10. கொண்டல் வண்ணனைக் கோவலனாய் வெண்ணெய் 

உண்டவாயன் என் உள்ளம் கவர்ந்தானை

அண்டர்கோன் அணி அரங்கன் என் அமுதினை

கண்ட கண்கள் மற்றொன்றினைக் காணாதே!

திருபாணழ்வார் அருளிச் செய்தது. “அமலனாதி பிரான்” எனத் தொடங்கும் பத்து பாசுரங்களில் பத்தாவது ஆகும் இது. இதற்கு முந்தைய ஒன்பது பாசுரங்களும் ஆழ்வார் தனது ஞான திருஷ்டியில் அருளியதாகவும், பத்தாவது பாசுரமோ, திருவரங்கனை நேரடியாக தரிசித்தபின் அருளியதாக பெரியோர்கள் சொல்வார்கள்.

பாணர் குலத்தில் பிறந்த இவருக்கு இசை எனபது இயற்கை அன்றோ! பத்து பாசுரங்களில் பரந்தாமன் மேனி அழகை ஒவ்வொன்றாகப் பாடி இருப்பது அருமை!


1: திருவடி அழகு

அமலன், ஆதிபிரான், அடியார்க்கு என்னை ஆட்படுத்த

விமலன், விண்ணவர்கோன், விரையார்பொழில் வேங்கடவன்

நிமலன், நின்மலன், நீதிவானவன், நீள்மதில் அரங்கத்தம்மான் திருக்

கமல பாதம் வந்து என் கண்ணின் உள்ளன ஒக்கின்றதே

உயர்ந்த மதில்கள் உடைய அரங்கநாதன் உறையும் திருவரங்கத்திலேயே தானும் இருந்தாலும் அரங்கனைத் தன் மனக்கண்ணால் மட்டுமே கண்டு வந்த ஆழவாரின் முதல் பாசுரம். வெளியில் இருந்தே பார்த்தாலோ என்னவோ, மதில்கள் சூழ்ந்ததே திருவரங்கத்தை விளிக்கும் பெயரடையாய்(adjective) வந்தது!

2: ஆடை அழகு

உவந்த உள்ளத்தனாய் உலகம் அளந்து அண்டமுற

நிவந்த நீள்முடியன், அன்று நேர்ந்த நிசாசரரைக்

கவர்ந்த வெங்கணைக் காகுத்தன், கடியார் பொழில் அரங்கத்தம்மான் அரைச்

சிவந்த ஆடையின் மேல் சென்றதாம் என் சிந்தையே

திருவடிக்கு அடுத்து அரைக்கு அசைத்த செவ்வாடையில் தன்சிந்தையைப் பறி கொடுத்தாராம் ஆழ்வார்.

3. நாபிக்கமல அழகு

மந்திபாய் வடவேங்கட மாமலை வானவர்கள்

சந்திசெய்ய நின்றான், அரங்கத்(து) அரவின் அணையான்

அந்திபோல் நிறத்தாடையும், அதன்மேல் அயனைப் படைத்ததோர் எழில்

உந்தி மேலதன்றோ அடியேன் உள்ளத்(து) இன்னுயிரே

அரையைத் தாண்டி அயனைக் கமலத்தில் தாங்கி நிற்கும் எழிலான உந்தியில் தன்னுடைய உள்ளத்தைப் பதித்தாராம்.

4. அரை ஞாண் கயிறு

சதுரமாமதிள் சூழ் இலங்கைக்கு இறைவன் தலை பத்தும்

உதிரவோட்டி ஓர் வெங்கணை உய்த்தவன், ஓத வண்ணன்

மதுர மா வண்டு பாட, மாமயிலாட, அரங்கத்தம்மான்

திருவயிற்று உதர பந்தம் என் உள்ளத்துள் நின்று உலாகின்றதே

அடுத்தாற்போல் அரங்கனின் அரையை அலங்கரித்த அரை ஞாண் கயிறானது அவரது மனத்தில் நிலைத்து உலாவியதெனச் சொல்கிறார்.

5. திருமார்பழகு

பாரமாய பழவினை பற்றறுத்து என்னைத்தன்

வாரமாக்கி வைத்தான் வைத்ததன்றி என்னுள் புகுந்தான்

கோரமாதவம் செய்தனன் கொல்? அறியேன் அரங்கத்தம்மான் திரு

ஆரமார்பதன்றோ அடியேனை ஆட்கொண்டதே

அடுத்து ஆழ்வார் சிந்தையுள் புகுந்தாட்கொண்டது அரங்கனின் அழகு மார்பு, திருவும் (இலக்குமியும்), முத்து மாலைகளும் அலங்கரிக்கும் மார்பினை “திருஆர”மார்பென்றார்!

6. திருக்கழுத்தழகு

துண்ட வெண் பிறையன் துயர் தீர்த்தவன், அஞ்சிறைய

வண்டுவாழ் பொழில் சூழ் அரங்கநகர் மேய அப்பன்

அண்ட பகிரண்டத்து ஒருமாநிலம் எழுமால் வரை முற்றும்

உண்ட கண்டம் கண்டீர் அடியேனை உய்யக் கொண்டதே

தொடர்ந்து அரங்கன் அழகைப் பருகும் ஆழ்வார் அரங்கனின் கண்டமானது தான்  உய்ய ஒரு வழி வகுத்ததெனச் சொல்கிறார்.

7. திருவாயழகு

கையினார் சுரிசங்கு அனல் ஆழியார் நீள்வரை போல்

மெய்யனார், துளப விரையார், கமழ்நீள்முடி எம்

ஐயனார், அணிஅரங்கனார், அரவினணைமிசை மேய மாயனார்

செய்யவாய் ஐயோ என்னைச் சிந்தை கவர்ந்ததுவே

கழுத்தைத் தாண்டி முகத்தை அடைந்த ஆழ்வார் அங்கு முதலிற் கண்டது அரங்கனின் செவ்வாயினை. அதுவே முதலில் அவரது சிந்தைக் கவர்ந்தது போலும்.

8. கண்ணழகு

பரியனாகி வந்த அவுணன் உடல்கீண்ட அமரர்க்கு

அரிய ஆதிபிரான் அரங்கத்தமலன் முகத்து

கரியவாகிப், புடைபரந்து, மிளிர்ந்து, செவ்வரியோடி நீண்ட அப்

பெரியவாய கண்கள் என்னைப் பேதமை செய்தனவே

திருமுகத்தில் அடுத்து பளிச்சிடும் கண்களைக் கண்டு அவை தன்னை பேதமை செய்ததாகச் சொல்கிறார்.

9.முழு மேனி எழில்

ஆலமா மரத்தின் இலைமேல் ஒரு பாலகனாய்

ஞாலமேழும் உண்டான் அரங்கத்தரவின் அணையான்

கோலமா மணியாரமும் முத்துத் தாமமும் முடிவில்லதோர் எழில்

நீலமேனி ஐயோ! நிறை கொண்டது என் நெஞ்சினையே

இப்படியாக மேனி முழுதையும் தனது மனத்தில் நிறைத்து விட்டு, இனி அந்நெஞ்சில் வேறேதும் நுழைய இடமில்லாதபடி எல்லாமும் அரங்கனே என நிறைந்து விட்டதென நிறைவடைகிறார்! அதன் பின் மற்றொன்றினைக் காண எப்படி முடியும்!