தாங்க, அவ்வாறு நின்றகாலின் தொடையில் இன்னொரு காலை ஊன்றினனாம். பரமனைத் தவிர வேறொன்றும் நினையாது, தன்னிரு கரத்தையும் கதிரவனைக் காட்டி விரித்திட்டானாம்.
இவ்வாறு தவம் செய்யும் “இவனுக்கு நிகர் யாருமில்லை” என்னும் நிலை பெற்றனன்.

கருந் துறுகல் எனக் கருதி, பிடியும், கன்றும், களிற்றினமும்,
உடன் உரிஞ்ச, கறையான் ஏறிப்
பொருந்தும் முழைப் புற்று அது எனப் புயங்கம் ஊரங்
கொடிகள் மரன் என்று பாங்கே சுற்ற,
பரிந்து, வெயில் நாள், மழை நாள், பனி நாள், என்று பாராமல்
நெடுங்காலம் பயின்றான்; மண்ணில்
அருந் தவம் முன் புரிந்தோரில் இவனைப்போல் மற்று ஆர்
புரிந்தார், சிவசிவ என்று
? அரியவாறே!

கருஞ்சிலை போலவே கடுந்தவம் புரியும் விஜயனைக் கல்லென்றே கருதின போலும்! அவனருகே வந்த யானைக்கூட்டங்கள், தம்முடலை அவன் மேல் பொருத்தி உராய்ந்தன!
அது மட்டுமா? கரையான்கள் ஏறி தங்குதலால் ஏற்பட்ட துளைகளைப் புற்றெனக் கருதி பாம்புகளும் அவன் மேல் ஊர்ந்தன. பூங்கொடிகள் மரமென்று நினைத்து அவனைச் சுற்றி வளைத்தன.
எக்காலமாயினும், வேற்றுமை ஏதும் பாராட்டாமல், தான் கொண்டதே குறியெனக் கருதி மண்ணில் பெருந்தவம் புரிந்தனன் பாண்டுவின் மைந்தன்.

“சிவ சிவ” என விடாமல் பயிலும் இவன் போல் மண்ணில் வேறு யார் புரிந்தார் அருந்தவம் என்கிறார் வில்லிபுத்தூரார்.

இவ்வாறு ஈசனை நோக்கித் தவம் புரியும் விஜயனைப்பற்றி தோழியர் மூலமாக அறிந்த அம்பிகை, சிவனிடம் அதைப்பற்றி வினவ, அதற்கு சிவன்:

ஆலம் உண்டு அமுதம் பொழிதரு நெடுங் கண் அம்பிகை
அருள் மொழி கேட்டு,
நீலம் உண்டு இருண்ட கண்டனும், இரங்கி, ‘நிரை வளைச்
செங் கையாய்! நெடிது
காலம் உண்டு; அருள் கூர் அறத்தின் மைந்தனுக்கும்
காற்றின் மைந்தனுக்கும் நேர் இளையான்;
ஞாலம் உண்டவனுக்கு உயிர் எனச் சிறந்தோன்; “நரன்”
எனும் நாமமும் படைத்தோன்;

தருமனுக்கும் பீமனுக்கும் இளையோனானும், ஞாலம் உண்ட மாலவனுக்கு உற்ற நண்பனுமான பார்த்தனன், நம்மை நோக்கி நெடுங்காலம் தவம் புரிவதை அறிவோம் என்றார்.

பருகு நீர் துறந்து, காற்றும் வெவ் வெயிலும்
பாதபங்களின் சினை உதிர்ந்த
சருகுமே ஒழிய, காய் கனி கிழங்கும் தான் இனிது
அருந்துதல் தவிர்ந்தான்
உருகு மா மனத்தை நாம் உவந்து இருத்தற்கு உறைபதி
ஆக்கி, நம்மிடத்தே
செருகினான், உணர்வை; யாவரே, இவன்போல் செய் தவம்
சிறந்தவர்?’ என்றான்.

சிறந்த தவத்தை இயற்றும் அர்ஜூனன், தனது இதயக் கமலத்தை – சிவன் விரும்பி வந்து வீற்றிருக்க ஏற்றதொரு இடமாய்ச் செய்தனன். ஆகையால், “நம்மேல் தனது உணர்வைச் செலுத்தி இருக்கும் இவன் போல் யார் செய்தார் தவம்” என்றார் சிவன்.

———-
இப்படியாக வில்லிபாரதத்தில் அர்ஜூனனின் தவக்கோலமும் அதன் சிறப்பும் விவரிக்கப்படுகிறது.
தன்னை அறியும் தவமே பெரிதென்று தரணியில் தவம் புரிவாரெல்லாம் சிவனை அறிவார், சிவனே ஆவார்.