எண்ணம் அல்லது சிந்தனை எப்போதுமே அறிவு சார்ந்த செயல்பாட்டாகவே கருதப்பட்டது வந்தாலும், அப்படி இல்லாமால் இருப்பதும் கண்கூடு.  எண்ணம் என்பது எல்லாவற்றிற்கும் ஆதாரம், ஆவதும் அதனாலே, அழிவதும் அதனாலே என்பாருண்டு. எண்ணம் என்பது அன்றாட இயல்பான செயல்பாடுகளை விளைவிக்கும் பொழுது, அவற்றை ஒரு பொருட்டாகக் கூட நாம் கொள்ளுவதில்லை. It’s mostly taken for granted. அதே எண்ணம் சற்றே எதிர்பாராத விளைவினைத் தரும்கால், அந்த எண்ணத்திற்குப் புதியதோர் பரிணாமத்தினைத் தருகிறோம். சிந்தனைகள் “உரத்த சிந்தனை”, “உயர்ந்த எண்ணம்” என்றெல்லாம் பெயர் பெறுகிறது. ஒரு சிலர் சிந்தனைவாதிகள் என்றும் சிந்தனை ஊற்று என்றும் கொண்டாடப் படுகிறார்கள்.மாணிக்கவாசகர் பெருமான், “சிந்தனைக்குள் தேனாக ஊற்றெடுத்தது” என்பார்.

கறந்த பால் கன்னலொடு நெய்கலந்தாற் போலச்

சிறந்து அடியார் சிந்தனையுள் தேன்ஊறி நின்று

பிறந்த பிறப்பு அறுக்கும் எங்கள் பெருமான்

அடியவர் மனதில் தேனாக ஊறி நின்றானாம் பிறப்பை அறுக்கும் “பிறவா யாக்கைப் பெருமான்”.

தேற்றனே தேற்றத் தெளிவே என் சிந்தனை உள்

ஊற்றான உண்ணார் அமுதே உடையானே

தேற்றம்: கருத்து; தேற்றத் தெளிவு: கருத்து தெளிவித்திடும் அதன் சாறு.

இறுதியான முடிபாக ஒரு கருத்தானது நிறுவப்பட்டு இருக்குமேயானால், அந்த கருத்தின் சாறாகவும், அக்கருத்தாகவும் உறையும் எம்பெருமான், அக்கருத்தின் பயனான தெளிவாகவும் இருக்கிறானாம். அப்படிப்பட்ட சிந்தனை அல்லவோ உரத்த சிந்தனை!. எல்லா எண்ணக் குழப்பங்களுக்கும் இறுதியான முடிபாக, இனி ஏதும் விவாதிப்பதற்கில்லை என குன்றிடை விளக்காய் விளங்கி எல்லாக் கலக்கங்களையும் அறுத்துத் தள்ளுகிறான். அப்படிப்பட்ட நிலையில் கிடைக்கும் தெளிவானது, தீர்க்கமான தெளிவாக நிலைக்கப்பெறுகிறது. மாணிக்க வாசகர் பெருமான், மீண்டும் “சிந்தனைக்குள் ஊற்றாக” சிவபெருமானைக் குறிப்பிடுகிறார். இம்முறையும் உண்பதற்கு உகந்ததான ஒன்றுடன் ஒப்பிடுகிறார். அதுவும் அரிதானதும் மிகவும் விரும்பத்தக்கதுமான அமுதுடன் ஒப்பிடுகிறார். மனிதப்பிறவியின் அடிப்படைத் தேவையான உணவோடு இயைந்து அதுவாகவே சிந்தனைக்குள் ஊறிட, வேறென்ன வேறென்ன வேண்டும்? சிவனவன் சிந்தனையுள் நின்றதனால், அவனருளாலே, அவன் தாள் வணங்கி, சிந்தை மகிழ சிவபுராணம் சொன்னார் மாணிக்க வாசகர்.

சிந்தனைக்குள் வற்றா ஊற்றாக, அமுத சுரபியாகத் திகழுமுன், தன் சிந்தையுட் புகுந்ததையும், பூங்கழல் காட்டியதையும் சொல்கையில்:

தெருளிடத் தடியார் சிந்தையுட் புகுந்த செல்வமே சிவபெருமானே!

….

பூசனை உகந்தென் சிந்தையுட் புகுந்து பூங்கழல் காட்டிய பொருளே!

தேசுடை விளக்கே! செழுஞ்சுடர் மூர்த்தீ! செல்வமே! சிவபெருமானே!

இருளெனக் கிடந்த மனத்தில், ஒளி பொருந்திய விளக்காய் எழுந்தமையால், செழுஞ்சுடர் மூர்த்தியாய் விளங்கினான் பூசனைக்கு உகந்த ஈசன். விளக்கானது இன்னொருவரின் ஒளியினைப் பிரதிபலிக்காமல், தானக ஒளி தரும் கருவி.  தானிருந்த இடத்தின் இருளை அகற்றி, ஒளியைப் பெருக்கி, எல்லா இடத்திலும் வியாபித்து என்றென்றும் இருக்கிறது.

பால்நினைத் தூட்டும் தாயினுஞ்சாலப் பரிந்துநீ பாவியே னுடைய

ஊனினை உருக்கி உள்ளொளி பெருக்கி உலப்பிலா ஆனந்த மாய

தானாகச் சிந்தையில் வந்து புகுந்த ஈசன், அத்தோடு நில்லாமல், தாயைக் காட்டிலும் மிகுதியான பரிவோடு உள்ளொளியினைப் பெருக்கினானாம்.
அதனால் விளைந்த குறைவிலா ஆனந்தத்தினை என்னென்று சொல்வது! கைவிளக்கொன்றினால், இருள் அகல்வது இயற்கையன்றோ!

அல்லது, இயற்கையான நிகழ்வுகளை ஒரு பொருட்டாகக் கொள்ளாததனால், அவை அன்னியப்பட்டுப் போனதோ!?

வாட்டம் இல்லா மாணிக்க வாசக! நின் வாசகத்தைக்
கேட்டபொழுது அங்கிருந்த கீழ்ப்பறவைச் சாதிகளும்
வேட்டமுறும் பொல்லா விலங்குகளும் மெஞ்ஞான
நாட்டமுறும் எனில் இங்கு நானடைதல் வியப்பன்றே!
– இராமலிங்க வள்ளலார்.