ஆதி சங்கரரின் சமஸ்கிருத நூல்களில் ஒன்று ஆத்ம போதம்.

இந்நூலை ரமண மகரிஷி தமிழில் வெண்பாக்களாக வழங்கியுள்ளார்.  இதனை மொழி பெயர்ப்பு என்று சொல்ல முடியாது,  ஏனெனில்…  இந்நூல் உருவான கதையை நீங்களே கேளுங்களேன்:

ஒருநாள் ரமணருக்கு தபாலில் இரண்டு புத்தகங்கள் வந்திருந்தன.  ஒன்று சமஸ்கிருத மூல ஆத்ம போதம். மற்றொன்று ஆத்ம போதத்தின் தமிழ் மொழி பெயர்ப்பு. சமஸ்கிருதம் சற்றே தெரிந்த ஒரு இஸ்லாமிய தமிழ் அறிஞர்தான் மொழி பெயர்த்திருந்தார்!

ரமணர் அந்த புத்தகங்களை பார்த்துவிட்டு நூலகத்தில் வைக்கச்சொல்லி விட்டார். பின்னர் ஒருநாள் திடீரென தனது உதவியாளரை அழைத்து சமஸ்கிருத மூல ஆத்ம போதம் நூலைக் கொண்டு வரச் சொல்லி, அதை கொஞ்சம் படித்துப் பார்த்தார்.

பின்னர் முதல் இரண்டு சுலோகங்களை வெண்பாக்களாய் எழுதி, அன்பர் ஒருவரிடம் காட்டினார். அவர் அந்த வெண்பாக்களை படித்து விட்டு, மீதமுள்ள 66 சுலோகங்களயும் வெண்பாக்களாக ரமணர் அருளினால் நன்றாக இருக்குமே என்று தன் ஆவலை வெளிப்படித்தினார். அதற்கு ரமணர் ‘ஆமாம், ஆமாம், எதற்கு இதெல்லாம்?’ என்று மட்டுமே சொன்னார்.

பின்னர் இரண்டு நாள் கழித்து இன்னமும் சில சுலோகங்களையும் பாக்களாக எழுதி இருந்தார் ரமணர்.  “எழுதாமல் அமைதியாய் இருக்கலாம் என்றால் இயலவில்லை. ஒன்றுக்கு பின்னால் இன்னொன்று – என தானே ஒவ்வொரு வெண்பாவாக வெளியே வந்து என் முன் நிற்பது போல இருக்கிறது” என்றாராம்!. இப்படிய, சில தினங்களில் முழு நூலின் 68 சுலோகங்களையும் 68 வெண்பாக்களாக எழுதி முடித்தார்.

இப்படித்தான் தமிழில் பாக்களாய் மலர்ந்தது ஆத்ம போதம். ரமணர் தானாகவே எழிதிய புத்தகங்கள் மிகக் குறைவு. அவரவது உள் உந்துதலால் நமக்காக மலர்ந்தது, நமக்கான அருளல்லவோ!

நூலில் இருந்து சில பாக்களும், அதன் விரிவுரைகளும்:

பா 18.

உடல்கருவி உள்ளம் ஓதும்புத்தி மாயை

விடவேறாவட்றின் விருத்தி – யுடனே

எவைக்குமே சாட்சியாம், என்றும் ஆன்மாவை

அவைக்கரசன் போல அறி.

உன் ஆன்மா என்பதாவது – உன் உடலல்ல. உன்  அவையங்களும் அல்ல. உன் உள்ளமும் மனதும் கூட அல்ல. உன் அறிவும் அல்ல. பின் என்ன அது?

மேற்கூறிய எல்லாவற்றின் செயல்களையும் கவனித்துக் கொண்டு இருப்பது தான் ஆன்மா – அரசவையில் நடக்கும் ஒவ்வொரு செயலையும் கண்காணித்துக் கொண்டு இருக்கும் அரசன் போல.

அவைக்கு அரசன் போல, அவையங்களுக்கு அதிபதி ஆன்மா.

ஆனால் ஆன்மா வேறு, அவையங்கள் வேறு.

அவையில் மந்திரிகளும், ஏனைய ஆலோசகர்களும் இருந்தாலும், அரசன் மட்டும் ஒருவன். அவன் போல் அவையில் யாரும் இல்லை.

அது போல் ஆன்மா. ஆன்மா போல் நம்மிடம் மற்றொன்று இல்லை.

பா 19.

கருவிகள் இன்றொழில் காண்தவ விவேகி

கருத்தாண்போன்று ஆன்மாவைக் காண்பான் – துரிதமாய்

ஓடுமே கண்கண்டு உணர்வில் சந்திரனே

ஓடுகிறான் என்பதை யொத்து.

வானில் மேகங்களுக்கு நடுவே ஒளிந்து மறைந்து துரிதமாக சந்திரன் ஓடுவது போல தோற்றம் அளித்தாலும், வேகமாக ஓடுவது மேகங்களே.  ஆனால் இதை அறியாத குழந்தைப் பருவத்தினர் சந்திரன் தான் விளையாட்டு காட்டுவதாக நினைப்பர்.

அதுபோல மனதில் தோன்றும் எண்ணங்களும், உடலின் அவையங்களால் உணரப்படும் உணர்வுகளும் ஆன்மாவின் செயல்கள் என்று நினைப்பர், மாயையினால்.

பா 20:

ஞானஒளி ஆன்மாவை எண்ணி உடல்பொறிகண்

மனதாம் புத்திஇவை எண்ணுதமக் – காணாதொழில்

ஆற்றிடும் ஆதித்த னொளியான் மாக்கதொழில்

ஆற்றுவது போற்றிலும் அறி.

உடல், காணும் கருவியாம் கண், மனம், புத்தி ஆகியவை ஆன்மாவின் ஞான ஒளிதனைப் பெற்று தத்தம் செயல்களை நடத்துகின்றன.

இது எதுபோல என்றால் – ஆதித்தன் பகலில் ஒளிரும் போழுது, அதன் ஓளியின் கீழ் மனிதன் செயல்களைச் செய்வது போலவாகுமாம்.

உடலுக்கும் அதன் அவையங்களுக்கும், புத்திக்கும் ஆன்மாவின் ஞான ஒளி  குறையக் குறைய, செயல்கள் தீதில் முடியும்.  இதனால் ஆதவனாம் ஆன்மாவிற்கு ஏதும் பாதகம் இல்லை.  செயல்களின் விளைவை உடல்தான் பெறுகிறது.

பா 21:

தேகம் பொறிகடிகாழ் குணங்கள் வினைகள்

ஆகுமிவை தூய சச்சிதானமாவில் – மோகத்தாற்

கற்பிப்பார் சுத்த வானத்தின் நீலமுதற்

கற்பித்தால் போலக் கருது.

தேகம், அதன் அவையங்கள், அவற்றில் ஒளிரும் குணங்கள், செயல்களின் விளைவுகள் – இவை யாவுமே ஆன்மாவினால் என்று நினைப்பர்.  இது வானமானது நீல நிறத்திலானதொரு பொருள் என்று எண்ணுவதைப் போலாகும்.

வானம் நீலமாக தெரிந்தாலும் நீலம் வானத்தின் குணமல்ல. பூமியில் இருந்து நாம் பார்க்கும்போது சூரியனின் ஒளிக்கற்றைகள் நீல நிறத்தில் பிரிதலினால் வானம் நீலமாய் தெரிகிறது.  நம் எந்த ஒரு குணமும் ஆன்மாவின் குணமல்ல.

(பி.கு: வெண்பாக்கள் சீர்களாக அல்லாமல் பிரித்து தரப்பட்டுள்ளது. பிரித்தலினால் பொருளில் ஏதேனும் தவறிருந்தால் சுட்டிக்காட்டவும், நன்றி!)

அடுத்த பகுதி இங்கே…