இன்று காலை கண் விழிக்கையில் மனதில் தோன்றிய வரிகள். மால் மருகன் முருகனை எண்ணி மருகும் பாடல் வரிகள்.

எடுப்பு

விடலைப் பருவமடி – அறியா விடலைப் பருவமடி!

தொடுப்பு

வெகுண்டு விரைவாய் துடிக்குது மனது

வேட்கை அதனில் புதிதாய் புகுந்தது

விடலைப் பருவமடி – வெண்ணிலா

விடலைப் பருவமடி – அறியா

விடலைப் பருவமடி!

சரணம் 1

சுடலைப் பொடி பூசும் சுந்தரேசன் மகன்

சுகுணகுமாரன் சுந்தர ரூபனை நாடி

இகபரசுகம் பெறவே துடிக்கும்

விடலைப் பருவமடி – அறியா

விடலைப் பருவமடி!

சரணம் 2

விரைந்தெனைக் காண வேலவன் வருவான்

பரிவோடு என்னை பார்த்திட வருவான்

பாலகன் இவனை வாரி அணைத்து

ஆவலைத் தீர்க்க அன்பிலே தவிக்கும்

விடலைப் பருவமடி – அறியா

விடலைப் பருவமடி!

முடிப்பு

அறிந்தது யாவும் அகந்தையை தூண்டுது

அங்கம் எங்கும் அவித்தையே மிஞ்சுது

அறிந்தது யாவையும் அடியோடு மறக்க

அழகன் முருகனைக் காணத் துடிக்கும்

விடலைப் பருவமடி – அறியா

விடலைப் பருவமடி!