பகவத் கீதையானது மகாபாரத்தில் பிற்காலத்து இடைச்சொருகல் என்று வாதிடுபவர்கள் மகாபாரதத்து நிகழ்சிகள் எப்படி கீதையின் சாரத்தை பிரதிபலிக்கின்றன என்று அறியாமலே இருக்கிறார்கள்.

அதற்கான ஒரு சான்றாக ஒரு மகாபாரதத்து நிகழ்வினை இங்கே பார்ப்போம். சமீபத்தில் விஜய் டி.வி மகாபாரதத்தொடரில் இக்காட்சி காட்டப்பட்டது.

கண்ண பெருமான் பாண்டவர் தரப்பில் இருந்து தூதுவனாக அஸ்தினாபுரத்து அரண்மணையில் நுழைகிறான். மாபாரதப் போர் நிகழாமல் தடுக்க இரு தரப்பிலும் முயற்சிக்கிறார்கள்.

சமாதானப் பேச்சுவார்த்தையின் முடிவில் கண்ணன் பாண்டவர்களுக்கு ஐந்து கிராமங்களையாவது தர வேண்டும் என்கிற கோரிக்கையை வைக்கிறான். சகுனியும் துரியோதனும் ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்கள். துரியோதனன், ஐந்து கிராமங்கள் என்ன, ஐந்து ஊசி முனை நிலம் கூடத் தர முடியாது என்று மறுக்கிறான்.

சமாதானப் பேச்சுவார்த்தை தோல்வி அடைகையில் போர் நிச்சயம் என்றாகிறது. போரில் கண்ணன் பாண்டவர் தரப்பில் போர்களம் புகுந்து விடக்கூடாது என்கிற சகுனியின் அறிவுரையின் பேரில், கண்ணனை கைது செய்யத் துணிகிறான் துரியோதனன். கண்ணனை இரும்புச் சங்கிலியால் பிணைக்க வீரர்களை ஆணியிடுகிறான். வீரர்கள் அச்சங்கிலியைத் தூக்கிக்கொண்டு அரசவைக்குள்ளே நுழைகிறார்கள். ஆனால் கண்ணனைப் பார்த்த உடனே அவர்களால் அச்சங்கிலியைத் தூக்க முடியாமல் கீழே விட்டு விடுகிறார்கள். அவர்களால் அதை இம்மியளவும் அசைக்கவும் முடியவில்லை.

அதைப்பார்த்து கண்ணன் துரியோதனனிடம் உரைக்கிறான். “துரியோதானா, உன் பாவச்சுமைகளை அவ்வீரர்களால் சுமக்க இயலாது. உன்னால் மட்டுமே அச்சங்கிலியை அசைக்கவும் முடியும். நீயே சங்கிலியைக் கொண்டு வந்து என்னை பிணைப்பாய்” என்கிறான். வியப்பில் துரியோதனன், சங்கிலியின் அருகில் சென்று அதை மெள்ள அசைத்துப் பார்க்கிறான். அதை எளிதாக அவனால் தூக்கவும் முடிகிறது. “ஆகா, என் பலத்தைப் பார். இத்தனை வீரர்களாலும் தூக்க இயலாத சங்கிலியை யான் ஒருவனே தூக்கி உன்னை பிணைப்பேன் பார்” என்ற அகந்தையில் அச்சங்கிலியால் கண்ணனைக் கட்டி, அவனைச் சிறையில் அடைக்கின்றான்.

இந்தக் கதையில் இருந்து நாம் எடுத்துக் கொள்ள வேண்டிய செய்தி என்ன?

துரியோதனன் போலத்தான் கிட்டத்தட்ட நாம் அன்றாடம் நடந்து கொள்கிறோம்.

எந்த ஒரு செயலைச் செய்தாலும், ஆகா இது என்னால் செய்யப்பட்டது என்கிற இறுமாப்பினைக் கொள்கிறோம்.  ஆனால் ஒரு செயலை ஒருவரால் செய்ய இயலாமற் செய்வதும், செய்ய இயலச் செய்வதும் அவன் செயல் என்பதை அறியாமலே. அத்தனை வீரர்கள் இரவு பகலாக உழைத்து மிகவும் கடினமான, இந்திரனின் ஐராவதத்தாலும் முறிக்க முடியாத மிக உறுதியான இரும்புச் சங்கிலியைச் செய்ய இயன்றது என்றால் அதுவும் அவன் செயல் அன்றோ? அதனை அரசவை வரை எடுத்து வர வீரர்களால் இயன்றதும் அவன் செயல் அன்றோ? அவன் நினைத்திருந்தால் இச்செயல் எல்லாம் முதலிலேயே முடியாமல் போயிருக்கும் அல்லவா?

அரசவை வரை எடுத்துவரச் செய்து பின் வீரர்களால் தீடீரென அதைச் சுமக்க இயலாமற் செய்ததன் காரணம் என்ன? துரியோதனன் இன்னும் ஒரு பாவம் செய்யத் துணிகிறான் என்றால் அதற்குப் பொறுப்பாளி அவன் மட்டுமே என்று அவனைத் தனிமைப் படுத்துவதா? இல்லை. துரியோயதனனுக்கு தன் தவறுகளை உணர இன்னுமோர் வாய்ப்பு தரப்படுகிறது. “வீரர்களால் அசைக்க முடியாமற் போன சங்கிலியை தான் அசைக்க இயன்றதக்கு காரணம் தான் அல்ல! ” என்று உணர்வதற்காக ஓர் நடமுறை வாய்ப்பு தரப்பட்டது. மூடனான அவனால் அவ்வாய்ப்பை பயன் படுத்த இயலாமற் போனது.

அன்றாடம் நமக்கும் இதுபோன்று வாய்ப்புகள் பலவும் வரவர துரியோதனன் போலவே மூடனாக இருப்பதும் அல்லது கிடைத்தை வாய்ப்பை பயன்படுத்திக் கொள்வதும் நம் கையில் தானே உள்ளது!